21
21. சிவயோகத்தின் இயல்நலங்கள்
பலவற்றையும் விரித்துரைத்துப் போந்த வடலூர் வள்ளலார், யோகப்பயனான சிவஞானம் நிறைந்து
விளங்கும் யோக ஞானிகளின் நலங்களை உரைக்கின்றார். அப் பெருமக்கள் இருந்தவிடத்தே
புறக்கருவிகளான கண்களை மூடி அகக்கண்ணால் விரிந்து விளங்கும் இப் பிரபஞ்சத்தை நோக்குகின்றார்.
உயர்ந்து நிற்கும் மலைகளையும் சூழ்ந்து கிடக்கும் கடல்களையும் காண்கின்றார். அவற்றின் உயரத்திலும்
ஆழத்திலும் சிவபரம்பொருளின் திருவடிப் பேரொளி திகழ்கிறது. அதே நிலையில் மலைமேல் அரனையும்,
கடல்மேல் திருமலையும், மலர்மேல் அயனையும் காண்கின்றார்; அம் மூவுருவும் சிவனது திருவுருவாய்
விளங்குவது காண்கின்றன. இல்லறநிலை துறவுநிலை என்ற இருவகை நிலையில் நிற்பவர்க்கும் இறைவன்
விளங்குவதைக் காண்கின்றார். இருவகையினருள்ளும் சரியை முதலிய நான்கு நெறிகளும் புரிவோர் உளர்.
அவர்களுடைய நெறியிலும் பரம்பொருள்
அருள்புரிவதை அறிகின்றனர். வேதம் சாத்திரம் முதலிய கலைத்துறையில் நிற்பவர் உள்ளத்திலும்,
பத்திநெறி நிற்பவர்கண் தோள் தலை முதலிய உறுப்பின் மேலும், கருத்து, உணர்வு ஆகிய இவற்றைக்
கொண்டு செய்யும் அன்பு முதலியவற்றின் மேலும் பரசிவம் காட்சிப்படுகிறது.
2091. மலைமேலும் கடன்மேலும் மலரின் மேலும்
வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே
நிலைமேலும் நெறிமேலும் நிறுத்து கின்ற
நெடுந்தவத்தோர் நிறைமேலும் நிகழ்த்தும் வேதக்
கலைமேலும் எம்போல்வார் உளத்தின் மேலும்
கண்மேலும் தோள்மேலும் கருத்தின் மேலும்
தலைமேலும் உயிர்மேலும் உணர்வின் மேலும்
தகுமன்பின் மேலும்வளர் தாண்மெய்த் தேவே.
உரை: அரன் அரி அயன் என்ற மூவுருவில் வழங்கும் கோவாய், நிலைமேலும் நெறிமேலும் தவத்தோர் நின்ற நிலைமேலும் வேதக்கலை மேலும், எம்போல்வார் உள்ளம், கண், தோள், கருத்து, தலை, உயிர், உணர்வு, அன்பு என்ற இவற்றின் மேலுமாய் விளங்குபவன் தேவ தேவன். எ.று.
மலை - கயிலைமலை; கடல் - பாற்கடல்; மலர் - தாமரை மலர். மூவுரு அரன், அயன் என்ற மூவுரு; மூவர் என்னாது மூவுரு என்றது, மூவர் உருவம் சிவனது திருவுறு என்றற்கு; “படைத்தளித் தழிப்ப மும்மூர்த்தி களாயினை” (திரு. எழு) என ஞானசம்பந்தர் அறிவுறுத்துகின்றார். நிலை - இல்லறம். நிலை - இல்லறம். நெறி - சரியை கிரியை யோகம் ஞானம். பொறி புலன்களை நெறிப்படுத்து நிறுத்தும் தவத்தோரை “நிறுத்துகின்ற நெடுந் தவத்தோர்” என்கிறார். நிறுத்தும் நிறையே தவத்துக்கு உறுதியாய்ச் சிவபரம் பொருளை எய்துவிப்பது; அதுபற்றியே நிறையே எடுத்துரைக்கின்றார். வைதிக நூற்புலமையை 'வேதக்கலை' என்று கூறுகின்றார்; அதுவும் சிவப்பேற்றுக்கு வாயில் என்பர். எம்போல்வார் என்றது, இவற்றை மேற்கொள்ளாது பத்திநெறி யொன்றே பற்றி நிற்போர் என்றற்கு. (21)
|