23
23. வடலூர் வள்ளல் திருவருட்கண்ணாக அது நல்கும் ஒளியில் சிவத்தைக் காண்கின்றார். அதன் ஞானவொளி
விரிந்து எங்கும் பரந்து திகழ்கின்றது தமது ஆன்மவறிவில் படிந்து கிடக்கும் இருள் அகன்று
போகிறது. ஞானவொளியின் ஒவ்வொரு கதிரும் ஒளிவளம் சிறந்திருக்கிறது. அந்நிலையில்
வள்ளலார் உலகவரை நோக்குகின்றார். தாம் பெறும் நலம் அனைத்தும் உலகவர் பெறல் வேண்டும் என்னும்
அருள் வள்ளலாதலால், இங்ஙனம் பார்ப்பது அவர்க்கு இயல்பாகிறது. பொருளும் வினையும் புகழ்வேட்கையும்
செறிந்த மக்கள் வாழ்வு முற்படத் தோன்றுகிறது; அவர் உள்ளம் அவை காரணமாகச் செயல்பட்டு
மாசுபடிந்து கிடக்கிறது; அதன்கண் அருளுணர்வு இல்லை; அருள் ஒளியும் இல்லை; அதனால் அவ்வருட்கு முதலாகிய
பரம்பொருள் நினைவும் இல்லை. ஒருபால் அவர் மனக்கண்ணில் பரசிவத்தின் தூய செம்மணி போலும்
ஒளி விளக்கம் காட்சி தருகிறது. அந்தோ, இவ்விளக்கம் இப்பெருமக்கள் உள்ளத்திற் பயிலவில்லையே
என்று பரிவெய்துகின்றார். ஏனை மக்களையும் உயிர்களையும் நோக்குகின்றார்; மாசற்ற மக்களின்
உடலையும் பொருளையும் உடன் நோக்குகின்றார்; எங்கும் எப்பொருளிலும் சிவத்தின் தண்ணொளி
கலந்து அவற்றின் இருப்பிலும் இயக்கத்திலும் ஒன்றாய் இயைந்து காரணப்பொருளாய்க் காட்சி
தருகிறது. ஒருபால் சிவஞானச் செல்வர்கள் சாந்த வடிவினராய்ச் சிவவொளியில் தோய்ந்து சுகமே
நுகர்கின்றனர்; அருளுணர்வும் அருட்செயலும் அவர்களின் சூழலில் ஆர அமர்ந்துள்ளன. இவ்வினிய காட்சி
வடலூர் வள்ளலின் உள்ளத்தை உவகைக் கடலில் ஆழ்த்துகின்றது; அழகிய இப்பாட்டு உருவாகி
வெளிவருகிறது.
2093. தேசுவிரித் திருளகற்றி என்றும் ஓங்கித்
திகழ்கின்ற செழுங்கதிரே செறிந்த வாழ்க்கை
மாசுவிரித் திடுமனத்தில் பயிலாத் தெய்வ
மணிவிளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
காசுவிரித் திடுமொளிபோல் கலந்து நின்ற
காரணமே சாந்தமெனக் கருதா நின்ற
தூசுவிரித் துடுக்கின்றோர் தம்மை நீங்காச்
சுகமயமே அருட்கருணை துலங்கும் தேவே.
உரை: செழுங்கதிராய், தெய்வ மணிவிளக்காய், ஆனந்த வாழ்வாய், எங்கும் கலந்து நின்ற காரணமாய், சுகமயமாய், அருட்கருணை துலங்கும் தேவன் மகாதேவன். எ.று.
