20
20. சித்தாந்த நூல்கள் ‘அத்துவாக்கள்’ என ஆறு பொருள்களைக் கூறும். அத்துவா என்னும் சொல்
“வழி” என்று பொருள்படும். ‘சிவ பதத்திற்கு சேறற்கு வழி போறலின் அத்துவா எனப்பட்டன’ என்பர்
மாதவச் சிவஞான முனிவர். அத்துவா ஆறும், கலை, தத்துவம், புவனம், வண்ணம், பதம், மந்திரம்
என வரும். சிவத்தை நோக்கிச் செல்லுங்கால் “சுத்தாத்துவா” என்றும், உலகை நோக்கும்போது
அசுத்தாத்துவா என்றும் கூறப்படும். சுத்தாத்துவாக்களை வள்ளலார் எண்ணுகின்றார். சிவத்தை அடைய
முயல்வார்க்கு ஒவ்வொன்றும் சிவஞானம் விளங்குதற்கு துணை செய்வது கண்டு, அவற்றிற் சிவத்தைக்
காண்கின்றார். அத்துவாவிற் காணப்படும் புவனங்களில் இந்திரன், சந்திரன், இரவி, வானவர்,
தானவர் முதலியோர்கள் சிவமயமாய்க் காட்சி தருகின்றனர். அதே நிலையில் அவர்கள் சிவத்தின்
வேறாய தெய்வங்களாகவும் தோற்றம் அளிக்கின்றனர். புவனங்களை நோக்குகின்றார். புவன மக்களின்
உடல்கருவிகளையும் அவர்கள் வழங்கும் எழுத்தும் சொல்லும் மந்திரமாகிய சொற்றொடரும் ஆகிய
கூறுகளை நோக்கி, அவற்றைப்பற்றியுரைக்கும் நூல்களையும் ஆக்கி, அவை சிவமயமாகவும் வேறாகவும் உள்ளதையும்
உணர்கின்றார். இவ்வத்துவாக்களின் வேறாய், அவற்றை
வழியாகக் கொள்ளும் தன்னையும் தனக்கு உடமையாகும். அவற்றையும் காண, அவற்றிற்கு அப்பாலாகிய
நிவிர்த்தி, அதற்கு அப்பாலாகிய பிரதிட்டை, வித்தை, சாந்தி, அதீதை முதலிய கலைகளையும்
கடந்து நிற்பது பரம்பொருள் என்று தெளிகின்றார்.
2090. மந்திரமாய்ப் பதமாகி வன்ன மாகி
வளர்கலையாய்த் தத்துவமாய்ப் புவன மாகிச்
சந்திரனாய் இந்திரனாய் இரவி யாகித்
தானவராய் வானவராய்த் தயங்கா நின்ற
தந்திரமாய் இவையொன்றும் அல்ல வாகித்
தானாகித் தனதாகித் தானான் காட்டா
அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய்
அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே.
உரை: மந்திரமாய், பதமாய், வண்ணமாய், கலையாய், தத்துவமாய், புவனமாய், சந்திரனாய், இந்திரனாய், இரவியாய், தானவராய், வானவராய்த், தயங்கும் தந்திரமாய், இவையாவும் அல்லவாய், தானாய், தனதாய், தான் நான் காட்டா அந்தரமாய், அப்பாலாய், அப்பாலுக்கு அப்பாலாய் அமர்ந்தவன் தேவதேவன். எ.று.
மந்திரம் - நிறைமொழிமாந்தர் உரைக்கும் அறிவுரை. சொல் - மந்திரத்துக்கு உறுப்பாய் பொருள் குறித்து நிற்பது; வன்னம் சொல்லுக்கு உறுப்பாகும் எழுத்து; கலை - உடம்பு. தத்துவம் - உடலுக்குள் அமையும் கருவிகள். புவனம் - உடம்புடைய உயிர்கள் வாழும் இடமும் உலகுமாகும். நிவிர்த்திக்கு மேலுள்ள கலை நான்கையும் 'அப்பாலாய் அதற்கப்பாலாய், அப்பாலுக்கப்பாலாய்' என்று குறிக்கின்றார். இதுகாறும் மகாதேவன், சமயதத்துவ தாத்துவிகக் கூட்டங்களில் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் அல்லவாயும் நிற்கும் திறம் கூறினார். தாத்துவிகம் - தத்துவங்களின் அடியாகத் தோன்றுவது, அவற்றின் தொகை அறுபது. இவற்றோடு தத்துவம் முப்பத்தாறும் சேர்த்து தத்துவம் தொண்ணூற்றாறு என்பதும் வழக்கம்.. (20)
|