17
17. படைக்கப்பட்டுத் தோற்றமளிக்கும்
உலகினையே வள்ளலார் நோக்குகின்றார். உலகத்தையும், அதன்கண் வாழும் உயிர்களையும், அவற்றை
வாழ்விக்கும் ஈசனையும் காண்கின்றார். படைத்தல் முதலிய தொழில்களை நிகழ்த்தும் பிரமன், திருமால்,
அரன் என்ற மூவரையும் பார்க்கின்றார். தத்துவக் கட்டமாகிய உடம்பின்கண் உறையும் ஆன்மாவாகிய
கூடத்தனையும், அவனுக்கு யாவும் மெய்ம்மைபோற் காட்டும் மாமாயையையும் காண்கின்றார். மாயையின்
மறைப்பைக் கிழித்து ஞானக்கண் கொண்டு நோக்க, எல்லாம் தானாய்க் காட்சி தரும் பிரமத்தை
நோக்குகிறார். பிரமத்தின் சேதனத் தன்மையையும் ஏனையவற்றின் அசேதனத் தன்மையையும் கண்டு,
இரண்டும் வேறாதல் தெளிக்கின்றார். அந்நிலையில் உயிர்களின் இவ்வுலக வாழ்க்கை, செல்வ
வறுமைகளையும் பிணியின்மை பிணியுடைமைகளையும் கொண்டுள்ளமை தெரிகிறது. நல்வினை செய்து
மேலுலகில் பெறும் பதங்களை எண்ணுகிறார். இவ்வாறன்றி, வேறு வேறாய் நிற்கும் சமயங்கள் உரைக்கும்
அறிவுரைகளையும், அவற்றிற்கும் எட்டாமல் வேண்டுவார் வேண்டும் அறிவு நல்கும் பரம்பொருளையும்
எண்ணி வியக்கின்றார். எல்லாப் பொருட்கும் மேலோங்கிப் பரமாதலும், பரம்பொருளாதலும்,
மேலும் கீழும் கலந்திருப்பதைபற்றிப் பராபரமாதலும், மேனோக்குங்கால் பரம் எனப்படும் எல்லாவற்றிற்கும்
பரமாதலும் காண்கின்றார். இக்காட்சிகளால் வடலூர் அடிகள் பரவசம் எய்துகின்றார். கண்ட காட்சிகளைத்
தொகுத்து உரைக்கின்றார்.
2087. சகமாகிச் சீவனாய் ஈச னாகிச்
சதுமுகனாய்த் திருமாலாய் அரன்றா னாகி
மகமாயை முதலாய்க்கூ டத்த னாகி
வான்பிரம மாகிஅல்லா வழக்கு மாகி
இகமாகிப் பதமாகிச் சமய கோடி
எத்தனையு மாகிஅவை எட்டா வான்கற்
பகமாகிப் பரமாகிப் பரம மாகிப்
பராபரமாய்ப் பரம்பரமாய்ப் பதியும் தேவே.
உரை: சகமாய், சீவனாய், ஈசனாய், திருமாலாய், சதுமுகனாய், அரனாய், மகமாயையாய், கூடத்தனாய், பிரம்மமாய், அல்லாத வழக்குமாய், இகமாய், பரமாய், சமயகோடிகட்கு எட்டாத கற்பகமாய், பரமாய், பரமமாய், பராபரமாய், பதியுமாயவன் தேவதேவன். எ.று.
சகம் சீவன் ஈசன் எனக் காண்பது ஒரு சமயம்; பிரமன் திருமால் அரன் எனக் காண்பது ஒரு சமயம்; மாயை, கூடத்தன், பிரம்ம எனக் காண்பது ஒரு சமயம்; இங்ஙனம் பல சமயங்களைக் கண்டுரைத்தலால் சமயகோடிதானாகி என்று கூறுகின்றார். (17)
|