6

      6. சிவம் பெறுதற்கென அமைந்த நெறி, சரியை கிரியை யோகம் ஞானம் என நான்காய், ஒன்றுக்கொன்று காரணகாரியமாய் அமைந்ததெனச் சைவ நூல் கூறுகிறது. இவை, அரும்பு, மலர், காய், கனி போல்வன எனத் தாயுமானார் கூறுவர். சரியையோடு நிற்பவர் சாலோகம் என்ற பதத்தையும், கிரியையார் சாமீபபதத்தையும், யோகர் சாரூபத்தையும், ஞானவான்கள் சாயுச்சியத்தையும் பெறுவர். இவற்றைப் பதமுத்தி என்பதும் வழக்கு. இனி இவற்றின் வேறாக இந்திரபதம், பிரமபதம், உருத்திரபதம் எனப் பல பதங்களைக் கூறுவதுமுண்டு. இவற்றை எல்லாம் வள்ளலார் சீர்தூக்குகின்றார். இவை ஒன்றினொன்று தூலம், சூக்குமம், பரம், பரமார்த்தமாக விளங்குகின்றன. இவற்றிற்கு மேலாகத் திருவருள் வெளியில் சிவம் திகழ்வதையும் காண்கின்றார். திருவருள் வெளியைப் பராசத்தி நிலையம் என்பர். அது சிவத்தையும் தாதான்மிய சத்தியாய் விளங்குவது. அது ஆன்மாவின் சிற்சத்தியை எழுப்புவதாகும் ; பராசத்தியாய்ப் பரமனுக்கு இச்சை ஞானம் கிரியை என மூவகையாய் விரிந்து கொடுக்க, அவன் அதனை மேவிக் கருணையுருக் கொண்டு மாயையைத் தொழிற்படுத்தி உலகைப் படைத்து உயிர்கட்கு உடல் கருவி உலக போகங்களை அருளுவன் எனச் சிவப்பிரகாசம் முதலிய நூல்கள் உரைக்கின்றன. இங்ஙனம் பரந்து விரிந்து தோன்றும் பிரபஞ்ச வாழ்வு உயிர்களைப் பற்றிநிற்கும் தற்போதத்தைக் கெடுத்துச் சிவமாம் தன்மையும் அதன் பயனாகச் சிவானுபவமாகிய இன்பமும் நல்கும். அதனால் சிவானந்தத்துக்கு உரிய அறிவும், அந்த அறிவால் பெறலாகும் மேலான இன்பமும் உண்டாம். இவையனைத்தும் சிவபரம்பொருளின் திருவருளையே இருப்பதை நோக்குகின்றார் வள்ளலார்.

2076.

     பரமாகிச் சூக்குமமாய்த் தூல மாகிப்
          பரமார்த்த நிலையாகிப் பதத்தின் மேலாம்
     சிரமாகித் திருஅருளாம் வெளியாய் ஆன்ம
          சிற்சத்தி யாய்ப்பரையின் செம்மை யாகித்
     திரமாகித் தற்போத நிவிர்த்தி யாகிச்
          சிவமாகிச் சிவாநுபவச் செல்வ மாகி
     அரமாகி ஆனந்த போத மாகி
          ஆனந்தா தீதமதாய் அமர்ந்த தேவே.

உரை:

     பரமாய், சூக்குமமாய், தூலமாய், பரமார்த்த நிலையாய், பதங்களின் சிரமாய், அருளாம் வெளியாய், ஆன்ம சிற்சத்தியாய், பரையின் செம்மையாய், திரமாய், தற்போத நிவிர்த்தியாய், சிவமாய், சிவானுபவச் செல்வமாய், அரமாய், ஆனந்த போதமாய், ஆனந்தா தீதமாய் அமர்ந்தவன் தேவ தேவன். எ.று.

     ஆன்மசிற்சத்தி என்பது ஆன்மாவின் ஞானசக்தி. பரை - பராசத்தி; பரமனுக்குத் தாதான்மியமாய்ச் சத்தியாதல் தோன்றப் பரை என்பது மரபு. பரமனுக்கு ஞானம் கிரியை இச்சை என்ற மூவகைச் சத்தியாய், நிட்களம் சகளம் சகளநிட்களம் என்ற மூவகை யுருவுகட்குக் காரணமாதலின் தப்பாமை தோன்றப் பரையின் செம்மை என்று வள்ளலார் உரைக்கின்றார். திரம் - என்றும் உள்ளது. அறிவுக்கு கூர்மை தந்து தன்னைக் காணச் செய்யும் நற்செயல் பற்றி 'அரமாகி' என்றார். போதமும் ஆனந்தானுபவமும் உயிர்கட்கேயாதலின் 'ஆனந்தா தீதமாய் அமரும் தேவே' என்று இயம்புகின்றார்.

     (6)