9

      9. யோகியரது அனுபவநிலை நினைவில் எழவே, அவரோடு ஒத்த சித்தர்களையும், யோகத்தால் கைவரப்பெற்ற ஞான அன்பர்களையும் நினைக்கின்றார். புராண இதிகாசங்கள் கூறும் பிரமன் முதலிய தேவர்களையும் அவர்கள் ஓதிப் பரவும் வேதங்களையும் நினைக்கின்றார். அவர்கள் அனைவரும் கருவி கரணங்களை இறந்தும் கடுந்தவம் புரிந்தும் பரம்பொருளைக் காணாராய், அது தமது அறிவெல்லையக் கடந்து நிற்கும் கடவுளாதலை உணர்ந்தமையை எண்ணுகிறார். மண்ணுலகில் மக்கள் உள்ளத்தில் தெள்ளமுத ஊற்றாய்ப் பிண்ட அண்டம் முழுவதும் தானாய்ப் பிறங்கி அருள்புரியும் அதன் சிறப்பை வியக்கின்றார். 

2079.

     அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்
          அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம்
     களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
          கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி
     உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே
          ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப்
     பிளவிறந்து பிண்டாண்ட முழுதுங் தானாய்ப்
          பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே.

உரை:

     சித்தர் யோகர் அறிஞர் பிரமன் முதலியோரும், வேதங்களும் காண்பரிதாம் கடவுளாய், எம்போல்வார் உள்ளத்துள்ளே ஊறுகின்ற தெள்ளமுதமாய்ப் பிண்டாண்ட முழுதும் தானாய்ப் பிறங்குபவன் பெருங்கருணைப் பெரிய தேவன். எ.று.

     இதனால், பரம்பொருள் மேலாய சித்தர் யோகர் முதலியோர்க்குக் காண்பரிதாயினும், கீழாய மக்கட்கு உள்ளத்தே அமுதமாய் ஊறியும், பிண்டாண்ட முழுதும் தானாயும் அருள் செய்யும் திறத்தைக் கூறுகின்றார்.

     உயர்ந்தோர் தம்மின் தாழ்ந்தாரோடும் கலந்து இன்புறுத்தி உயர்த்துவது அறமன்றோ. அதனால் இதுவும் பரம்பொருளின் பரமாந்தன்மையை உணர்த்துவதாயிற்று.

     (9)