13

      13. சிவயோகத்தில் சிந்தைக்கண் சிவத்தைக் கண்ட திருவாதவூரடிகள், அதன்பால் அருமையும் எளிமையும் அழகும் திகழ்வது கண்டு, ‘அருமையில் எளிய அழகே போற்றி’ என்றார். அந்த அருமையில் ஈடுபட்ட வடலூர் அடிகள் அதனை வியந்து அவ்வருமை இயற்கையா செயற்கையா என எண்ணி அருவமாதலும் உருவமாதலும் சிந்தித்து, அனாதியும் ஆதியுமாவதைத் தெளிந்து, இவ்வாறாதற்குக் காரணம் அதன் திருவருளே என்று கூறுகின்றார்;  அருமை யாவும் பெருமைக்கண் தங்குவதை உலகியல் காட்டுதலின், அரிதாகிய சிவத்தின் பெருமையை நோக்குகின்றார். அப் பெருமை உருவின்கண் ஒன்றிப் பொருள்தோறும் வேறுபடக் கண்டு வேறுபாடுகளை வியக்கின்றார். வேறுபாடு உருவத்திலும் நிறத்திலும் விளங்கித் தோன்றுவதுபற்றிக் கருமை வெண்மை முதலிய நிறவேறுபாடும் சிவமே எனத் தெரியக் காண்கிறார். அந்நிறங்கள் கலைத்திறத்தால் பலதிறப்படுவதும், அதனைப் படைக்கும் மன முதலிய அகக் கரணங்களையும் கை முதலிய புறக்கரணங்களையும் பார்த்து அவற்றிற்கு அந்தமாய் நின்று நின்று இயங்கும் ஆன்ம சிற்சத்தியை அறிகின்றார். அது ஞானவெளியில் நடுநிற்கும் அருள் ஒளியாய் குறைவிலா நிறைவுடைய வளம்படைத்துச் செழித்த ஒளிக்கதிர்களைப் பரப்பும் பெருஞ்சுடராய் அதாவது அருட்பெருஞ்சோதியாய்த் திகழ்வது காண்கிறார்.

2083.

     அரிதாகி அரியதினும் அரிய தாகி
          அநாதியாய் ஆதியாய் அருள தாகிப்
     பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப்
          பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற
     கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக்
          கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத்
     தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச்
          செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே.

உரை:

     அரிதாய், அரிதினும் அரிதாய், அனாதியாய், ஆதியாய், அருளாய், பெரிதாய், பெரிதினும் பெரிதாய், பேதமாய், அபேதமாய், கரிதாய், வெளிதாய், கலைகளாய், கலை வகை கடந்த பொருளாய், கரணாதீத வெளி நடுவில் அருளாகிய வண்மைக்கிரணச் செழுஞ்சுடராய்த் திகழ்பவன் தேவ தேவன். எ.று.

     அருமை உருவத்தை யுணர்த்த. அவ்வுருவம் இயற்கையாயின் அனாதியாதலும் செயற்கையாயின் ஆதியாதலும் இவ்விரண்டும் அருள் காரணமாக உளவாதலும் அறியப்படுவாதல் 'அரிதாகி அரியதினும் அரியதாகி' என்றும், 'அனாதியாய் ஆதியாய் அருளதாகி' என்றும் காட்சிமுறையிற் படிப்படியாக உரைக்கின்றார். பெரிய பொருள் எனப்படும் எல்லாவற்றிலும் பேதங்களும் அபேதங்களும் ஓரளவில் அகப்படாது பெருகியவண்ணம் இருத்தல் பற்றி, 'பிறங்காநின்ற' என்று கூறி, அவற்றை நிறங்களில் வைத்துக் காட்டற்குக் கருமை வெண்மைகளோடு இயைத்துரைப்பாராய், 'பிறங்கா நின்ற கரிதாகி வெளிதாகி' என்கின்றனர். பேதவகை பலவற்றையும் இனிது காட்டுவது ஓவியக் கலையாவது பற்றிக் 'கலைகளாகி' என்றும், கலைக்குரிய பொருளும் கரணமும் ஆன்ம சிற்சத்தியும், அவற்றை நுனித்துணருமிடத்துத் தோன்றும், ஞான வெளியையும், ஒன்றன்பின் ஒன்றாக அடிகளார் உணர்த்துகின்றார், இவ்வொளிகள் குறைவு நிறைவின்றி வளமாய்த் தமக்கு முதலாகிய அருட்தேவே' என்று தெரிவிக்கின்றார். 'தெரிதானம்' என்றது, நுணுகி நோக்குமிடத்து புலனாகும் ஞானநிலையம் என அறிக.

     (13)