95
95. உயிர்கட்கு உலகும், கருவி கரணங்களோடு கூடிய உடலும் அதுகொண்டு நுகரப்படும் பொருளும் நல்கித்
தனக்கு ஆளாக்கிக் கொள்வது இறைவன் அருட்செயலாகும். அதனையெண்ணிய வள்ளற் பெருமான், “சிவனே,
நினது அருட்செயலால் என்னையும் ஆளாக்கிக் கொள்வாயாயின், என்னின் நீங்காது ஒன்றியிருக்கும்
ஆணவத்துக்கு ஒடுங்கும் இடம் யாது? உரைத்தருள்க” என வேண்டுகின்றார்.
2062. கோளாக்கிக் கொள்ளுங் கொடியே னையுநினைக்கோர்
ஆளாக்கிக் கொள்ளற் சுமைவாயேல் - நீளாக்குஞ்
செங்கேச வேணிச் சிவனேஎன் ஆணவத்திற்
கெங்கே இடங்காண் இயம்பு.
உரை: திருமுடியில் சிவந்த சடையையுடைய சிவபிரானே, கொள்வது குறித்துத் தீது புரிந்து கொள்ளும் கொடியனாகிய என்னையும் நினக்கு ஆளாக்கிக் கொள்ளற்குத் திருவுள்ளம் கொள்வாயாயின், பிறவியை நீட்டிக்கும் என் ஆணவத்துக்கு இடம் யாதாம்? சொல்லுக. எ.று.
கேசம் என்றது ஈண்டு திருமுடிக்காயிற்று. 'கேச செவ்வேணி'யென மாறுக. வேணி - சடை. கங்கையின் செருக்கு ஒடுங்குதற்கும் பிறைத் திங்களின் சிறுமை நீங்குதற்கும் ஆதாரமாதலால், சிவனது வேணி சிறப்பிக்கப்படுகிறது. செருக்கும் சிறுமையும் சிவத்தின்கண் ஒடுங்குவது போல ஆணவமும் ஒடுங்கும் என்பது குறிப்பு. இஃது ஆணவத்திற்கு இடம் காட்டுவதாகும். பிறர்பால் உள்ள பொருளைக் கொள்ளற்கு விருப்பம் தோன்றியதும், அதனைக் கவர்தற்பொருட்டுத் தீமைசெய்து பின்னர்க் கைப்பற்றும் கொடுமையுடையேன் என்பாராய், “கோளாக்கிக் கொள்ளும் கொடியேன்” என்று கூறுகின்றார். கோள் - தீமை. சிவனைப் பற்றிய நினைவும் சொல்லும் செயலும் இடையறாது நெஞ்சில் நிலவுவது இறைவற்கு ஆளாகும் மனநிலையாம். அஃது அப் பெருமான் திருவருளால் நிகழ்தல் பற்றி, “நினக்கோர் ஆளாக்கிக் கொள்ளற்கு” அமைகின்றாய் என்று குறிக்கின்றாய். பிறவிப் பெருஞ்சுழியில் தான் கிடந்து வருந்துதற்கு ஏதுவாகிய ஆணவம், ஆளாகும்போது ஒளிமுன் இருள்போல நீங்குதலின், அதற்கு இடம் யாதாம் என்பார், “ஆணவத்திற் கெங்கே இடம்” என்று வினவுகின்றார். ஒளிக்கும் இருட்கும் ஒன்றே யிடம் என்றலின், ஆணவத்துக்கும் இடம் சிவமேயாதல் தெளிவாம். நீளாக்கும் - நீட்டும் என்னும் பொருட்டு.
இதனால், உயிர் இறையருளில் தோயுமிடத்து ஆணவமும் சேட்டை குன்றி ஒடுங்கும் என்று விளக்கியவாறு.
|