11
11. இங்ஙனம் காணப்பட்ட சிவத்தை நோக்கிய ஞானச் செல்வர்கள், தாம் கண்டு போந்த அண்டபிண்டங்களை
எண்ணி, அவற்றோடு சிவம் தொடர்புற்றிருக்கும் நிலையினை நோக்குகின்றார்கள். “அண்டப் பகுதியின்
உண்டைப்பிறக்கம், அளப்பருந் தன்மை வளப் பெருங்காட்சி, ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்,
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன”. இந்த அண்டங்களின் இயற்கையும் அமைப்பும் கருவிகொண்டல்லது
கண்ணாற் காணப்படாத சிறுசிறு அணுக்களாகிய பிண்டங்களினும் உள்ளன. அண்டத்துக்கு அண்டம், பிண்டத்துக்குப்
பிண்டம், ஒன்றோடொன்று ஒவ்வாமல் வேறுபட்டும் உள்ளன. இவ்வண்டபிண்டங்களில் வேறுவேறு
பொருள்களும் மலிந்திருக்கின்றன. இவை யாவும் தத்தம் நிலையில் திரியாமல் நெறியிற் பிறழாமல்
ஓரோர் ஒழுங்கில் இயலுகின்றன. இவ்வியக்கத்துக்கும் ஒழுங்குக்கும் காரணம் சிவமாகிய முதல்வன்
என்பது உய்த்துணர்வுக்கு இனிது புலனாகிறது. இவற்றைப் படைத்துக் காக்கும் வகையிற் சிவம் பதியாய்
விளங்குகிறது. அப் பதியிடத்தே ஒருவகைத் துள்ளலும் துடிப்பும் இல்லை; இகழ்தலும் மகிழ்தலும் இல்லை;
பொங்குதலோ மங்குதலோ இல்லை. எங்கும் சாந்தமே நிறைந்துள்ளது. அருள் நிழல் பரப்பி ஞானம்
தழைத்து இன்பம் கனிந்த ஒரு தெய்வமரம் போலும் தோற்றம் அளிக்கும் சிவத்தைத் தமது ஞானக்காட்சியில்
வடலூர் வள்ளற்பெருமான் கண்டு வாயாரப் பாடுகின்றார்.
2081. அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும்
அளவாகி அளவாத அதீத மாகிப்
பிண்டங்கள் அனந்தவகை யாகிப் பிண்டம்
பிறங்குகின்ற பொருளாகிப் பேதந் தோற்றும்
பண்டங்கள் பலவாகி இவற்றைக் காக்கும்
பதியாகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம்
கொண்டெங்கும் நிழல்பரப்பித் தழைந்து ஞானக்
கொழுங்கடவுள் தருவாகிக் குலவுந் தேவே.
உரை: அண்டங்கள் பலவுமாய், அவற்றின் மேலும் அளவாய், அதீதமாய், பிண்டங்களின் வகையாய், பிண்டப்பொருளாய், பேதமுடைய பண்டங்கள் பலவுமாய், இவற்றைக் காக்கும் பதியாய், ஆனந்தம் பழுத்து சாந்தம் கொண்டு, நிழல்பரப்பி, ஞானக்கடவுட் டருவாய்க் குலவும் தேவன் மகாதேவன் எ.று.
அண்டபிண்ட பண்டங்கள் அனைத்திலும் பரம்பொருளின் இருப்புக் காணப்படுதலால், “அண்டங்கள் பலவாகி” என்றும், “பிண்டங்கள் அனந்தவகையாகி” என்றும், “பண்டங்கள் பலவாகி” என்றும் கூறுகின்றார். பல சில என்பனவே அளவையாயினும், பலவென்னும் சொற்பொருளின் எல்லைக்குள் அடங்காமை கண்டு “மேலும் அளவாகி” என்றும், அதனாலும் அமைதி எய்தாமையால் “அளவாத அதீதமாகி” என்றும் இசைக்கின்றார். அண்டங்களே இவ்வியல்பின என்றால், பிண்டங்கள் எல்லையில்லனவாம் என்பது எய்துதலால், பிண்டங்கள் “அனந்த வகையாகி” என்கிறார். பிண்டத்தின் உள்ளீடான அப் பொருள்களே பிண்டத்தின் பெருக்குக் காரணமாதலின், “பிண்டம் பிறங்குகின்ற பொருளாகி” என்றார். பிண்டமும் பொருளும் கலந்தவை பண்டம். அவை பண்பாலும் பயனாலும் ஒன்றிலொன்று வேறுபடுவது பற்றிப் “பேதம் தோற்றும் பண்டங்கள் பலவாகி” என்று கூறுகின்றார். பலவாய், பலவற்றின் மேலுமாய்ப் படைக்கப்பட்ட அண்டபிண்ட பண்டங்கள் தத்தம் நிலையில் நின்று தொழிற்படச் செய்து காப்பது என்பது நம்மனோர் சிந்தைக்கும் எட்டாத தொன்று. இவற்றைக் காக்கும் சிவபரம்பொருள், ஞானமே உருவான சிவமாகவோ, தொழிலே வடிவான சத்தியாகவோ நில்லாது இரண்டும் கலந்த பதிப்பொருளாகிக் காத்தலைச் செய்கின்றமை புலப்பட “இவற்றைக் காக்கும் பதியாகி” என்று குறிக்கின்றார். இங்ஙனமே சருவஞானோத்தரமும் கூறுகிறது. சிவமாகிய தெய்வமரம் ஞானம் தழையாகவும், சாந்தம் நிழலாகவும், ஆனந்தம் பழமாகவும் கொண்டு விளங்குவது என அறிக. 11)
|