26

      26. காற்று முதலிய பூதங்கட்கு இடமாகிய வானத்தைக் கண்ட வடலூர் வள்ளல், காற்றும் வழங்காத மேலிடத்தை நோக்கி, அதனை ‘விண்ணே’ என்று கூறுகின்றார். சங்க காலச் சான்றோர் அதனை ‘வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்’ (புறம்) என்று குறிப்பர். அவ்விண்ணிடமும் காண்பார் காணும் உருக்கொண்டு விளங்குதலால் ’விண்ணுருவே’ என்று குறிக்கின்றார். இங்ஙனம் மேன்மேலும் நோக்குங்கால் விண்ணுக்கும் அப்பாலாய் ஒன்று இருத்தல் வேண்டுமென வுன்னி, அதனை விண்முதல் என்று விளம்புகின்றார். விண்முதலுக்கும் விண்ணுக்கும் இடைப்பகுதியை வெளியென்றும், அதுவும் புறமும் அகமுமாய்ப் பொலிவதை எண்ணி விண்ணுள் வெளி, அவ்வெளி விளங்கும் வெளி என்றும் விரிவாகச் சிந்திக்கின்றார். இச் சிந்தனைக்கு முதலாகிய விண்ணுருவைக் காண்டற்குத் துணைசெய்த கருவியாகிய கண்ணை நினைக்கின்றார். கண்ணடுவேயுள்ள மணிபோலும் பாவையைக் காண்கின்றார். அதன்பால் ஒருவகை ஒளியுண்மையை உணர்கின்றார். அவ்வொளியிடைக் கலந்து நிற்கும் ஒளிக்கதிர்களை யுன்னுகின்றார். அக் கதிர் வெளியே ஓடி வருவதால், அது தோன்றுதற்குரிய முதலைக் கதிரின் வித்து எனக் கருதிக் கூறுகின்றார். அக் கதிரொளி வெப்பமின்றித் தண்ணியதாய் இருப்பதை உணர்ந்து, அவ்வொளிக்குத் தட்பம் பயந்து திருவருளை எண்ணி, ‘தண்ணே’ என்றும், அது திங்களின் ஒளியிலும்  கலந்திருப்பதை நினைந்து ‘தண்மதியே’ என்றும் தெளிகின்றார். வானத்தில் தோன்றும் தண்மதி போல யோகியர் யோகத்திலும் ஒரு தண்மதி தோன்றுவதை எண்ணுகின்றார். விண்ணில் தோன்றும் திங்கட்கதிரில் மதுவுண்டென்றும் அதனைச் சில புள்ளினம் உண்ணுமென்றும் பௌராணிகர் உரைப்பர். யோகக் காட்சியில் ஒரு தண்மதி தோன்றி அமுதம் பொழியும் என்பர் பாதஞ்சல யோகியர். அவற்றையும் அடிகளார் மேற்கொண்டு, தண்மதியில் தோன்றும் அமுதையும் அதன் சாரத்தையும் இங்கே நினைக்கின்றார். மதியின் அமுதம் நினைவிற்கு வரவும் இசையமுதம் தோன்றி இன்பம் செய்கிறது. இவை யாவும் மெய்த்தவமுடையோர் காட்சியில் விளங்குவது காண்கிறார். 

2096.

     விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்
          வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன்
     கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
          கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே
     தண்ணேதண் மதியேஅம் மதியில் பூத்த
          தண்ணமுதே தண்ணமுத சார மேசொல்
     பண்ணேபண் ணிசையேபண் மயமே பண்ணின்
          பயனேமெய்த் தவர்வாழ்த்திப் பரவும் தேவே.

உரை:

     விண்ணாய், விண்ணுருவாய், அதன் முதலாய், அதன் உள்வெளியாய், அது விளங்கும் வெளியாய், கண்ணாய், கண்ணின்மணியாய், கண்ணின் ஒளியாய், கண்ணொளியிற் கலந்து நிற்கும் கதிராய்,. கதிரின் வித்தாய், தண்ணாய், தண்மதியாய் மதிபூத்த அமுதமாய், அமுதின் சாரமாய், பண்ணாய், பண்ணின் பாட்டிசையாய், பண்மயமாய், அதன் பயனாய் உளது என மெய்ம்மை காணும் தவத்தார் கண்டு வாழ்த்திப் பரவப் பாடுபவன் மகாதேவன். எ.று.