ஒளிப்பொருட்டாய 'தேஜஸ்' என்ற வடசொல் 'தேசு' எனத் தமிழில் வழங்குகிறது. அடிகளார் இளமையில் பயின்று அறிவு வளரப்பெற்றவிடம் சென்னை மாநகர்; பல்வேறு மொழி வழங்கும் மக்கள் நிறைந்தது அம்மாநகர். அதனால் கற்றோர் கல்லாதோர் என்ற வேற்றுமையின்றி எல்லோருடைய பேச்சிலும் வேற்றுமொழிகள் கலந்திருப்பது இயல்பு . அதனால், அடிகளாருடைய எழுத்தில் பல மொழிகள் விரவியிருக்கின்றன. வடசொற்களையும் பிற திசைச் சொற்களையும் தமிழ் எழுத்துக்களால் மேற்கொள்வதைத் தொல்காப்பியர் முதலிய பழந்தமிழ் இலக்கணப் புலவர் விலக்கவில்லை. பிறமொழிகளின் எழுத்துக்களை மேற்கொள்வது உலகில் எந்த மொழியாளரிடத்தும் காணப்படாத பொதுப்பண்பு. வடவெழுத்துக்களைப் புணர்க்கவிரும்பும் வடமொழியாளரும் தமது வடமொழியில் வேறு மொழிகளின் எழுத்தைச் சேர்த்து எழுதமாட்டார்கள்; எழுத விரும்பவும் மாட்டார்கள். உலகியலில் ஒளி பரவுமிடத்து ஆங்கு நிற்கும் இருள் அவ்வொளிக்குள் கலந்துவிடும்; ஒளி தடைப்படுமிடத்து வெளிப்படும் ஞானவொளிக்குள் இருள் ஒடுங்குதற்கு இடமில்லாமையால், அதனை அகற்றுவது செயலாதல்பற்றி, 'இருள் அகற்றி' என்றார். ஒளிவிளக்கமும் இருள் நீக்கமும் உலகியலில் உடன்நிகழ்வன; ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்வதில்லை. ஞானவொளி இருளை நீக்கிப் பின்னர் விளக்கம் புரிவது, மேலும், சிறிது சிறிதாய்ப் பெருகிப் பின் தேயும் இயல்புடைய உலகொளி போலாது, தோன்றிய ஞானவொளி மேன்மேலும் ஓங்கிப் பெருகும் இயல்பிற்றாதலின், 'என்றும் ஓங்கித் திகழ்கின்ற செழுங்கதிரே' என்கிறார். “ஒளிவளர் விளக்கே” என்று சிவத்தைச் சான்றோர் குறிப்பது இக்கருத்து விளக்குவதற்கே என அறிக. மேன்மேலும் வளர்தற்கேற்ற செழுமை அவ்வொளியின்கண் இருப்பது காட்டற்குச் “செழுங்கதிர்” என்று குறிக்கின்றார். பொருளும் அதனைச் செய்தற்குரிய வினை செயலுணர்வும் அயராது செய்தற்குரிய ஆர்வமும் நிறைந்த வாழ்வைச் “செறிந்த வாழ்க்கை” எனச் செப்புகிறார். இச்செறிவு மனவமைதி நல்காது, ஆரா இயற்கைத்தாகிய அவாவை எழுப்பித் தீநினைவையும் செயலையும் சொல்லையும் தோற்றுவித்து மனத்தை மாசுப்படுத்துவதால், தூய சிவம் தோயாமை கண்டு “செறிந்த வாழ்க்கை மாசு விரித்திடும் மனத்திற் பயிலாத் தெய்வமணி விளக்கே” என்றார். தெய்வ மணிவிளக்காகிய சிவஞானம் பயின்றவிடத்து இன்பவாழ்வு இடம் பெறுதலின் “ஆனந்த வாழ்வே“ என்று தெரிவிக்கின்றார். பொற்காசு தான் தங்குமிடமெல்லாம் ஒளி விரிப்பதுபோல் எல்லாப்பொருளிலும் கலந்து ஒன்றாய் இயைந்து நிறகும் அருளொளி உயிர்க்கு அறிவொளியும் உயிரில் பொருட்கு ஒழுங்கும் நல்கி, அவற்றின் பொருண்மைக்கும் தொழின்மைக்கும் காரணமாதல் பற்றி, “காசு எங்கும் விரித்திடும் ஒளிபோல் கலந்து நின்ற காரணமே” என்று குறிக்கின்றார். புலனடக்கம் மனவொடுக்கம் ஆகியவற்றால் வருவித்து மேற்கொள்ளப்படுவது என்பது உணர்த்துவதற்குச் சாந்தத்தை உடுக்கும் உடையாக்கிச் “சாந்த மெனக் கருதாநின்ற தூசுவிரித்து உடுக்கின்றோர்” என்று சாந்த நிலையினரான சீலர்களைச் சிறப்பிக்கின்றார்; அவர்கள் நுகர்வது சுகம்; அந்நிலையில் அவர்கள் மனநிலை கலையாவண்ணம் காப்பது திருவருள் என அறிக. (23)
|