12

      12. சிவயோகம் என்ற தொடர், சிவத்தினின்றும் பிரிப்பற நின்று ஒளிரும் திருவருளோடு ஒன்றி நிற்பது என்றும் பொருள்படும். ஒன்றி நின்று திருவருட் கண்ணாக நோக்குவது சிவயோகக் காட்சியாகும். அங்ஙனம் காணுமிடத்து உலகில் காணப்படும் அனைத்திலும் எங்கும் சிவமே நிறைந்திருப்பது புலனாகும். ‘எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவனருள் தன் விளையாட்டதே’ (2722) என்று திருமூலர் கூறுவர் . ‘எல்லாம் சிவம் என்ன நின்றாய் போற்றி’ என்பர் நாவரசர், அந்நெறியில் சிவத்தைக் கண்ட சிவயோகிகளான ஞானசம்பந்தர் முதலியோர் உலகின் கூறுகளான நிலம், நீர், தீ, கால், விண் ஆகிய அனைத்தையும், அவற்றிடைக் காணப்படும் பொருள் இடம் காலம் எல்லாவற்றையும் சிவயோகமாகக் கண்டு, தேனினும் இனிய செஞ்சொற்களால் நாம் அறியப் பாடிக் காட்டினார். வடலூர் அடிகளும் அப்பெருமக்கள் வழி நின்று பாடுகின்றார்.

2082.

     பொன்னாகி மணியாகிப் போக மாகிப்
          புறமாகி அகமாகிப் புனித மாகி
     மன்னாகி மலையாகிக் கடலு மாகி
          மதியாகி ரவியாகி மற்று மாகி
     முன்னாகிப் பின்னாகி நடுவு மாகி
          முழுதாகி நாதமுற முழங்கி எங்கும்
     மின்னாகிப் பரவிஇன்ப வெள்ளந் தேக்க
          வியன்கருணை பொழிமுகிலாய் விளங்குந் தேவே.

உரை:

     பொன்னாய், மணியாய், போகமாய், புறமாய், அகமாய், புனிதமாய், மண்ணாய், மலையாய், கடலாய், மதியாய், இரவியாய், மற்றுமாய், முன்னாய், பின்னாய், நடுவாய், முழுதாய் நாதமுற முழங்கி, எங்கும் மின்னாய்ப் பரவி, இன்பவெள்ளம் தேக்கிக் கருணை வெள்ளம் பொழியும் முகிலாய் விளங்குபவன் மகாதேவன். எ.று.

     உலகியல் வாழ்வில் பெறலாகும் போகத்துக்குப் பொன்னும் மணியும் சிறந்தனவாதலால் 'பொன்னாகி மணியாகிப் போகமாகி' என்று கூறுகிறார். 'பொன்னானாய் மணியானாய் போகமானாய் பூமிமேல் புகழ்தக்க பொருளே' என்று நாவுக்கரசரும் நவில்வது காண்க. பொன்னும் மணியும் ஆகிய பொருளாங்கல் அதன் புறமோ அகமோ சிவம் எனின், எல்லாம் சிவமே என்றற்குப் 'புறமாகி அகமாகி' என்றும், அப் பொருளிடையே மாசு மறுவும் காணப்படுவது கண்டு, அவையும் சிவமோ என வினவுவார்க்கு, அவற்றின் தூய்மை நிலையே சிவம் என்பார் 'புனிதமாகி' என்றும் புகல்கின்றார் ; மண் என்பது எதுகை நோக்கி மன்னென்றாயிற்று, மண்ணகத்தும் மலையும் கடலும் கண்டவர்,. விண்ணகத்தே சந்திரன் சூரியன் முதலியவற்றிலும் சிவம் விளங்குவது கண்டு 'மதியாகி ரவியாகி மற்றுமாகி' என்றார். பொருள்கட்கு அகமும் புறமும் உளவாவது போலக் காலத்தாலும் இடத்தாலும் முன்பின் இடை என்ற கூறுகளும் உண்மைபற்றி, 'முன்னாகிப் பின்னாகி நடுவுமாகி முழுதுமாகி' என்று கூறுகின்றார். நிலமுதல் நாததத்துவம் ஈறாக எங்கும் 'ஓம்' என நிறையும் ஒலியும் ஒளியுமாய், காண்பார்க்கு இன்பம் பெருக்கி இருள்கடிந்து அருள்புரியும் அக்காட்சியின் நலத்தை, 'நாதமுற முழங்கி எங்கும் மின்னாகிப் பரவி இன்பவெள்ளம் தேக்க வியன் கருணை பொழிமுகிலாய் விளங்கும்' என்று விளம்புகின்றார். மழை பொழிதலின்றி வெளுத்தும் கறுத்தும் காணப்படுவதும் உண்டாதலால், அந் நிலையின் நீக்கிக் 'கருணைபொழி முகிலாய்' என்று கூறுவது கருதத்தக்கது.

     (12)