101

      101. என்பால் அடிக்கடி மாறித் தோன்றும் குணவேறுபாட்டால் தீயகுணம் மேம்படும்போது வேறுவகையில் என் நினைவும், சொல்லும், செயலும் செல்லும்; நற்குணம் மேனிற்கும் காலத்தில், சிவனே, நின் பொருள்சேர் புகழையே விரும்பிப் பரவுவேன். நான் கூறுவது பொய் யன்று. நின் திருவடி ஆணை என்று இப் பாட்டில் பாடுகின்றார்.

 

2068.

     துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினுமற்றை
     நற்குணத்தில் உன்சீர் நயப்பேன்காண் - சிற்குணத்தோய்
     கூற்றுதைத்த நின்பொற் குரைகழற்பூந் தாளறிக
     வேற்றுரைத்தே னில்லை விரித்து.

உரை:

      ஞானச் செய்திகளைப் புரியும் குணவடிவானவனே, தீய குணம் மேம்படுகிற காலங்களில் வேறு மக்கள் தேவர் சிறப்புக்களை ஆதரிப்பேனாயினும், நற்குணம் ஓங்கும்போது நின் புகழ்களையே விரும்புவேன்; மார்க்கண்டனுக்காகக் கூற்றுவனை உதைத்து வருத்திய வீரக்கழலணிந்த நின் திருவடியறியச் சொல்லுகின்றேன்: உண்மைக்கு மாறாக நான் விரித்துரைக்கின்றேனில்லை. எ.று

     ஒருவன்பால் அமையும் குணத்துக்கு ஒப்பவே அவனுடைய செயலும் சொல்லும் இருக்கும். சிவபெருமான் ஞானமே வடிவும் குணமுமாக உடையவனாதலால், “சிற்குணத்தோய்” என்று உரைக்கின்றார். 'சித்' தென்ற வடசொல் ஞானத்தைக் குறிப்பது,. பிரகிருதி மாயையிற்றோன்றி உயிரிற்றோய்ந்து அறிவு செயல்களில் மலர்ந்து விளங்கும் குணங்கள் மூன்றாய்ச் சத்துவம், இராசதம், தாமதம் என வழங்கும்; சத்துவத்தில் உயிரறிவு தெளிவுற்றுத் திகழும்; இராசத்தில் கலங்கியும் தாமதத்தில் மயங்கியும் வெளிப்படும். அன்றியும், இக் குண மூன்றும் மக்களிடையே கணந்தோறும் “பௌவமும் திரையும்” போல ஓங்குவதும் ஒடுங்குவதுமாய் இருக்கும்; இவற்றுள் சத்துவம் ஓங்கும்போது நற்குணமும் நற்செயலும், இராசத தாமதங்களில் துற்குணமும் அதற்கேற்ற செயல்களும் உண்டாகும் என்பர். அதனால், “துற்குணத்தில் வேறு தொடர்வேன்” என்று வள்ளலார் கூறுகின்றார். சிற்குணச் சிவன்பால், “நற்குணத்தில் உன் சீர் நயப்பேன்” என்பதால், துற்குணத்தில் சிற்குணத்தரல்லாத வேறாயவரை ஆதரித்து அவர்பின் செல்வேன் என்றாராயிற்று. அவர்கள் மக்களிலும் தேவரினத்திலும் உண்மையின் பொதுப்பட “வேறு தொடர்வேன்” என்று விளம்புகின்றார். யான் கூறுவது வெறும் முகமனன்று என்றற்கு “வேறுரைத் தேனில்லை விரித்து” என்றும், முற்றிலும் உண்மையெனற்கு “நின்குரைகழற் பொற்பூந்தான் அறிக” என்றும் இயம்புகின்றார். குரைகழல் - வீரத்தண்டையென்னும் காலணி. பொற்பூந்தாள் - பொன்னிறம் கொண்ட பூப்போன்ற திருவடி, சிவன் திருமேனி பொன்னார் மேனியாதலால், திருவடி இவ்வாறு புகழ்ந்துரைக்கப்படுகிறது. 'திருவடியறியச் சொல்லுகின்றேன்' என்பது, சொல்லப் படுவதன் மெய்ம்மைக்குச் சான்றாய்க் காட்டும் ஆணையுரை.

     இதனால், நற்குணத்தராய் நலம் செய்தற்கும் துற்குணத்தராய் அல்லது செய்தற்கும் அடிக்கடி மாறும் காரணமெனக் குறித்துரைத்தவாறு.