14
14. பரம் பொருள் பற்றிய
சிந்தையுடையவர்க்கு வேதாந்த சித்தாந்த நெறிகளில் சமரச நோக்கம் இருத்தல் வேண்டும் என்று
எடுத்தோதிய வள்ளலார், அப்பொருள் உருவாதலும் அருவாதலும் அவற்றுள் ஊடுருவி நிற்றலும் இயல்பாக
இருப்பதை எண்ணுகின்றார். அதுபோல உயிர்களும் கேவலம் சகலம் சுத்தம் என்ற மூவகை நிலையில்
இயங்குவதையும், அக்காலைப் பரம்பொருள் அவற்றோடு உடனாய் நின்று அருளுவதையும் சிந்திக்கின்றார்.
இவ்வுயிர்கள் உலகில் நிகழ்த்தும் வாழ்வையும் நினைக்கின்றார். இந்த எண்ணங்கள் இனிது பாட்டாய்
வெளி வருகின்றன. உருவம் அருவம் என்ற நிலையின்றித் தானே தற்பரமாய் நிற்பது உண்டு.
இந்நிலையிலே நின்றொழியுமாயின் உயிர்கள் அதன் உண்மை யுணர்ந்து வீடு பேறெய்துவதற்கு
வாயிலே இல்லாது போகும். அதனால், அப் பரம்பொருள் தனது சத்தியிடமாக உருவப்பொருளாகிறது.
உருவம் பெற்றவிடத்து அவ்வுருவுக்குள் ஓர் உருவம் உளதாதல் வேண்டும். அதனை உள்ளடக்கி நிற்கும்
உருவத்திலும் அப்பொருளின் கலப்பு வேண்டும், இவ்வாறு ஒன்றினொன்றாக ஒடுங்கியிருக்கும் பொருளை
உன்னுகின்றார்.
2084. உருவாகி உருவினில்உள் உருவ மாகி
உருவத்தில் உருவாகி உருவுள் ஒன்றாய்
அருவாகி அருவினில்உள் அருவ மாகி
அருவத்தில் அருவாகி அருவுள் ஒன்றாய்க்
குருவாகிச் சத்துவசிற் குணத்த தாகிக்
குணரகிதப் பொருளாகிக் குலவா நின்ற
மருவாகி மலராகி வல்லி யாகி
மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்குந் தேவே.
உரை: உருவாய், உருவுள் உருவாய், உருவத்தில் உருவாய், உருவுள் ஒன்றாய், அருவாய், அருவுள் அருவாய், அருவத்தில் அருவாய், அருவுள் ஒன்றாய், குருவாய், சத்துவசிற்குணத்தாய் குணரகிதப் பொருளாய், மருவாய், மலராய், வல்லியாய், மகத்துவமாய், அணுத்துவமாய் வயங்குபவன் தேவதேவன். எ.று.
இதனுள் உருவாதலாவது 'பொறிகளால் காணப்படுதல். உருவப் பொருள் அனைத்தும் புறம் அகம் என இருதிறப்படுவன. புறவுருவைக் காணுங்கால் அகவுருவு காண்டலில் உயிர்கட்கு ஆர்வமுண்டாகும். ஆதலால், 'உருவாகி உருவினில் உள்ளுருவாகி' என்று குறிக்கின்றார். புறமும் அகமுமாகிய உருவத்தின் உள்ளீடு யாதாகலாம் என நுணுகி நோக்கி, ஆங்கும் பரம்பொருளின் இருப்பே உணரப்படுதலால், “உருவத்தில் உருவாய்” என்றும், உருவகை அனைத்திற்கும் ஒரே உள்ளீடாவது கண்டு 'உருவுள் ஒன்றாய்' என்றும் எண்ணுகின்றார். இங்ஙனமே அருவப்பொருளை நோக்குகின்றார். அதன்கண்ணும் அகமும் புறமும் அவற்றின் உள்ளீடும் கண்டு, 'அருவாய் அருவுள் அருவத்தில் அருவாய் அருவுள் ஒன்றாய்' என்று கூறுகின்றார். பொறிகட்கு அகப்படாதவை அருவப்பொருள் எனக் கொள்க. இங்ஙனம் உருவமும் அருவமுமாகிய பொருள் நிலைகளை உயிர்கள் ஆசிரியன் உணர்த்த உணர்தலால், ஆசிரியன் வடிவில் அறிவுதரும் பொருள் பரம்பொருளாதலை எண்ணிக் “குருவாய்' என்றார். குருவும் தெளிவும் ஞானமும் உடையனாதல் வேண்டுதலால், அதனைச் “சத்துவசிற் குணத்தாய்” என்றார். குணகளாக விளங்காத நிலை மூலப்பகுதி என்றும், விளங்க நிற்கும் நிலைக்குணத் தத்துவம் என்றும் கூறப்படும். படவே குணமும் மாயாகாரியமாதலால் மாயைக்கு அப்பாலாய், அதனால் தொடக்குண்ணாததாய் இருக்கும் பரம்பொருளோடு இயைபின்றி இருப்பதை எண்ணி, 'குணரகிதப் பொருளாய்' இருப்பதை உரைக்கின்றார். குணரகிதம் - குணம் இல்லாதது. இங்ஙனம் உருவாய் அருவாய்க் குணமாய்க் குணியாய் இருக்கும் நிலைக்கும் பரமாந்தன்மை நிலைக்கும் தொடர்புகாண முயன்று, அது மலரும் மணமுமாய், தொடர்புறுத்தும் சிற்சத்தியாய், அணுவிலும் மகத்திலும் (பெரிதிலும்) அதனதன் தன்மையுற்று விளங்குவதைக் கண்டு, 'மருவாய் மலராய் வல்லியாய் மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்கும்' என்றும் காட்டுகின்றார். வல்லி - மலரைத் தாங்கவல்ல காம்போடு ஒட்டிய புறவிதழ். வல்லியாய், மலராய், மருவாய் எனற்பாலது மாறி நின்றது. (14)
|