8

      8. சிவஞானச் செல்வர்களின் யோகஞானங்களின் நலங்கள் பலவற்றையும் விரித்துரைத்த வடலூர் வள்ளல் சிவஞான விளைபயன்களையும் இன்பத்தையும் சிந்திக்கின்றார் சிவஞானத்தால் பெரும்பயன் சிவதரிசனம் என்பர். “பரஞானத்தால் பரத்தைத் தரிசித்தோர்” எனவரும் சிவஞானசித்தி இதனை நமக்குத் தெளிவாக்குகிறது. சிவஞானிகள் கண்டு மகிழும் சிவம், காணும் ஞானியின் தன்மயமாகவோ, காணப்படும் சிவமயமாகவோ  தன்னைக் காட்டுவதில்லை. ஒன்றைக் காணும் மக்கள் நெடுநேரம் காண்பராயின், அதன் காட்சி உவர்ப்பை விளைவிப்பதும், காண்பவர் உடற்கு நோய்விளைவிப்பதும் கண்கூடு. காணும் சிவ ஞானிக்கு உடலில் துன்பம் விளைவிப்பதும், உவர்ப்பை விளைவிப்பதும் சிவக்காட்சிக்கு இல்லை. காணப்படும் பொருள் காணுந்தோறும் புதுப்புது நிலைகளைக் காட்டி விகற்பமுறும்; சிவபரம்பொருள் அத்தகைய விகற்ப நிலையுடையதன்று. காணுங்கால் ஒப்பதும் மிக்கதுமாகிய பொருளுணர்வு தோன்றற் கிடமின்றி, எல்லாவற்றிற்கும் மேலாய் விளங்கும் மேன்மையின் வடிவமாய்த் தானே தனக்குப் பரமாய் விமலமாய்க் காட்சிப்படுவது. பொதுவாம் தன்மையும் உண்மையுருவாம் தன்மையும் என்ற இரண்டையும் ஒருங்கே பெற்று, இந்நிலையினைச் சிவஞானிக்கெனச் செயற்கையாக எய்தாமல், இயல்பாகவே கொண்டு விளங்குகிறது. சிவத்தின் பொருண்மை நிலையை நோக்கின், அது தூய அறிவுப்பொருள்களினும் மேனிலையறிவாய், சலிப்பில்லதாய்ச், சிற்சொலிதமாய்க் காணப்படுகிறது. “ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை, யார் அறிவார் இந்த அகலமும் நீளமும்” (திருமந். 95) என்றபடி, அளவுக்ககப்படாமல் இன்பமாய் நிறைந்து சிவம், எங்கும் நிலைபெற்றுக் காண்பவர் மனவெல்லையும் சொல்லின் எல்லையும் கடந்து மௌன நிலையை எய்துவிக்கின்றது.

2078.

     நின்மயமாய் என்மயமாய் ஒன்றுங் காட்டா
          நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம்
     தன்மயமாய்த் தற்பரமாய் விமல மாகித்
          தடத்தமாய்ச் சொரூபமாய்ச் சகச மாகிச்
     சின்மயமாய்ச் சிற்பரமாய் அசல மாகிச்
          சிற்சொலித மாய்அகண்ட சிவமாய் எங்கும்
     மன்மயமாய் வாசகா தீத மாகி
          மனாதீத மாய்அமர்ந்த மவுனத் தேவே.

உரை:

     நின்மயமாய், என்மயமாய், நிராமயமாய், நிருவிகற்பநிலையாய், மேலாம் தன்மயமாய், தற்பரமாய், விமலமாய், தடத்தமாய், சொரூபமாய், சகசமாய், சின்மயமாய், சிற்பரமாய், அசலமாய், சிற்சொலிதமாய், அகண்டசிவமாய், எங்கும் மன்மயமாய், வாசகாதீதமாய், மனாதீதமாய் அமர்ந்த மவுனத்தேவன் மகாதேவன். எ.று

     உரைப்பார் கேட்பார் என்ற இருவர் இயல்பினுள் ஒருவர் இயல்பும் உடையதன்று ஞானத்தாற் காணப்படும் ஞேயமாகிய சிவம்; அது பற்றியே “நின்மயமாய் என்மயமாய் ஒன்றும் காட்டா நிராமயம்” என்று கூறுகின்றார். “ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்கொண்டார்” என்பர் நாவரசர். “தாம் வீழ்வார் பிறர்க்கு ஊன்று கோலாகார்” என்றாற் போலத் தான் நிராமயனாகாவிடத்துப் பிறர்க்கு ஆமயம் தீர்க்க மாட்டான் என்றற்கு நிராமயன் என்றார். எஞ்ஞான்றும் ஒரு தன்மையன் சிவன் என்பது விளங்க “நிருவிகற்பநிலையாய்” என்றார். மேலாம் தன்மை என்ற பண்பு ஓர் உருக்கொண்டு காட்சியளிப்பது போல்வது கண்டு “மேலாம் தன்மயம்” எனல் வேண்டிற்று. இயல்பிலே மலமின்மையையும், மலமுடையவற்றோடு கலந்த வழியும் மலம் சாரமாட்டாத தன்மையும் உடையது என்றற்கு 'விமலமாகி' என்று கூறுகிறார்.

     தடத்தம் என்பது பொதுத் தன்மை; சொரூபம் தனித் தன்மை; சிறப்பியல்பு காண்பார்க்குத் தொடக்கத்தில் தடத்தநிலையும் பின்னர்ச் சொரூப நிலையும் காட்டுதல்பற்றித் 'தடத்தமாய்ச் சொரூபமாய்' என்கிறார். இங்ஙனம் இருவேறு நிலைகளைக் காட்டுவது ஒரு கார,ணம் பற்றியன்று; இயல்பிலே அமைந்தது என்றற்குச் 'சகசமாகி' என்றார். சின்மயம் ஞானமயம்; ஞானமயமாகத் தோன்றும் பிறவற்றிற்கெல்லாம் மேலாயது என்றற்குச் 'சின்மயமாய்' என்றதோடு அமையாமல் 'சிற்பரமாய்' என்றும் இசைக்கின்றார். நிலையில் திரிதல் இல்லாத இயல்புபற்றிச் சிவத்தை “அசலமாகி” என்றும், எத்தகைய அளவுக்கும் அகப்படாமை பற்றி 'அகண்ட சிவமாய்' என்றும் அறிவிக்கின்றார். நினைவுக்கும் சொல்லுக்கும் அகப்படாமையால், “வாசகாதீதமாகி மனாதீதமாய்” அமர்ந்துளது என்று உரைக்கின்றார். வாக்கு மனங்கள் தொழிற்படலின்றி இருப்பது மௌனநிலை. “ஊமைத் தசும்புண் நீர் நிறைந்திருக்கும் நிலை போல்வது என நச்சினார்க்கினியர் கூறுவர்.

     (8)