22

     22. சிவஞானிக்குள்ள தனிச்சிறப்பு சிவத்தைத் தன் ஞானக் கண்ணாற்கண்டு இன்புறுவதாகும். சிவத்தைக் காணும்போது அது தூய செம்பொன்னின் நிறமும் ஒளியும் கொண்டு திகழும்; அதனுடைய அளப்பரிய உயரமும் பரப்பும் ஞானக்காட்சியின் எல்லை முற்றும் பரந்து அப்பாலும் செல்வது போலும் தோற்றம் தருகிறது. மேலும், காண்பார் கண்ணளவாய் நில்லாது, காணும் மனமும் அதன் புறத்தே சூழவுள்ள அகங்காரம், சித்தம், புத்தியாகிய சூழலும் நிறைந்து, புறத்தே உடல் முழுதும் உலகுமுழுதும் அணுப்புதைக்கவும் இடனின்றி எல்லாவற்றிலும் அகமும் புறமும் நிறைந்து தோன்றக் காண்பர். ஞானவெல்லைக்கண் இருந்து நோக்குதலால் ஞானத்தின் வருவாயாகிய அனைத்து நூல்களின் பொருளையும் அந்நூல்களில் தலையாய தெனப்படும் ஆரணத்தின் உட்பொருளாயும் அப்பரம்பொருள் நிலவுவதைச் சிவஞானிகள் காண்பர். ஞானநூல்களில் புதைந்து கிடக்கும் ஞானப்பொருளைக் கற்குங்கால், இன்பம் பெருகி மேன்மேலும் அவற்றைக் கற்றற்கே உள்ளத்தை ஈடுபடுத்தும்; அக் கல்விவாயிலாகப் பெறப்படும் அறிவின்பம் கரும்பு தின்று சுவை கண்டு இன்புறுவது போலும் உணர்வை நல்கி மகிழ்விக்கும். அவ்வுணர்வு சிறக்குங்கால், நினைந்ததை நினைத்தாங்கு நினைந்த பொருளின்கண் பெறுவித்து, அறிஞர்கள் கற்பித்துக் கூறும் கற்பகம் போலும் காட்சி பயக்கும்; அக் கற்பகத்தில் காய்த்துக் கனிந்த கனி போன்ற இன்பம் நல்கும். இந் நலங்களை இவையெனச் சுட்டிக் காட்டாலாகாமை பற்றி மெய்ம்மை நிறைந்த சொற்களால் சிவஞானிகள் தெளித்துரைப்பார்; அங்ஙனம் உரைக்குங்கால், உரைக்கும் நாவின்கண் மாறாத இன்பம் ஊறிப் பரம்பொருளின் அருளொளியைக் கட்புலனாகக் காணச் செய்யும்; அக் காட்சி விண்ணில் சுடரும் ஞாயிற்றின் பேரொளியில் கலந்து அதுவாயும், அதனுள் இருந்து வானவெளிப் பரப்பு முற்றும் நீண்டு ஒளிரும் ஒளியாயும் திகழும்; அவ்வொளியை நோக்கும் சிவஞானி அதன்கண் நிறைந்து நிற்கும் பரசிவத்தைக் கண்டு பரவசம் எய்துகிறான்.

2092.

     பொற்குன்றே அகம்புறமும் பொலிந்து நின்ற
          பூரணமே ஆரணத்துட் பொருளே என்றும்
     கற்கின்றோர்க் கினியசுவைக் கரும்பே தான
          கற்பகமே கற்பகத்தீங் கனியே வாய்மைச்
     சொற்குன்றா நாவகத்துள் மாறா இன்பம்
          தோற்றுகின்ற திருவருட்சீர்ச் சோதி யேவிண்
     நிற்கின்ற சுடரேஅச் சுடருள் ஓங்கும்
          நீளொளியே அவ்வொளிக்குள் நிறைந்த தேவே.

உரை:

     பொற்குன்றாய், அகம்புறம் பொலிந்த பூரணமாய், ஆரணத்துட் பொருளாய், கற்றோர்க்குக் கரும்பாய், தானகற்பகமாய், அதன் தீங்கனியாய், திருவருட் சீர்ச்சோதியாய், விண்ணில் நிற்கின்ற சுடராய், சுடருள் ஒளியாய், அவ்வொளிக்குள் நிறைந்த தேவன் மகாதேவன். எ.று.

