100

      100. எல்லாச் சமயங்களும், ஒரு கடலை நோக்கிச் சென்றடையும் பற்பல ஆறுகளைப் போல்வன; அங்ஙனம் இருக்க, இச்சமயங்களைச் சேராதவாறு காத்தருள்க என வேண்டுவது என்னை என எழுகின்ற கேள்விக்கு வள்ளலார் விடை கூறுவாராய், சிவனை நோக்கி, “எனக்கு முன்னுறு பொருள் நின்னையன்றிப் பின்னொன்றையும் அறியேன்; பிழையென அடித்தாலும் நீயே; பிழையன்று நன்று என அணைத்தாலும் நீயே, நின் திருவடியே எனக்குப் பற்று; பெறக்கடவ பேறு” என உரைக்கின்றார்.

2067.

     பொன்னின் றொளிரும் புரிசடையோய் நின்னையன்றிப்
     பின்னொன் றறியேன் பிழைநோக்கி - என்னை
     அடித்தாலு நீயே அணைத்தாலு நீயே
     பிடித்தேனுள் பொற்பாதப் பேறு.

உரை:

     பொன்போல் திகழும் புரிசடையை யுடைய பெருமானே, நின்னையன்றிப் பிறதெய்வங்களில் ஒன்றையும் நினைந்தறியேன்; என் பிழைகட்காக என்னை அடித்தாலும், குண நலத்துக்காக என்னை அணைத்தாலும் நீயே எனக்குக் கதி; ஆதலால் நின்னுடைய அழகிய திருவடிகளை யடைவதே பேறாகக் கொண்டு கடைப்பிடித்துள்ளேன். எ.று.

     புரிசடை - முறுக்கிய சடை. அது பொன்னிறம் கொண்டு ஒளி செய்வது பற்றி “பொன்போன் றொளிரும் சடை” என்று புகழ்கின்றார். நின்னை யொழிய வேறு தெய்வங்களில் எதனையும் எனக்கு முழுமுதற் பொருளாக முன்னே பின்னே நினைந்ததில்லை என்பாராய், “நின்னை யன்றிப் பின்னென்றறியேன்” என்று பேசுகின்றார். பிழை கண்டு துன்பம் செய்தபோதும் சினத்தால் வெறுப்புற்று வேறு தெய்வங்களை நினைத்ததில்லை என்றும், உவகையற்ற போதும் பிறதெய்வங்களை எண்ணியதில்லை யென்றும் தெரிவிக்க, “என்னை அடித்தாலும் நீயே அணைத்தாலும் நீயே” என்று உரைக்கின்றார். சிவனுடைய திருவடிக்கண் தமக்கிருக்கும் பேராப் பேரன்பை, “பிடித்தேன் உன் பொற்பாதப்பேறு” என்று விளம்புகின்றார். மாணிக்க வாசகர், “உள்ளேன் பிற தெய்வம் உன்னையல்லா தெங்கள் உத்தமனே” (சதகம்) என உரைப்பது காண்க. 'மறந்தும் புறந்தொழா மாந்தர்' என்ற வழக்கும் இதுபற்றியே பிறந்ததென அறிக.

     இதனால், வேற்றுச் சமயத்தைச் சாரும் குறை தமக்குண்டாதலாகாதென வேண்டியவாறு.