2

    2. மேலும் உலகமெல்லாவற்றிலும் வேறு கலப்பின்றிப் பரம்பொருள் தானே தனித்து நிறைந்திருக்கும் உண்மையை எண்ணுகின்றார். கண் முதலிய கருவிகளின் காட்சியின்றி யோகக் காட்சியால் உணரும் யோகியார் அதனைக் கண்டு அனுபவித்து இன்புறுதலையும் நோக்குகின்றார். அகக்கண்ணாற் கண்டு கருவி கரணங்களின் நீங்கி, காணப்படும் பரமும் தாமுமாய்ச் சமைந்திருக்கும் உபசாந்த நிலையை உன்னுகின்றார். ஆங்கு ஒளிரும் அருள் ஞான நிலையையும் அதன்கண் செறிந்து நிற்கும் இன்பத்தையும் எண்ணுகிறார். ஞானொளி நின்று ஒளிர்தற்கு இடமாகும் மீதான (மேலிடம்)த்தே நின்று திகழும் சிவ்விளக்கத்தைச் சிந்திக்கின்றார். அந்தச் சிவஞாயிறு அன்பர்களின் இதயமலரின்கண் மேலும் கீழுமாய் உயிர் அறிவின் மேலாய் விளங்குவதை வியங்கு பாடுகின்றார்.

2072.

     உலகமெலாந் தனிநிறைந்த உண்மை யாகி
          யோகியர்தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும்
     கலகமுறா உபசாந்த நிலைய தாகிக்
          களங்கமற்ற அருண்ஞானக் காட்சி யாகி
     விலகலுறா நிபிடஆ னந்த மாகி
          மீதானத் தொளிர்கின்ற விளக்க மாகி
     இலகுபரா பரமாய்ச்சிற் பரமாய் அன்பர்
          இதயமலர் மீதிருந்த இன்பத் தேவே.

உரை:

     உலகமெலாம் நிறைந்த உண்மையாய், யோகியர் அனுபவ உவப்பாய், உபசாந்த நிலையதாய், அருள்ஞானக் காட்சியாய், நிபிட ஆனந்தமாய், மீதானத்து விளக்கமாய், பராபரமாய், சிற்பரமாய், அன்பர் இதயமலர்மீது இருப்பவன் இன்பத் தேவன். எ.று .

     இங்கே உபசாந்த நிலை என்பது காரிய காரண வாதனை ஒடுங்கிய நிலை. இது மாயப்பாழ், போதப்பாழ், உபசாந்தப்பாழ் என்று திருமந்திரம் கூறும் மூன்றனுள் இறுதியிற் கூறிய உபசாந்தம். நீக்கமறச் செறிந்திருக்கும் இன்பத்தை நிபிட ஆனந்தம் என்றார். 'நிபிடம்' எனப்படும் இது மிருகேந்திரம் முதலிய ஆகமங்களில் வரும் சொல்வழக்கு. உயிரை ஆன்மா என்பது உபநிடத வழக்கு.

     (2)