15

      15. உயிர்கள் உடம்பொடு கூடி உலகில் தோன்றுதற்கு முன்னுள்ள நிலையைக் கேவலம் என்றும், உலகில் தோன்றும் நிலையைச் சகலம் என்றும், பிறப்பு நீங்கி வீடுபெறும் நிலையைச் சுத்தம் என்றும் சைவ நூல்கள் கூறும். சகல நிலையில் உள்ளபோது அவற்றது உடம்பின் வேறுபாடு பற்றி இயங்குதிணை நிலத்திணை எனப்படும். இவற்றோடு ஒன்றாயும் உடனாயும் இருக்கும் பரம்பொருள் இவற்றின் வேறாதலும் உண்டு. உலகியற் பொருளில் கலந்து அகலம், குறுக்கம், நெடுமை முதலிய பண்புடையவாதற்கும், மேலும் அவை நிலையிற் சலிப்பின்றி ஒன்றற்கொன்று துணையாவதற்கும், தனித்தற்கும் அப் பரம் பொருளே ஏதுவாகும். அன்றியும், உருக்கொண்ட நிலையில் எண்குணம் கொண்ட இறையாய் விளங்குவதும், தண்ணிய தன் பேரருளால் உயிர்கள் தாம் செய்யும் வினைப்பயனை நுகரச்செய்வதும் பரம்பொருளின் மேலான செயலாவது தெளிகின்றார்.

2085.

     சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச்
          சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய்
     அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை யாகி
          அவையனைத்தும் அணுகாத அசல மாகி
     இகலுறாத் துணையாகித் தனிய தாகி
          எண்குணமாய் எண்குணத்தெம் இறையாய் என்றும்
     உகலிலாத் தண்ணருள்கொண் டுயிரை யெல்லாம்
          ஊட்டிவளர்த் திடுங்கருணை ஓவாத் தேவே.

உரை:

     சகலமாய், கேவலமாய், சுத்தமாய், சராசரமாய், அல்லவாய், தானாய், அகலமாய், குறுக்கமாய், நெடுமையாய், அகலமாய், துணையாய், தனியாய், எண்குணமாய், எண்குணத்து எமக்கும் இறையாய், தண்ணருள் கொண்டு உயிரை ஊட்டி வளர்க்கும் கருணை நீங்காதவன் தேவதேவன். எ.று.

     கேவலம், சகலம், சுத்தம் என்பது முறையாயினும் செய்யுளாதலால் பிறழவுரைத்தார். சகலத்தில் உயிர்ப்பொருள் சரமும் அசரமும் என இருவகையுறுதலின் “சராசராமாய்” என்றார். உயிரில் பொருள்களைப்பிரித்து “அல்லவாய்” என்றும், அவற்றோடு ஒன்றாயும் வேறுபட்டும் தனித்தும் நிற்பதனால் பரம்பொருளை “அல்லவாய்த் தானே தானாய்” என்றும் இசைக்கின்றார். இப்பொருள்களிடத்தே அகலம் குறுக்கம் நெடுமை முதலிய பண்புகள் காணப்படுதலால, அவற்றை எண்ணி உரைக்கின்றார். இப் பண்புகளோடு கலவாமலும் வேறு வகைகளால் சலித்துத் திரிந்து வேறுபடாமலும் இருத்தல் பரத்துக்கு இயல்பு. 'உறின் நட்டு அறின் ஒருவும்' உலகியல் துணைபோலன்றி, முரணி நீங்குதல் இல்லாத நற்றுணையாவதால், 'இகலுறாத் துணையாகி' என்கிறார். எண்குணமாய் விரிவதும், அவையெட்டும் தன்பால் நிறையப் பெற்று இறையாவதும் தெரிந்து “எண்குணமாய் எண்குணத்து எம்இறையாய்' என்றும், எவ்வுயிர்க்கும் நுகர்வன நுகர்விக்கும் அருணிலைக்குரிய சத்தி நீங்காவியல்பிற்றென்பது பட, “உகலிலாத் தன்னருள் கொண்டு” என்றும் சிறப்பிக்கின்றார்.

     (15)