25
25. ‘அருளாம் வண்மைச் செழுங்கிரணச் சுடராகித் திகழும் அருட்பெருஞ்சோதியில் நின்ற வடலூர்
அடிகள் நிலவுலகில் வாழ்கின்றாராயினும், அவருடைய கண்ணும் மனமும் உலகியற் பொருள்களையும் அவற்றைச்
சூழ்ந்து விளங்கும் வானம் முதலிய பூதங்களையும் கண்டு, அவற்றோடு கலந்து நிற்கும் சிவத்தின்
பெருநிலையை நோக்குகின்றார். எல்லாம் சிவமயமாய் விளங்குகின்றன.
2095. வானேஅவ் வானுலவும் காற்றே காற்றின்
வருநெருப்பே நெருப்புறுநீர் வடிவே நீரில்
தானேயும் புவியேஅப் புவியில் தங்கும்
தாபரமே சங்கமமே சாற்று கின்ற
ஊனேநல் உயிரேஉள் ஒளியே உள்ளத்
துணர்வேஅவ் வுணர்வுகலந் தூறு கின்ற
தேனேமுக் கனியேசெங் கரும்பே பாகின்
தீஞ்சுவையே சுவையனைத்தும் திரண்ட தேவே.
உரை: வான், காற்று, தீ, நீர் வடிவாய், இவற்றைத் தாங்கும் புவியாய், தாவரமாய்ச், சங்கமமாய், ஊனாய் உயிராய் உள்ளொளியாய், உள்ளத்துணர்வாய், உணர்வில் ஊறும் தேனாய், கனியாய், கரும்பின் பாகாய், பாகின் சுவையாய் அனைத்தும் திரண்டவனாவன் தேவதேவன். எ.று.
வடலூரடிகட்கு வாய்த்த ஞானகுருவாகிய வாதவூரடிகள் சிவபரம்பொருளை நினைந்து வாழ்த்துமிடத்து, முதற்கண் வானத்தையும், பின்பு தாம் இருந்து நினைக்கும் மண்ணையும், பின்னர் இவற்றின் இடை நிற்கும் வளி முதலிய பூதங்களையும், பின்னர் மண்ணிற் காணப்படும் பொருள்களையும் கண்டு காண்பிக்கின்றாராகலின், அந்நெறியையே கடைப்பிடித்து வடலூர் வள்ளலும், வானத்தையும், வானுலவும் காற்றையும், காற்றில் வரு நெருப்பையும், நெருப்பிலுறும் நீரையும், நீர் சூழ்ந்த நிலத்தையும் நிலத்தில் தங்கும் நிலத்திணை இயங்குதிணையாகிய உயிர்ப்பொருளையும் முறையே காண்கின்றார். தாபர சங்கமம் என்பது நிலைத்திருப்பன இயங்குவன ஆகிய இரண்டையும் குறிக்கும் . இவற்றுள் உயிருள்ளனவும் இல்லனவுமாகிய இருவகையும் அடங்குதலால், முதற்கண் அவற்றைச் சுட்டி, 'புவியில் தங்கும் தாபரமே சங்கமமே' என்று குறிக்கின்றார். மலையும் குன்றும் உயிரில்லாத தாபரம். மேகங்களும் மின்னும் மண்பொடியும் பிறவும் உயிரில்லாத சங்கமம். உயிர்வகையைச் சார்ந்த மரம் செடி கொடி முதலிய தாபரங்களையும் ஊர்வன பறப்பன முதலிய சங்கம உயிர் வகைகளையும் நோக்கிய அடிகளார், உயிர்வகைகள் தங்குதற்கு இவை உடம்பாயும் உடம்பொடு கூடியவை தங்கி வாழ்வதற்கு இடமாயும் நிலவுலகு இருத்தல் கண்டே 'இப்புவியில் தங்கும் தாபரமே சங்கமமே' என்று உரைக்கின்றார். இனி, உயிர் தங்கும் உடலை நோக்குகின்றார். அவ்வுடற்குள் ஊணும் உள்ளமும் இருத்தலைக் கண்டுணர்கின்றார். உள்ளத்தே ஒளியும், அவ்வொளிவழி உணர்வும் நிலவுவது புலனாகிறது. அவ்வொளி துணையாக உணரப்படுவது உணர்வு என அறிக. காணப்படும் பொருளொடு கலந்து உள்ளூற நுணுகிநுணிகிச் சென்றுசென்று சிவத்தைக் காண்கின்றார். காணுங்கால், அதன்பால் ஊறாத அறிவின்பம் ஊற்றெடுத்து வருகிறது. அதனை சுவைத்து இன்புறும் அடிகளார் தாம் இன்புறுவதை உலகும் இன்புற வேண்டும் என்ற அருளியல்பால் உலகவர்க்கு இனிது தெரியும் தேனையும், மா, பலா, வாழை என்ற முக்கனியையும் கரும்பையும், பாகினையும் காட்டி, அவற்றின் சுவையனைத்தும் ஒருங்கே திரண்டவழிப் பிறக்கும் சுவையோடு ஒப்பவைத்து உணர்த்துகின்றார். இந்நாளில் விஞ்ஞானம் இலக்கியம் முதலிய துறைகளில் ஈடுபடும் நுண்ணறிவாளர், நாளும் கண்டு அனுபவிக்கும் இச்சுவை வெறுங்கற்பனையன்று ; உண்மையென உரைப்பர் . நல்வினை புரிவது நல்லுயிராதலின் அதன் உள்ளத்தே இறைவனது அருளொளி புலப்படுவது பற்றியே 'நல்லுயிரே உள்ளொளியே' என்று வள்ளலார் உரைக்கின்றார். உணர்வால் உணருமிடத்து உணர்வும் அதனோடு ஊறும் இன்பமும் வேறு வேறு நில்லாது ஒன்றாய்க் கலந்துதோன்றும் என்றற்கு, 'உணர்வு கலந்து ஊறுகின்ற தேவே' என்றார். நாவரசரும் 'சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன' என்று நவில்கின்றார். சிந்திக்குங்கால் சிந்தனைக்கண் திருவருள் ஒளி தோன்றுமுன்னே அருளின்பச் செந்தேன் முந்துதலின், 'சிறந்து செந்தேன் முந்தும்' என்கிறது அப்பரது அருள்மொழி.. (25)
|