19
19. சித்தாந்த நூல்கள் கூறும் மாயை, சுத்தம், அசுத்தம், மூலப்பகுதி என மூவகைப்படும். இவற்றை
முறையே விந்து என்றும், மோகினி என்றும், மான் என்றும் கூறுவர். இம்மாயை, ஆன்மாக்கள் மலப்பிணிப்பினின்றும்
நீங்கி வீடுபேறு அடைதற்கு உதவும் கருவிகளாகும் . இவற்றாலும் பரஞானம் எய்துவது அரிதாவது காண்கின்றார்
வடலூர் வள்ளலார். கருவிகளால் எய்துவது பாசஞானம். பசு ஞானத்துக்கிடமாவது ஆன்மா. ஆன்மாவாகிய
தன்னை நோக்கித் தான் சிவத்தின் வேறாதலையும், உடனாகும் தகுதி தன்பால் இருத்தலையும் அறிகின்றார்.
தன்னின் வேறாய் விளங்கும் சிவஞானத் தோற்றத்தையும் ஆங்குப் பெறலாகும் காட்சி வாக்கு மனங்கட்கு
எட்டாத மௌன நிலையமாதலையும் உணர்கின்றார்.
2089. மானாகி மோகினியாய் விந்து மாகி
மற்றவையால் காணாத வான மாகி
நானாகி நானல்ல னாகி நானே
நானாகும் பதமாகி நான்றான் கண்ட
தானாகித் தானல்ல னாகித் தானே
தானாகும் பதமாகிச் சகச ஞான
வானாகி வான்நடுவில் வயங்கு கின்ற
மவுனநிலை யாகியெங்கும் வளருந் தேவே.
உரை: மானாய், மோகினியாய், விந்துவாய், அவற்றாற் காணாத வானமாய், நானாய், நானல்லவாய், நானே நானாகும் பதமாய், நான் கண்ட தானாய், தான் அல்லனாய், தானே தானாடும் பதமாய், சகச ஞானவானாய், வான நடுவில் வயங்கும் மௌன நிலையாய், எங்கும் வளருமவன் தேவதேவன். எ.று.
மான் முதலிய மூன்றிற்கும் மேலாய் அவற்றை அடக்கி நிற்கும் பரவெளியை 'வானமாகி' என்கின்றார். தானாகிய பரமன் இருக்கும் நிலை ஞானவெளியாதலின், அதனைச் “சகச ஞான வான்” என்று குறிக்கின்றார். வெயிலொளியின் நடுவே விளங்கும் வெயிலவன் போல ஞானவொளியின் நடுவில் ஞானசூரியனாகச் சிவம் வாக்குமனாதீதமாய் இருத்தல் பற்றி, “வானடுவில் வயங்குகின்ற மவுனநிலை” என்று உரைக்கின்றார். காலையில் ஏழும் ஞாயிற்றைக் கண்டபோது எங்கும் அதுவாய்த் தோன்றுவது போலச் சிவமும் விளங்குவதுபற்றி “எங்கும் வளரும் தேவே” என்றார். (19)
|