அருட்பெருஞ்சோதி

5. மகாதேவ மாலை

    பனி உறைந்து நிற்கும் நெடுமலை யுச்சியில் வெயிலவன் வெம்மையால் உருகிப் பெருகிவரும் பேரியாற்றுப் பெருக்குப்போல வடலூர் வள்ளலாரின் நெடிதுயர்ந்த உள்ளத்திலிருந்து உருகிப் பெருகிப் பாட்டுருவில் ஓடிவரும் அருட்பெருக்கு இம் மகாதேவமாலை. திருவருளின் பேரொளிப் பெருவெம்மை வள்ளலாரின் உள்ளத்தை உருக்குகிறது. அதன் முடிவில் வேதம், உபநிடதம், ஆகமம் ஆகிய, கலைகளில் தெளிபுலமையும், சைவத் திருமுறைகளில் நுண்புலமும், உலகியல் காட்டும் ஒண்மையும் உறைந்து கிடக்கின்றன. உள்ளத்தில் உருகிப் பெருகி வழியும் இப்பாமாலையின்கண் இவற்றின் கருத்துக்கள் பெருகி நிறைந்துள்ளன.

    வேதாந்தக் கருத்துக்களும் அவற்றின் தெளிவாகிய சித்தாந்தக் கருத்துக்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னே தோன்றிய பெருமக்களால் அவர் காலத்து வழங்கிய சொற்களால் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் உரைக்கப்பட்டன. காலவெள்ளத்தால் மக்களுடைய வாழ்வில் தோன்றிய மாற்றங்களாலும் புதிதுபுகுந்த வழக்காறுகளாலும் சொல்நடை மாறுபடுவதாயிற்று. பழங்காலச் சொல்நடை பிற்காலத்தோர்க்கு இனிது பொருள் விளங்கும் நிலையை இழந்தது. சங்ககாலத் தமிழ்நடை. பின் வந்த காப்பியக் காலத்தில் ஒரு சிறிது அரிய நடையாயிற்று. இவ்வாறே தேவார ஆசிரியர் காலத்துத் தமிழ்நடை இடைக்காலத்தவர்க்கு அரிதுணர் நடையாகவே, திருவாசகம் அருளிய திருவாதவூரரின் செந்தமிழ் சிறிது எளிய நடையில் இயங்குவதாயிற்று. பின்னர்ப் போந்தவை இம் முறையில் எளிமை மேற்கொண்டு தாயுமானவர் காலத்தில் இனிது இயங்கிற்று. அவரை ஒட்டிவந்தவராதலால் வடலூர் வள்ளலாரின் இனிய தமிழ், தமிழர் எல்லாரும் எளிதில் உணர்ந்து இன்புறும் இயல்புடையதாக இலங்குகிறது. ஆதலால்தான், வள்ளலார் வழங்கும் கருத்துக்களைப் படித்துணர்ந்த பெருமக்கள், பழைய தெள்ளமுதைப் புதிய வள்ளத்தில் பெய்து தருவதுபோல இவ்வருட்பா இருக்கிறது எனப் பெருமிதத்துடன் பேசுகின்றனர்.

