24
24. சாந்தமெனக் கருதுகின்ற
உடையுடுத்த சான்றோர்களை ஒரு பாலும், சிவபரம்பொருளை ஒருபாலும் கண்ட வள்ளலார், சிவத்துக்கும்
அவர்கட்கும் உள்ள தொடர்பை நினைக்கின்றார்; அச்சான்றோர்க்குச் சிவன் தலைமைப்
பொருளாய் விளங்குவது காண்கின்றார். தலைவனாய்ச் சிவனாய் நிற்கும் அப்பெருமானுடைய குணங்களை
நோக்குகின்றார்; எண் குணவடிவினனாய், ஞானவின்பம் நல்கும் அவனுடைய நலங்கள் புலனாகின்றன.
அவற்றில் செழும்பாகு போலும் தீஞ்சுவை உணரப்படுகிறது. அவன்பாலும் அச்சான்றோர்பாலும் காணப்படும்
மோனநிலை விளங்கி எம்மருங்கும் பரந்து நிற்கிறது. அம்மோனச் சூழலில் உண்மை ஞானமும் உலவா
இன்பமும் நிலவுகின்றன. அந்நிலையைக் காணும் கண்களில் பதிந்து அது பார்க்குமிடம் எங்கும் தோன்றுகிறது.
முக்கண்கொண்ட சிவனது திருமுகம் தோன்றிக் கரும்பு தின்னுங்கால் பிறக்கும் இன்பம்
பெருக்குகிறது. அவனது திருவுருவம் வானத்துறையும்
தெய்வத்தை நினைப்பிக்கிறது;
அத்தெய்வத்தின் வடிவிலும் சிவவடிவமே திகழ்கிறது; எனினும், அத் தெய்வங்கள் சிவத்தைக்
காணும் வேட்கையுற்றுத் தேடித் திரிவதையும் தேடிக் காணாமல் வாடுவதையும் அடிகளார் அறிகின்றார்.
பூப்போலும் அத்தெய்வங்களின் மேனி வாட்டம், சிவனது வாடாத திருவடிமலரை நினைப்பிக்கிறது; திருவடிப்பூவைக்
காணும் நினைவு அதனுள் எழும் ஞானமணத்தை நுகர்கிறது; அந்த ஞானம் எங்கும் எப்பொருளிலும் கலந்து
நீக்கமற நிறைந்து நிற்கிறது.
2094. கோவேஎண் குணக்குன்றே குன்றா ஞானக்
கொழுந்தேனே செழும்பாகே குளிர்ந்த மோனக்
காவேமெய் அறிவின்ப மயமே என்றன்
கண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத்
தேவேஅத் தேவுக்குந் தெளிய ஒண்ணாத்
தெய்வமே வாடாமல் திகழ்சிற் போதப்
பூவேஅப் பூவிலுறு மணமே எங்கும்
பூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே.
உரை: கோவாய், எண்குணக்குன்றாய், ஞானக் கொழுந்தேனாய், செழும்பாகாய், மோனக்காவாய், மெய், அறிவு இன்பமயமாய், என் கண்ணாய், கரும்பாய், வானத்தேவாய், தேவுக்கும் தெய்வமாய், சிற்போதப்பூவாய், மணமாய், பூரணமாய் நிறைந்தருளும் புனிதத்தேவன் மகாதேவன். எ.று.
சார்ந்த வடிவினரான முனிச்செல்வர்க்குத் தலைவனாகச் சிவன் விளங்குதல் உணரப்படுதலால், “கோவே” என்று எடுத்து மொழிகின்றார். “நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல போகத்தான் யோகத்தையே புரிந்தான்” என்று ஞானசம்பந்தர் கூறுவது நினைக. கோவாய் விளங்கும் திருவுருவில் எண் குணங்களும் நிறைந்து நிலையிற் சலியா நீர்மை புலப்படுதலின் சிவனை, “எண்குணக்குன்றே” என்று பரவுகின்றார். குணக்குன்றாய்க் காட்சிதரும் திருமேனியில் ஞானவின்பம் தேன் அருவி போலவும் செழும்பாகு போலவும் பெருகி மகிழ்விக்கிறது. தேனினும் பாகு இறுதிஇன்பம் மிகுவிப்பதாதலின், தேவனோடு செழும்பாகினைச் சேரக் கூறுகின்றார். சிவக் குன்றின் திருவடியை நோக்குகின்றார்; அது நறுமலர் பூத்த ஞானப்பூங்காவாகப் பொலிகின்றது. புள்ளும் மாவும் இருந்து செய்யும் ஓசை வகையின்றி ஞானப்பூங்காவில் மோனநிலையே முழுதும் நிலவுவது கண்டு, “குளிர்ந்த மோனக் காவே” என்று மொழிகின்றார். அதனுள் சத்தாம் தன்மையும் சித்தாம் தன்மையும் இன்பமும் ஒருங்கு உள்ளமை கண்டு, “மெய்யறிவு இன்பமயமே” என இயம்புகிறார். இவ்வினிய காட்சியைச் சிந்தைக் கண்ணிற் கண்ட வள்ளற்பெருமான் தமது காட்சி முற்றும் அது கலந்து நிறபது பற்றி “என்றன் கண்ணே” என்றும், கண்ணிறைந்து சிவக்காட்சி காணக்காண இன்பம் சுரப்பது உணர்ந்து” “முக்கண் கொண்ட கரும்பே” என்றும் பாராட்டுகின்றார். காணப்பட்ட சிவத்திருமேனி வானுறையும் தெய்வங்களும் காண விளங்குதலால், “வானத் தேவே” என்று கூறுகி்றார். அதே நிலையில் வானத்துறையும் தெய்வங்கள் நன்கு தெரியமாட்டாமல் திகைப்புற்று வாடநின்ற காட்சி புலப்படுவதால், “அத்தேவுக்கும் தெளியவொண்ணாத் தெய்வமே” என்று உரைக்கின்றார். முக்கண்ணும் தெய்வவடிவும் கண்டவர், அதன் திருவடியாகிய மலரை நோக்குகின்றார்; அதன்கண் ஞானமணம் கமழ்வதுணர்ந்து, “வாடாமல் திகழ் சிற்போதப் பூவே அப்பூவின் நறுமணமே” என்றும், அஃது எங்கும் நீக்கமற நிறைந்து நிலவுவதை, “எங்கும் பூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே” என்று புகழ்ந்தோதுகின்றார். (24)
|