     சிவஞான நிலையில் நின்று சந்திக்கின்றனராதலின், ஞானக் காட்சியில் திகழும் சிவசொரூபத்தைப் பொற்குன்றே என்று எடுத்து மொழிகின்றார். ஞானத்திரளாய் மலைபோல் அளப்பரிய உயரமும் அகலமும் கொண்டு விளங்குதல் தோன்ற, பொற்குன்றம் உவம்மாயிற்று. “ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியால் மேல் ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள்போலும்” என்று திருஞானசம்பந்தர் கூறுவது இங்கே நினைவு கூரற்பாலது. உலகின் அகத்தும் புறத்தும் உயிர்களின் அகத்தும் புறத்தும் படிந்திருக்கும் இருள் ஊனவிருள் என்று ஞானசம்பந்தர் காட்டுதலால், அதனைக் கருத்துட்கொண்டு காணும் வள்ளற் பெருமான், “அகம் புறமும் பொலித்து நின்ற பூரணமே” என்று புகல்கின்றார். இங்ஙனம் பெற்ற சிவப்பெருங் காட்சிக்குத் துணை செய்த நூல்களை நல்கிய அருளாசிரியன்மார்களை நன்றியுணர்வு நினைப்பிக்கின்றது. அந் நினைவு படிப்படியாகக் கூர்ந்து நோக்கும் எல்லாவற்றிற்கும் தலையாய, உண்மை ஞானத்துக்கு உறையுளாய் விளங்கும் ஆரணங்களைக் காட்டுகிறது.      அவை வேதமும் வேதாந்தமுமாய், ஆகமும் ஆகமாந்தமுமாய், மேன்மேலும் “ஓங்கி ஆழ்ந்து, அகன்ற” நுண்ணியவாய்ச் சிவத்தை உட்பொருளாகக் கொண்டிருப்பது காணப்படுதலால், “ஆரணத்து உட்பொருளே” என்று வள்ளலார் குறிக்கின்றார். அந்த நூற்கல்வி, ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் அடங்காது நீண்டு செல்லும் நீர்மைத்தாதலால், அதனைக் கற்கும் ஞானிகளை “என்றும் கற்கின்றோர்” என்றும், கற்குந்தோறும் கரும்பு தின்போர்க்கு உண்டாகும் இன்பம் போல இனிய சுவை பயர்ந்து சோர்வு படாதபடி ஈர்த்துச் செல்லுமாறு புலப்பட, “இனிய சுவைக்கரும்பே” என்றும் கூறுகின்றார். இனிய சுவை நுகர்ச்சி இன்பப் பெருக்குக்கு எல்லையாக நூல்கள் உரைக்கும் கற்பகமரத்தை நினைப்பிக்கிறது. கற்பகம் தன்னை யடைந்தவர் வேண்டியதை வேண்டியாங்குக் கொடுக்கும் கொடை நலம் உடையதென்பவாகலின், அடிகளார் இங்கே அதனைத் “தான கற்பகம்” என்றும், அதனிடையே விளையும் தீங்கனி நினைப்பார் நினையும் நினைவனைத்தும் நிறைவு செய்யும் சிறப்புடையதாதலின், அதனையும் விடாது “கற்பகத் தீங்கனியே” என்றும் கூறுகின்றார். “தானகற்பகமே தீங்கனியே” என்னாமல், 'கற்பகத் தீங்கனியே' எனக் கற்பகம் என்ற சொல்லைப் பெயர்த்தும் கூறியது, கற்பகத்தின் நலமுற்றும் வற்புறுத்துதற்கு, “பெற்றதன் பெயர்த்தும் நியமம்” என்பது உரையாசிரியன்மார் காட்டும் தருக்கமுடிவு. உள்ளத்தே ஒன்றிய தெளிவுடையார்க்கன்றி நாவில் உண்மையுரை விரவாது; அத்தெளிவு, உரைக்கும் சொற்களில் ஒளிவிட்டுத் திகழும்; அன்றியும் அஃது உரைக்கும் நாவின்கண் ஊறாத அமிழ்தூறி, உரைக்கும் தமக்கேயன்றிக் கேட்போர் செவிவழியே பாய்ந்த அவர் உள்ளத்தும் இன்பம் நிறைவிக்கும். அந்த இன்பம் எங்ஙனம் உண்டாகிறது? எனின், உள்ளத்தில் உறையும் திருவருள் உண்மையின் ஒண்மையிற்கலந்து தெளிவினிற் சிறந்து சொல்வழி தளிர்த்து இன்பம் சுரந்தளிக்கிறது. பெருமாள், “வாய்மைச் சொற்குன்றா நாவகத்துள் மாறாஇன்பம் தோற்றுகின்ற திருவருட்சீர்ச் சோதி” என்று கூறுகின்றார். உலகியற் பொருள்கள் தரும் இன்பம், அப்பொருள் சிறிதாயவழி ஆசையை எழுப்பிப் பெரியதாயவழி உவர்ப்பாய் மாறித் தெவிட்டும் இயல்புடையது; திருவருள் இன்பம் நுகரும் தோறும் பெருகுவதன்றி இயல்பு மாறித் தெவிட்டும் சிறுமையுடையதன்று. அதனாற்றான் “மாறா இன்பம் தோற்றுகின்ற திருவருள்” என்று தெரிவிக்கின்றார். திருவருளின் ஒளி சிவத்தின் பரவொளியே யாயினும் ஆண்மவொளியில் கலந்திருக்கும் மலவிருளைப் போக்கி இன்புறுத்தும் சிறப்புடைய தென்றற்குத், “திருவருட் சீர்ச்சோதி” என்று தெரிவிக்கின்றார். இவ்வருள் ஒளியே ஞாயிறு முதலிய கோள்களும் நாண்மீன்களும் பெற்றொளிரும் ஒளியாதலால், அது விளங்குதற்பொருட்டு, “விண் நிற்கின்ற சுடரே அச்சுடரும் ஓங்கும் நீள் ஒளியே அவ்வொளிக்குள் நிறைந்த தேவே” என்று கூறுகின்றார். ஓரிடத்தே பிறக்கும் ஒளி அங்கேயே நின்றொழிய நீண்டு பரவும் இயல்பிற்று. ஒரு மணித்துளியின் சிறுதுளிக்கு 168300 மைல் நீளம் என ஒளிவேகத்தை இன்றைய விஞ்ஞானிகள் கண்டு அளந்துள்ளனர் என்று அறிக.

     (22)