27
27. வடலூர் வள்ளல் சிவஞானிகளை நோக்குகிறார். அவருடைய திருவுள்ளம் சிவவொளி விரவிச் சிவமணம்
கமழ்கிறது. சிவத்தின்பால் பெருகிய அன்பு நிறைந்து சிவமாகிய ஞேயம் மலிந்துளது. அவரது உள்ளத்தாமரையின்
நடுவில் இருக்கும் பொகுட்டாகிய மணி சிவக்காட்சி நல்குகிறது. புறத்தே அவர்கள் மெய்யெல்லாம்
திருநீறும் கண்மணியும் கிடந்து ஞானாபரணமாகத் திகழ்கின்றன. அவர்களுணர்வு பொருளின் மெய்ம்மைகண்டு
பரவும் மேன்மை யுடைத்தாகலின், அந்நெறியில், அந்நெறியில் மெய்ப்பொருளாகிய சிவம், காட்சி
முற்றும் அற்புதமாய் இன்பம் தருகிறது. அவ்வின்ப நுகர்ச்சி வாக்கு மனங்களை ஒடுக்குகிறது; மோனநிலை
வந்து மேவுகிறது; மோனத்தின்கண் ஆனந்தம் பொலிந்து அழகுசெய்கிறது. அந்நிலையில் அவருடைய மனக்கண்ணில்
புலனாகும் சிவவுரு, ஆண் என்றும் பெண்ணென்றும் அலியென்றும் காணுமாறும், காணவியலாதவாறும் தோன்றுகிறது.
இன்ன வுரு என்ற துணிய முடியாதவாறு பேரொளியாய்ப் பிறங்குகிறது. அவ்வொளியும் அழகிய தூண்போல்
நின்று அனைத்தையும் தாங்குகிறது. அதனைக் காணக்காண அறிவின்பம் தோன்றிச் சுகம் தருகிறது; அச்
சுகமான நிலையில் சிவசொரூபம் காட்சிப் பட்டுக் கடல்போல் பெருகும் ஆனந்தத்தை
விளைவிக்கிறது. அதனைப் படிப்படியாக உணர்ந்துரைக்கின்றார் வடலூர் அடிகளார்.
2097. மாணேயத் தவருளத்தே மலர்ந்த செந்தா
மரைமலரின் வயங்குகின்ற மணியே ஞானப்
பூணேமெய்ப் பொருளேஅற் புதமே மோனப்
புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே
ஆணேபெண் உருவமே அலியே ஒன்றும்
அல்லாத பேரொளியே அனைத்துந் தாங்குந்
தூணேசிற் சுகமேஅச் சுகமேல் பொங்குஞ்
சொரூபானந் தக்கடலே சோதித் தேவே.
உரை: மாண்புடைய நேயமுடைய உள்ளத்தாமரை மணியாய், ஞானப்பூணாய், மெய்ப்பொருளாய், அற்புதமாய், மோன அமுதாய், ஆனந்தப் பொற்பாய், ஆண் பெண்ணுருவமாய், அலியாய், இவற்றுள் ஒன்றும் அல்லாத பேரொளியாய், அனைத்தையும் தாங்கும் தூணாய், சிற்சுகமாய், அதன்மேற் பொங்கிவழியும் சொரூப ஆனந்தக் கடலாய்ச் சோதிவடிவான் தேவனானவன் மகாதேவன். எ.று
மாண்நேயம் - மாண்புடைய அன்பு; அதனையுடையவரை மாணேயத்தவர் என்று கூறுகிறார். அன்புடன் அறியப்படும் பொருளும் நேயம் எனப்படும். அந்நெறியில் சிவத்தை யறிந்து அதனை நெஞ்சின்கண் நிலைபெறவுடையவர் என்றற்கு 'மாணேயத்தவர்' என்று உரைக்கின்றார். இதழ் குவிந்த தாமரை மொட்டுப்போல் தலைதாழ்ந்து கிடக்கும் இதயம் சிவநினைவு எழுங்கால் மேலே நிமிர்ந்து சிவவொளியில் இதழ்விரிந்து மலரும் . அம்மலரின் நடுவிடத்தேயுள்ள மணி சிவமாய்க் காட்சி தருவது கண்டு, 'உளத்தே மலர்ந்த செந்தாமரை மலரின் வயங்குகின்ற மணியே' என்று குறிக்கின்றார். 