10
10. ஒன்றேயாகிய பரம்பொருட் சம்பந்தம் கேவலம், விசிட்டம் எனப் பலவகைப்பட அத்துவிதம் பேசப்படுதற்குக்
காரணம் யாதாகலாம் என எண்ணுகின்றார். பேசும் ஆன்மாக்கள் எண்ணிறந்தன; அவை ஒன்றுபோல் ஒன்று
இருப்பதில்லை. அதனால், அவற்றின் உணர்வுகள் வேறுபடுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கொள்கை
உய்த்துணர்ந்து உரைப்பதால் மதங்கள் பலவாகின்றன. அம் மதங்களும் வன்மை மென்மைகட் கேற்ப
ஒன்றையொன்று தாக்கி வெற்றி தோல்வி எய்துகின்றன. அப்போரும் வெறும் சொற்போராய்ப் பரம்பொருள்பால்
பன்மை காணும் பாங்கில் முடிகிறது. பரம்பொருளும், அறிஞர் சொற்கு அகப்படுவதும், அகப்படாது வாயடங்கி
மவுனமாகும் நிலையை உண்டு பண்ணுவதும் இயல்பு. அத்தகைய பரம், மதங்கள் பலவற்றாலும் எட்டப் படாது.
காயும் பழமும் நல்கும் மரம்போல் உயிர்கட்கு உணர்வும இன்பமும் தந்து விளங்குகிறது; உயிர்களின்
கருவி கரணங்களில் கலந்து பொருள்களின் உண்மைத் தன்மையை உணரக் காட்டுகிறது; தாயும் தந்தையுமாய்க்
கூட்டி, மக்களைத் தோற்றுவிக்கிறது. அஃது உணரும் உணர்வுக்கு உணர்வாய், உணர்வும் தானும் ஒன்றாய்,
ஒன்றாய்ப் பலவாய் எல்லாச் சத்திகளும் உடையதாய் ஓங்குவதையும் உணர்கின்றர்.
2080. வாயாகி வாயிறந்த மவுன மாகி
மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக்
காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக்
கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற
தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித்
தானாகி நானாகிச் சகல மாகி
ஓயாத சத்தியெலாம் உடைய தாகி
ஒன்றாகிப் பலவாகி ஓங்குந் தேவே.
உரை: வாயாய், வாய் இறந்த மௌனமாய், மதமாய், மதம் கடந்த வாய்மையால், காயால், பழமாய், தருவாய், கருவி கரணக் கலப்பாய், தாயாய், தந்தையாய், பிள்ளையாய், தானாய், நானாய், சகலமாய், சத்தியெலாம் உடையதாய், ஒன்றாய், பலவாய் ஓங்குபவன் மகாதேவன். எ.று.
கருவி கரணங்களோடு கலவாழி, உயிர் அறிவன அறிந்துதெளிவு பெறுதற்கு வாய்ப்பில்லை. காணப்படும் பொருளும் காண்பானுமாகவும் அறியப்படுபொருளும் அறிவானுமாகவும் வேறாய் நின்றாலன்றிக் காட்சியும் ஞானமும் எய்த இயலாமை பற்றி, 'தானாகி நானாகிச் சகலமாகி' என்றார். சடசத்திகளைப் போலக் குறைதலும் பெருகுதலுமின்றிப் பொருள்வகை எல்லாவற்றிலும் தனது சிற்சத்தி கலந்து தொழிற்படப் பரம்பொருள் நிற்பது காட்டற்கு, 'ஓயாதா சத்தி யெல்லாம் உடையதாகி' என்று கூறுகின்றார். 10)
|