18
18. மாயையாகிய சத்தியினின்றும் காரியப்பட்டு விளங்கும் உடம்பு கருவி கரணங்கள் உலகுகளைப்
படைத்துக் காத்து ஒடுக்கும் தொழில் வகை பற்றி, முதற்பொருளாகிய இறைவன், நாதம், விந்து, சிவம்,
சத்தி என அருவம் நான்கு; அயன், அரி, அரன், மகேச்சுரன் என உருவம் நான்கு; சதாசிவம் என
அருவுருவம் ஒன்று எனும் ஒன்பது பேதமாகத் தோன்றுவான் என்பது சித்தாந்தம். நாதம் விந்து என்ற
தத்துவங்கட்கு மேல் பரசிவம், பராசத்தி; அவற்றிற்கு மேலாகியது பரம்; பரதத்துவம், அணுபக்கம்,
சம்பு பக்கம் என்று பகரக்கூடியது என்றும், அங்ஙனம் பகரவொண்ணாதது என்றும், சாலோக முதலிய
பரகதி என்றும், அவற்றிற்கு அப்பாலாய் உள்ளது பரகதி என்றும் சித்தாந்த நூல்கள் கூறுகின்றன.
மேலும், இறைவன் ஒருவனே இவ்வாறு தத்துவராகவும் தத்துவேச்சுரராகவும் தோன்றுதற்குக் காரணம், ஆன்மாக்கள்பால்
கொண்ட கருணையே என்றும் அவைகள் கூறுவதை வள்ளலார் காண்கின்றார்.
2088. விதியாகி அரியாகிக் கீரிச னாகி
விளங்குமகேச் சுரனாகி விமல மான
நிதியாகுஞ் சதாசிவனாய் விந்து வாகி
நிகழ்நாத மாய்ப்பரையாய் நிமலா னந்தப்
பதியாகும் பரசிவமாய்ப் பரமாய் மேலாய்ப்
பக்கமிரண் டாயிரண்டும் பகரா தாகிக்
கதியாகி அளவிறந்த கதிக ளெல்லாம்
கடந்துநின்று நிறைந்தபெருங் கருணைத் தேவே.
உரை: விதியாய் அரியாய்க் கீரிசனாய் மகேச்சுரனாய் சதாசிவனாய் விந்துவாய் நாதமாய்ப் பரையாய், பரசிவமாய், பரமாய், மேலாய், பக்கம் இரண்டாய், இரண்டும் பகராததாய், கதியாய், கதியெல்லாம் கடந்து நின்று பெருங்கருணை நிறைந்திருப்பவன் தேவதேவன். எ.று.
இதன்கண் பக்கம் இரண்டு என்றது சம்புபக்கம், அணுபக்கம் என்ற இரண்டையுமாகும். இறைவன் செய்யும் ஐந்தொழில் சூக்குமம், தூலம் என இருவகை. சூக்கும ஐந்தொழிற்கென வரும் மால் அயன் முதலியோரைச் சம்புபக்கம் என்றும், அனந்தோர், மந்திரரேசர் முதலியோரை அணுபக்கம், கூறுவர். இருவகையினும் பலர் பல்வேறு வகைபடக் கூறுவதுபற்றி 'இரண்டும் பகராதாதி' என்றார். (18)
|