     விண்ணினது உண்மை கண்ட அறிவு, அதன் உருநலங்களை விழைதலின் 'விண்ணுருவே' என்று கூறி, அதற்குரிய முதலை நாடி, 'விண்முதலே' என்று உரைக்கின்றார். இவ்வகையில் விண்முதலையும் அதனை அடக்கிநிற்கும் வெளி முதலியவற்றையும் எண்ணிய அடிகளார், அவை அனைத்தும் இறைவன் திருவருள் தோய்ந்து இருப்பித்தலின், திருவருள் வடிவாகக் கருதி வியக்கின்றார். கண்ணிற்கு இயல்பாகவே ஒருவகை ஒளியுண்டு என்பது சைவசமயக் கருத்து. வெயிலொளியிருப்பினும் கண்ணில் இயற்கையொளி இல்லையாயின் கண்கள் காணா என்பர். அதுபற்றியே 'கண்ணொளியே' என்று கூறுகின்றார். ஒளி என்பது பல கதிர்களின் கற்றை; வெயிலொளியின் ஒரு கதிரை ஏழுவகை நிறமுடைய தனித்தனிக் கதிர்களாக விஞ்ஞானம் பகுத்துக் காட்டுகிறது. இவற்றிற்கு யாதானுமொரு மூலம் இருத்தல் வேண்டும் என்பது சற்காரிய வாதம் . அதனை மேற்கொண்டது சைவமாதலால் 'கதிரின் வித்தே' என்று இசைக்கின்றார். அவ் வித்தினைத் திருவருளை என்று எண்ணுதலால், இறைவனைக் 'கண்ணுட் கதிரின் வித்தே' என்று பரவுகின்றார். அவ்வொளியில் தட்பப் பண்பு நிலைபெறுதலால் 'தண்ணே' என்கிறார். தண்மை சான்ற பேரொளி திங்களிடத்தே இனிது காணப்படுதலால், 'தண்மதி' நினைக்கப்படுகிறது. மதி என்ற சொல்லே மதுவையுடையது. என்று பொருள்படுதலின் அம் மதுவினை “அமுதம்” என்பது இலக்கிய வழக்கு. அவ்வமுதத்தின் சாரம் திருவருள் என்றற்கு 'அமுத சாரமே' என்று அடிகள் போற்றுகின்றார். ஒளிப்பொருளில் தோன்றும் அமுதத்தை நினைந்த அடிகள், ஒளியே ஒலியாதலின் அவ்வொலியின் பருவடிவாகிய பருவடிவாகிய இசையை நினைக்கின்றார். இனிமை நிறைந்த இசை பண்ணாய்ச் 'செவிச்சுவை அமுதம்' (பெருங்.) எனப்படுவது பற்றிப், 'பண்ணே' 'பண்ணிசையே' என்றும், அவ்விசையமுதம் உண்டவர் அறிவுச்செயல்களை இழந்து அதன் மயமாவது கண்டு “பண்மயமே” என்றும், அதனால் விளையும் பயன் அறிவு இசைவடிவினனான இறைவன்பால் சென்று சேர்வதாகலின், 'பண்ணின் பயனே' எனவும் பரிந்து பாடுகின்றார். நம்பியாரூரரும், இறைவனை 'ஏழிசையாய் இசைப்பயனாய்' உள்ளான் (சுந். தே) என்பது காண்க. இங்ஙனம், விண்முதல் பண்ணின் பயன் ஈறாகவுள்ள அனைத்தும் திருவருட் கலப்பாய் இறைவடிவைத் தவத்தோர் மனக் கண்ணில் காட்டலின், 'மெய்த்தவத்தோர் வாழ்த்திப்பரவும் தேவே' என்று வடலூர் அடிகள் வகுத்துக் காட்டி வற்புறுத்துகின்றார். ஒளியும் ஒலியும் ஒன்றே என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டு திரைப்படங்களில் அமைந்திருப்பதை யாவரும் நினைதல் வேண்டும் .

     (26)