99
99. திருமால், முருகன், கணபதி, காளி எனத் தேவர் பலரை வாழ் முதலாகக் கொண்டு போற்றப்படும்
சமயங்கள் வைணவம், கௌமாரம், காணபத்தியம், சாக்தம் என்று கொண்டு நிலவுவதை வள்ளலார் காண்கின்றார்.
இச்சமயங்களோடு தம்மைச் சேர்த்தல் கூடாதென வள்ளலார் இப்பாட்டில் வேண்டுகின்றார்.
2066. கண்ணப்பன் ஏத்துநுதற் கண்ணப்ப மெய்ஞ்ஞான
விண்ணப்ப நின்றனக்கோர் விண்ணப்பம் - மண்ணிற்சில்
வானவரைப் போற்றும் மதத்தோர் பலருண்டு
நானவரைச் சேராமல் நாட்டு.
உரை: கண்ணப்ப நாயனார் வழிபட்ட நெற்றியிலே கண்கொண்ட பெருமானே, மெய்ஞ்ஞானமென்ற விண்ணகத்தில் விளங்கும் தலைவனே, நின்பால் ஓர் விண்ணப்பம் செய்கின்றேன்; மண்ணுலகில் வானவர் சிலரைத் தெய்வமாகப் போற்றும் சமயத்தவர் உள்ளனர்; நான் அவர்கள் சமயத்தில் சேராதபடி காப்பாற்று வாயாக. எ.று.
காளத்தி நாதனான சிவனுக்குக் கண்ணிடந்தப்பி வழிபட்ட வரலாற்றை நினைந்து கூறுவாராய், “கண்ணப்பன் ஏத்து நுதற் கண்ணப்ப” என்று கூறுகின்றார். நுதலிலே கண்ணையுடைய அப்பனான சிவனென்றற்கு “நுதற்கண்ணப்பன்” என நுவல்கின்றார். நாம் காணத் தோன்றுவது ஐம்பூதங்களில் ஒன்றான விண்; இதனைப் பூதாகாசம் என்று கூறுவர்; இவ்வாறே மெய்ஞ்ஞானத்துக்கோர் ஆகாசம் கண்டு அதனைச் சிதாகாசம் என்றனர். அதற்கும் சிவன் தலைவனாதல் தோன்ற “மெய்ஞ்ஞான விண்ணப்பன்” என விளம்புகின்றார். விண்ணப்பன், விண்ணப்ப என விளியேற்றது. திருமாலையும், முருகனையும், கணபதியையும், காளியையும் வழிபடும் சமயத்தவரை, “சில்வானவரைப் போற்றும் மதத்தோர்” என்று கூறுகின்றார். அம்மதங்கட்கு வைணவம், கௌமாரம், காணபத்தியம், சாக்தம் என்று பெயர் கூறுவர். திருமால் முதலிய தேவர் பால் நன்மதிப்புக் கொண்டுறுவேனாயினும், அவர் பெயராலமைந்த மதங்களிற் சேரவிரும்பேன்; சேராதவாறு என்
அறிவைத் திண்ணிதாக்கிக் காத்தல் வேண்டும் என்றற்காக “மதத்தார் பலருண்டு, நான் அவரைச் சேராமல் நாட்டு” என்று வேண்டுகின்றார். வைணவம் முதலியவற்றைச் சேராதவர். திருமால் முதலிய தெய்வங்கள்பால் நன்மதிப்புக் கொள்வது அவரது மதத்தின் பால் வெறுப்பு எய்தாமைக்கெனக் கொள்க.
இதனால், திருமால் முதலிய தெய்வங்களைப் பாராட்டினும், அவர் பெயராலமைந்த மதத்திற் சேராமை நன்றென்பது வற்புறுத்தவாறாம்.
|