98

      98. நல்லார் கூட்டமும் தீயார் கூட்டமும் உலகில் இருக்கின்றன. நல்லாரினும் தீயவரினம் பெருகி மக்களை இனிது ஈர்க்கின்றது. காட்டக் காணும் இயல்பினால், என்னுயிர்க்குத் தீயவர் கூட்டத்தைக் கடைக் கண்ணாற் கூடக் காட்டாதே; உன்னை மனக்கண்ணிற் காணும் நல்லோர் கூட்டத்துக்கு என்னைக் காட்டி, “இவன் என்னுடைய அடியவன், ஏற்றுக் கொண்மின்” என உரைத்தருள்க என வள்ளலார் இறைவன்பால் இப்பாட்டால் முறையிடுகின்றார்.

2065.

     கண்ணா னிழுதைகள்பாற் காட்டிக் கொடுக்கிலெனை
     அண்ணா அருளுக் கழகன்றே - உண்ணாடு
     நின்னடியார் கூட்டத்தில் நீரிவனைச் சேர்த்திடுமின்
     என்னடியான் என்பாய் எடுத்து.

உரை:

     தலைவனே, உன்னுடைய கடைக்கண்ணால் அறிவிலாரிடத்து என்னைக் காட்டிக் கொடுத்தல் கூடாது; கொடுப்பாயாயின் அதனால் உன் திருவருட்கு அழகாகாது; உள்ளத்தே ஞானக்கண் கொண்டு உன்னை நாடுகின்ற மெய்யன்பர் கூட்டத்தில் இவன் என் அடியான்; இவனைச் சேர்த்துக் கொண்மின் என்று எடுத்து உரைத்தருள்க. எ.று.

     சிவன் “பரவுவாரையும் பழித்து இகழ்வாரையும் உடையார்” (வாழ்கொளி) என்று ஞானசம்ப்ந்தர் கூறுதலால், “பழித்திகழும் இழுதைகள் உளராதல் தெளியபடும். இழுதைகள் - அறிவில்லாதவர்கள். அவர்கள் பால் தன்னைக்காட்டிக் கொடுக்கவேண்டா; அவர்கள் அஞ்ஞானம் நல்கி என்னை அவ நெறியிற் செலுத்துவர்; அது நினது அருளுக்கும் அழகு செய்யாது என்றற்கு “இழுதைகள் பாற்காட்டிக் காட்டிக் கொடுக்கில் எனை அண்ணா அருளுக் கழகன்று” என்று இயம்புகின்றார். சிவபெருமான் இழுதைகளோடு உரையாடார்; ஆயினும் கடைக்கண்ணால் நோக்கினாற் போதும்; அவர்கள் பற்றிக் கொள்வர் என்ற குறிப்புத் தோன்ற, “கண்ணால்” என விதந்துரைக்கின்றார். உண்ணாடுதல் - ஞானக்கண் கொண்டு சிந்தையில் நோக்குதல். “சேர்ந்திடுமின்” என்ற போழ்தும், என்பாலுள்ள குற்றமும் குறையும் கண்டு சேர்க்காது விலக்கினும் விலக்குவாராதலின், என்னடியான் என்று எடுத்துரைத்தல் வேண்டும்; அவர்கள் என்னைத் தமது கூட்டத்திற் சேர்த்துக் கொள்ளற்கு ஏதுவாம் என்பது புலப்பட, “சேர்ந்திடுமின்” என்று சொல்லியமையாது “என்னடியான் என்பாய் எடுத்து” என உரைக்கின்றார்.

     இதனால், அஞ்ஞானம் காட்டும் அல்லாதார் கூட்டத்திற் புகுத்தாது நல்லடியார் கூட்டத்தில் சேர்த்து ஞானமும் நல்லொழுக்கமும் பெறவருளுக என வேண்டிக்கொண்டவாறு.