16

      16. இவ்வாறே சித்தாந்த உண்மைகளை வள்ளலார் ஆராய்கின்றார். அவை பதி பசு பாசம் என்ற முப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, பதியாகிய சிவ பரம்பொருளையும், பசுவாகிய ஆன்மாவையும், பாசமாகிய மும்மலத் தொகுதியையும் ஆராய்ந்து காணும் இயல்புடையன. உலகத்தைச் சொல்லுலகம் பொருளுலுகம் என வகுத்து, சொல்லை வாசகம் என்றும், வாச்சியமென்றும் பிரித்து ஆராய்வது அதன் மரபு . வாச்சியம் சொற்பொருள். வாசக வாச்சியங்களைச் சத்தியும் சிவமுமாகக் கருதுவது சித்தாந்தம். பதிப்பொருள் சொல்லுக்கும் பொருளுக்கும் உரிய எல்லை கடந்தது. பொருள் நெறியில் ஒருகால் ஒளியாயும் ஒருகால் ஒருகால் இருளாயும் பதிப்பொருள் உளது. ஒருகால் சிந்திக்கும் சிந்தையிலும், தெளியும் அறிவிலும் அப்பதிப்பொருள் காணப்படுகிறது. பசுபாசங்களின் வேறாய் அவற்றை இயக்கும் பதியாயும், பசுக்களின் அறிவுக்கறிவாயும், பாசப் பொருள்களிற் கலந்து விளக்கமும் மறைப்பும் செய்தும் நிலவுகிறது. இன்ன தன்மைத்து என அறியக்கூடாததாயும், வெளியாகவும், ஒளியாகவும் உளது. பசுபாசங்கள் உலகிடை இருப்பதுபோலப் பதிபொருள் நாதாந்த முடிவில் நடம்புரிகிறது.

2086.

     வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த
          வாசகவாச் சியங்கடந்த மவுன மாகித்
     தேசகமாய் இருளகமாய் இரண்டுங் காட்டாச்
          சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த
     பாசமுறாப் பதியாகிப் பசுவு மாகிப்
          பாசநிலை யாகிஒன்றும் பகரா தாகி
     நாசமிலா வெளியாகி ஒளிதா னாகி
          நாதாந்த முடிவில்நடம் நவிற்றும் தேவே.

உரை:

      வாசகமாய், வாச்சியமாய், நடுவாய், வாசகவாச்சியம் கடந்த மோனமாய், தேசகமாய், இருளகமாய், சித்தகமாய், வித்தகமாய், பந்தபாசம் உறாத பதியாய், பசுவாய், பாச நிலையாய், ஒன்றும் பகராததாய், வெளியாய், ஒளியாய், நாதாந்த முடிவில் நடம்புரியும் தேவதேவன். எ.று

     ஒளிக்கும் இருட்கும் ஒன்றுக்கொன்று இடமாதலின் 'தேசகமாய் இருளகமாய்' என்றார். சிந்தைக்கண் காணுங்கால் சித்தகம்; அறிவின் கண் புலப்படலால் வித்தகம். பசு பாசங்களைத் தொழிற்படுத்தும் நிலை பதி என்றும், எல்லாம் கடந்த நிலை சிவம் என்றும் சருவஞானோத்தரம் கூறுகிறது. ஒளியில்வழி புலப்படாதாகையால் வெளியாகிய வெளியாகிய ஒளியாகியதென்று உரைக்கின்றார்.      (16)