'இதயத் தாமரையை ஆதாரமாகக் கொண்டு, சத்தி மூர்த்தியும் சிவன் மூர்த்திமானுமாய் எழுந்தருளும்' என ஞானநூல்கள் கூறுகின்றன. “காட்டு கமலாசனமேல் ஈசர் சதாசிவமும் கலாமூர்த்தமாம் இவற்றின் கண்ணாகும் சத்தி; வீட்டையருள் சிவன் மூர்த்தமானாகிச் சத்திமேலாகி நிற்பன் இந்த விளைவறிந்து போற்றே“ (சிவ. சித். 9 : 9) என்பதற்குச் சிவஞான முனிவர், “அண்டமோர் அணுவாம் பெருமை கொண்டு கரணங்கெல்லாம் கடந்து நின்ற அவ்விறைவனே அணுவோர் அண்டமாம் சிறுமை கொண்டு ஆன்மாக்கள் உய்தற் பொருட்டு உடம்பினுள்ளும் அவ்வாறு நிற்கின்றான்; அதனை அறிந்து செய்யாவழிப் பூசையாற் பயனில்லை என்பார், “இந்த விளைவறிந்து போற்றே என்றார்” என்பர். கல்வியறிவு ஒருவற்கு அணியாய் அழகு செய்வதுபோல, ஞானமும் சிவஞானிகட்குப் பூணாரமாய் அணிசெய்தல் பற்றி, 'ஞானப்பூண்' என்று கூறுகின்றார். பூண்பன கற்பனைப பொருளாதலால், அவற்றையடுத்து, மெய்ப்பொருள் நினைக்கப்படுகிறது. இங்கே மெய்ப்பொருளாகிய சிவம் காட்சிப்படுதலின், அதனைக் கண்டவழிப் பிறக்கும் மதியை “சாலா மருட்கையானாய” அற்புதம் என்கிறார். அற்புதத்தின் பயனாக மோனம் எய்திப் புத்தின்பம் தருதலால், “மோனப் புத்தமுதே” என்றும், அதனை நுகருங்கால் பிறக்கும் பேரின்ப மகிழ்ச்சியை, 'ஆனந்தம் பொலிந்த பொற்பே' என்றும் அடிகளார் முறைப்படுத்தி மொழிகின்றார். உலகியலில் ஆனந்தம் மேலிட்டிருப்பார்பால் மேனியிற் பொலிவு தோன்றல்போலச் சிவானந்தம் மேலிட்டிருப்பார் மேனியிற் சிவவொளி பரந்து பொலிவு தருதலால் “ஆனந்தம் பொலிந்த பொற்பே” என்று புகல்கின்றார். உலகியல் இன்பம் தன்னை நுகர்வார் அறிவை மயக்குவது போலின்றிச் 'சிவானந்தம் அறிவை விளக்கி நுண்ணிதாக்குதலால்' ஆனந்தம் பொலியும் மெய்ப்பொருளின் இயல்பைச் சிவஞானிகள் நுணுகி நோக்குகின்றார்; அவர்க்கு இஃது ஆண்பெண் அலியுருவாகவும் அல்லவாகவும் காட்சிதருகிறது. அதுபற்றியே, “ஆணே பெண்ணுருவமே அலியே ஒன்றும் அல்லாத பேரொளியே” என்று பிரித்துரைக்கின்றார். “ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள்நல்கிச் சேண்நின்றவர்க் கின்னும் சிந்தை செயவல்லான்” (ஞானசம்.) என்று ஞானசம்பந்தரும் கூறுவது காண்க. இங்ஙனம் காணப்படும் பேரொளி உலகியலில் எண்ணிறந்து தோன்றும் அண்டங்கள் அத்தனையும் தன்னைச் சூழ்ந்து உலவ, அவற்றைத் தாங்கி நிற்கும் சூரியன்போல அனைத்தையும் தாங்கி நிற்பதுபற்றிச் சிவசூரியனை 'அனைத்தும் தாங்கும் தூணே' என்று சொல்லுகின்றார். வெயிலொளி பனியும் நடுக்கமும் நீக்கி இன்ப அமைதி நல்குவதுபோலச் சிவவொளி மலவிருளின் பனிப்பும் நடுக்கமும் போக்கி அறிவமைதி நல்குவது கண்டு 'சிற்சுகமே' என்றும் இயம்புகின்றார். அந்த இன்பமும் சிவத்தின் சொரூபநிலையைக் காண்பதாற் பிறத்தல் தோன்றச் 'சொரூபானந்தக் கடல்' என்று சிறப்பிக்கின்றார். சொரூபம் என்பது உண்மையுரு. வெண்டாமரை, செந்தாமரை யெனப் புறவுருவ நிலையை நோக்காமல், தாமரை என்றவழிப் பிறர்க்கும் உணர்வுரு சொரூபம் எனப்படும் என அறிக. (27)
|