97

      97. இறைவனது திருவுள்ளம் எனக்கு அருள்புரிதல் வேண்டுமென எண்ணுமாயின் என் நெஞ்சின் நிலைமை வேறாய்விடும் என இறைவனிடம் வள்ளலார் தெரிவிக்கின்றார். அருளவேண்டுமென்று திருவுள்ளம் கொள்வதை யறியுமாயின், என்னை இறுக்கிக் கொண்டிருக்கும் துன்பமெல்லாம் என்னைவிட்டு உய்ந்தேமென்று ஓட்டங்கொள்ளும் ; அந்த ஓட்டத்தில் உடனோடும் வன்மையின்றி என் நெஞ்சம் பின்னிட்டு நின்றொழியும் என்பாராய் இப் பாட்டைப் பாடுகின்றார்.

2064.

     இண்டைச் சடையோய் எனக்கருள எண்ணுதியேல்
     தொண்டைப் பெறுமென் துயரெல்லாம் - சண்டைக்கிங்
     குய்ஞ்சே மெனஓடும் ஓட்டத்திற் கென்னுடைய
     நெஞ்சே பிறகிடுங்காண் நின்று.

உரை:

      இண்டை மாலையணிந்த சடையையுடைய சிவனே, எனக்கு அருள் புரியத் திருவுள்ளம் கொள்வாயானால், மிக்குப் பெருகித் தொண்டையை அடைக்கும் துயரமனைத்தும் திருவருட்கு மாறுபட்டுப் போராட அஞ்சி உய்ந்தோ மென்று என்னைவிட்டு ஓடும்; அந்த ஓட்டத்திற்கு என் நெஞ்சம் மாட்டாமல் பின்னிட்டு நின்றுவிடும். எ.று.

     இண்டை - இண்டைக்கொடி போல் தொடுக்கப்படும் பூமாலைவகை. இண்டை இண்டு எனவும் வழங்கும்; “மானோக்கும் இண்டிவர் ஈங்கை” (நற். 2) என்று சான்றோர் வழங்குவது காண்க. கழுத்தினுள் உணவு செல்லும் குழாய் தொண்டை; துக்கம் மிகுந்து பேசவிடாது தொண்டையை அடைக்கிறது என்ற வழக்குப்பற்றி, “தொண்டைப் பெறும் என் துயரெல்லாம்” என்று சொல்லுகின்றார். தொண்டைப் பெறும் என்றவிடத்துப் பகர மிகுதி “ஐகார வேற்றுமைத் திரிபு” (தொல். எழுத். தொகை. 15) துயரம் மிகுந்து சண்டைக்கு வந்ததுபோல் தொண்டையை அடைத்தலால், அத்துயரத்தின் நீக்கத்தைச் “சண்டைக்கு இங்கு உய்ஞ்சே மென ஓடும்” என்று உரைக்கின்றார். உய்ந்தே மென்பது உய்ஞ்சேமென வந்தது. “உய்ஞ்சிவர் போய்விடின் நாய்க் குகன் என்றெனை ஏசாரோ” (அயோத். குகப்) எனக் கம்பர் வழங்குவது காண்க. நெஞ்சமும் வருத்தத்துக்குள்ளாகாது மகிழ்ச்சிமிகும் என்பாராய் “ஓட்டத்திற்கு என்னுடைய நெஞ்சு பின்னிடுங்காண் நின்று” என இயம்புகின்றார்.

     இதனால், திருவருள் ஞானம் எய்தியபோது சிவத்தைக்கண்டு பேரின்பம் எய்துவதும், அந்நிலையில் உலகியல் துன்பங்கள் எரிமுன் பஞ்சுத் துய்போல் வெந்து கெடுவதும், நெஞ்சம் சிவஞானச் செந்நெறிக்கண் உறைத்து நிற்பதும் தெரிவித்தவாறு.