5
5. இங்ஙனம் வேதாந்த சித்தாந்த சமயங்களின் வழி நின்று பரம்பொருளை எண்ணிய வள்ளலார்,
அவை கூறும் அத்துவித முடிபுகளை நோக்குகின்றார். அத்துவிதம் என்பது வீடுபேறெய்தும் ஆன்மா பரம்பொருளோடு
எய்தும் சம்பந்தத்தைக் கூறுவது. துவிதாத்துவிதம், விசிட்டாத்துவிதம் கேவலாத்துவிதம், சுத்தாத்துவிதம்,
சுத்த சமர சாத்துவிதம் என்று அத்துவிதவகை பலவாகக் காணப்படுகின்றன. இவை யாவும் பரம்பொருளை
நோக்கியே நிற்பதால், அதனையன்றி ஆன்மாவுக்கு ஊன்றுநிலை வேறு ஒன்றும் இல்லாமையும் காண்கின்றார்.
அதன் ஞானமும் என்றும் நித்தமாய் நிரதிசயமாய் விளங்குவதையும் வள்ளலார் அறிகின்றார். இங்ஙனம்
அத்துவிதம் எய்துவதற்குரிய பரம்பொருள் ஆன்மாவுக்குத் தாயாகவும் தந்தையாகவும் குருவாகவும் தெய்வமாகவும்
உதவுவதையும் உணர்கின்றார்.
2075. தோன்றுதுவி தாத்துவித மாய்வி சிட்டாத்
துவிதமாய்க் கேவலாத் துவித மாகிச்
சான்றசுத்தாத் துவிதமாய்ச் சுத்தந் தோய்ந்த
சமரசாத் துவிதமுமாய்த் தன்னை யன்றி
ஊன்றுநிலை வேறொன்று மிலதாய் என்றும்
உள்ளதாய் நிரதிசய உணர்வாய் எல்லாம்
ஈன்றருளுந் தாயாகித் தந்தை யாகி
எழிற்குருவாய்த் தெய்வதமாய் இலங்குந் தேவே.
உரை: துவிதாத்துவிதமாய், விசிட்டாத்துவிதமாய், கேவலாத்துவிதமாய், சுத்தாத்துவிதமாய், சமரச அத்துவிதமாய், தன்னையன்றி ஒன்றுமில்லாததாய், என்றும் உள்ளதாய், நிரதிசய உணர்வாய், எல்லாம் ஈன்றருளும் தாயாய், தந்தையாய், குருவாய், தெய்வதமாய் இலங்குபவன் தேவ தேவன். எ.று.
இந்த அத்துவிதம் என்ற சொல், முதன் முதலில் சாந்தோக்கியம் என்ற உபநிடத்தில் 'ஏகம் ஏவாத்விதீயம் பிரம்மம்' என்று கூறப்படுகிறது. 'அத்விதீயம்' என்பதற்குத்தான் சான்றோர் பலரும் பல்வேறு அத்துவிதம் கூறுகின்றனர். துவைதம் - இரண்டு; அத்துவைதம் - இரண்டல்லது. அது வைதம் - அத்துவிதம். விசிட்டாத்துவிதம் கூறுவோர் வைணவர். கேவலாத்துவிதம் கூறுவோர் சங்கர வேதாந்திகள். சுத்தாத்துவிதம் கூறுபவர் சித்தாந்த சைவர். சுத்தாத்துவிதம் என்றவுடன் அசுத்தாத்துவிதம் என ஒன்றிருப்பதாக எண்ணுதல் கூடாது. சுத்தம் என்பது கேவலமென்று விசிட்டமென்றும் விசேடிக்கப்படாமல் 'அத்துவிதம்' என்றே கொண்டொழிவது. சுத்தாத்துவிதத்தை மேற்கொண்டு ஏனை அத்துவித வகைகளை மறுக்காமல் ஒப்ப மதிப்பது சமரசாத்துவிதம். இது வடலூர் வள்ளலார் கூறும் அத்துவிதமாகும். பரம்பொருளின் சமரசத் தன்மையை, தாய், தந்தை, குரு, தெய்வமென விளங்குவதொன்றனாலேயே காணலாம் என்றபதற்காகவே, 'எல்லாம் ஈன்றருளும் தாயாகித் தந்தையாகி எழிற் குருவாய்த் தெய்வதமாய் இலங்கும் தேவே' என்று கூறுகின்றார். (5)
|