    'மகாதேவமாலை' என்பது, மகாதேவன்மேல் பாடிய மாலை என்று பொருள்படுகிறது. மகாதேவன் என்ற தொடர் தேவர்களுக்கெல்லாம் பெருந்தேவனாகிய பரம்பொருளைக் குறிப்பது. பரம்பொருள் என்றே கூறலாமே, மகாதேவன் என்பது ஏன் எனின், வள்ளலார் காலத்தில் தேவர்களையும் அவர்கள் வாழும் உலகங்களையும் அவர்களுக்கு நேர்ந்த வாழ்வு தாழ்வுகளையும் கூறும் புராணங்களும் இதிகாசங்களும் மக்களிடையே பரவியிருந்தன. மக்களைவிடத் தேவர்கள் உயர்ந்தவர்கள் என்றும், நெடிது வாழ்பவர் என்றும், உழைப்பின்றி நினைத்தது நினைத்தவாறே பெற்று இன்புறும் நீர்மையரென்றும் அந்த நூல்கள் உரைத்தன. மக்களில் உயர்ந்தவர்களுக்குத் தேவர்களையும், அவர்கள் வாழ்வுக்குத் தேவர் வாழ்வையும், நகரங்களின் பொலிவுக்குத் தேவர்கள் உறையும் நகரங்களையும் உவமம் கூறுவது அறிஞர் மரபாயிற்று. தேவர்களில் மண்ணுலகிற் போந்து மக்களால் போற்றப்படுவோர் தெய்வம் எனப்பட்டனர். மக்களினும் தெய்வம் உயர்ந்தமையின், அம் மக்களின் மேம்பட்ட பிரமன், திருமால், அரன், இந்திரன் முதலியோர்களைத் தேவர் என்றும், தெய்வம் கூறுவது வழக்கமாயிற்று. பரம்பொருளும் இம் மூவர் வடிவில் நின்று படைத்தல், காத்தல், அழித்தல் செய்தலால் தெய்வம் என்றும் தேவன் என்றும் குறிக்கப்படுவது இயல்பாய்விட்டது. தேவர்களுக்கெல்லாம் முழுமுதலாகப் பரம்பொருள் விளங்குவதால், அதனைத் தேவதேவன் என்றும் மகாதேவன் என்றும் நூல்கள் கூறுவதால், எளிதில் விளங்குதலால் வேண்டி மகாதேவ மாலை என்று குறித்தருள்கின்றார்.

    இதுபற்றியே, பரம்பொருளின் பெருந்தெய்வ வடிவாகிய சிவவடிவை நினைத்து, அதனுடைய கண், உயிர்க்கெல்லாம் களைகணாகி இன்பநிலை வளர்ப்பது; வாய், மறையாகிய அமுதம் பொழிவது; வடிவம், மனக்கருங்கற் பாறையை உருக்குவது என்ற கருத்துப்படப் பாடுகின்றார்.

காப்பு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2070.

     கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந்
          துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித்
     தெருள்நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற
          கண்ணுடையோய் சிதையா ஞானப்
     பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்ற
          மலர்வாயோய் பொய்ய னேன்றன்
     மருள்நிறைந்த மனக்கருங்கல் பாறையும்உட்
          கசிந்துருக்கும் வடிவத் தோயோ.

உரை:

     சிவனுடைய நெற்றிக்கண், உயிர்கட்கெல்லாம் களைகணாய் இன்பநிலை வளர்ப்பது; வாய், மறையாகிய அமுதம் பொழிவது; வடிவம் மனமாகிய கருங்கற் பாறையை உருக்குவது என்றவாறு.

     இன்பநிலை, உயிர்கட்கும் துன்பம் நீங்கிய நன்னிலையாதலால், 'களைகண்' என்றார். அவ்வின்பத்தில் அறிவு மயங்கிவிடுவது உயிர்க்கு இயல்பு. இறைவனது திருக்கண் வளர்க்கும் இன்பநிலை தெளிவும் விளக்கமும் நிறைந்த நிலையாதலின், 'தெருள் நிறைந்த இன்பநிலை' என்றும், ஏனையவற்றால் எய்தும் இன்பநிலை பையத்தேய்ந்து மறைவது. இத் தெருள் நிறைந்த இன்பநிலை மேன்மேலும் பெருகுவது என்பது விளங்க, 'தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற கண்ணுடையோய்' என்றும் வள்ளலார் கூறுகின்றார். மருள் பொருளல்லவற்றைப் பொருள் என்றுணரும் மருள். அதனால் மனம் கருங்கல்லாகிறது. இறைவன் திருவடிவின் ஞானவொளி உட்பகுதியை உருக்கிப் பின் புறப்பகுதியை உருக்கும் இயல்பினது என்றற்கு, 'உட்கசிந்து உருக்கும் வடிவத்தோய்' என்று உரைக்கின்றார். வெயிலவன் ஒளி நேரே உட்புகாமல் புறப்பகுதியை உருக்கிப் பின்னரே அகப்பகுதியை உருக்கும் என்க.