28
28. உலகிடை வாழும் உயிர்கள் தாம்
பெற்ற உடலை ஞானப்பேற்றுக்குக் கருவியாகக் கருதாது, உலகியல் வாழ்க்கை இன்ப நுகர்ச்சிக்கே
கருவியாகக் கொண்டு, அதற்கு வேண்டிய உணவு உடை உறையுள் முதலியவற்றிற்கே அலைந்து திரிகின்றன.
இதனைத் திரிபுக் காட்சி என உணர்ந்து, காணப்படும் பொருள்தோறும் கலந்து ஒன்றாயும் உடனாயும்
இருந்து உயிர்களை வாழ்விக்கும் பரம்பொருளை அப் பொருள்களிடையே பொறிகளாற் கண்டு மனத்தால்
ஒன்றியிருந்து சிந்தித்துணரும் செயல் யோகக் காட்சியாகும். அக் காட்சியே மேற்கொண்டு
விளங்கும் பெரியோர் சிவயோகியராவர். அவர்கள் தம்முடைய சிந்தைக் கண் ஒன்றி நோக்கும் நுட்பத்தை
நம் வடலூர் வள்ளல் தமது உணர்வின் கண் நேர்பெறக் காண்பதோடு நமக்கும் காட்டுகின்றார்.
காணப்படும் உலகம் ஐம்பூதங்களாகக் காட்சி தருகிறது. அவை தோன்றி ஒடுங்கும் இடத்தை உன்னுகிறார்.
அந்த இடத்தைத் தன்கண் கொண்டது பரம்பொருள் எனக் கருதுகிறார். இப் பூதங்கள் தோன்றி ஒடுங்கும்
திறத்தை வேதம் கூறுகிறது. வேத வுரையால் விளையும் ஞானத்தை நினைக்கின்றார். அதன் முடிவில்
பலனாகும் உபநிடத ஞானத்தை உணர்கின்றார். அதன் முடிவும் பரம்பொருளிடத்தே நிற்பதை நினைக்கின்றார்.
இங்ஙனம் வேத வேதாந்தத்தைக் கண்ட அடிகளார், சிவாகமமாகிய சித்தாந்தத்தை ஒப்ப எண்ணுகின்றார்.
அவை உரைக்கும் நிலம் முதலாக நாதம் ஈறாகவுள்ள முக்கூற்று முப்பத்தாறு தத்துவங்களைச் சிந்திக்கின்றார்.
நாதத்தைக் கண்டவர்க்கு அதற்கு அந்தமாகவுள்ள பரததத்துவத்தில் நின்று பரமம் படைத்தல் முதல்
தொழில் ஐந்தும் தோன்றுமாறு நடம் புரிவது புலனாகிறது. அந்த நடனம் ஞான நலம் சிறந்து நிற்கிறது.
அதன் காட்சி, காண்பவர்க்கு ஞானமாகிய இன்பநிலையை எய்துவிக்கிறது. அந்நிலையோடு அமையாது நோக்குமிடத்து,
ஞானவின்பம் அறிவெல்லையெல்லாம் நிறைந்து அப்பாலும் கடந்து குறைவிலா நிறைவுற்றுத் தோன்றுகிறது.
இத் தோற்றத்தைச் சிவயோகியர் தம் உள்ளத்தில் கண்டு இன்புறுகின்றார்.
2098. பூதமே அவைதோன்றிப் புகுந்தொ டுங்கும்
புகலிடமே இடம்புரிந்த பொருளே போற்றும்
வேதமே வேதத்தின் விளைவே வேத
வியன்முடிவே அம்முடிவின் விளங்கும் கோவே
நாதமே நாதாந்த நடமே அந்த
நடத்தினையுள் நடத்துகின்ற நலமே ஞான
போதமே போதமெலாம் கடந்து நின்ற
பூரணமே யோகியருள் பொலிந்த தேவே.
உரை: பூதமாய், அவை தோன்றி யொடுங்கும் புகலிடமாய் இடம் கொண்ட பொருளாய், வேதமாய், வேதவிளைவாய், வேதமுடிவாய், முடிவில் விளங்கும் கோவாய், நாதமாய், நாதாந்தத்து நிகழும் நடனமாய், அதனை நடத்தும் நலமாய், ஞானபோதமாய், போதம்கடந்த பூரணமாய், யோகியர் உள்ளத்திற் பொலிபவன் மகாதேவன். எ.று.
பூதம் தன்மாத்திரை ஐந்தனடியாகத் தோன்றும் நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என்பன. வேதம், நான்மறை எனப்படுவன. வானத்திலிருந்து வளியும், அதிலிருந்து நெருப்பும், அதிலிருந்து நீரும், அதிலிருந்து நிலமும் தோன்றும் என வேதம் கூறிற்று என்பர் பரிமேலழகர். வேதாந்தத்தின் விளைவு, சீவனும் சகமும் பரசிவமாகிய பிரமத்தின்கண் தோன்றி ஒடுங்கும் என்பது; சகமனைத்தும் பிரமமயம் என்பது வேதாந்தத் துணிபு. நாத நாதாந்தங்கள் சிவாகம சித்தாந்தம். நாதாந்தம் ஞானவெளி அல்லது சிதாகாசம் என்று கூறப்படுவதுண்டு. சிதாகாசப் பெருவெளியில் இறைவன் நிகழ்த்தும் கூத்தின்கண் படைத்தல் காத்தல் முதலிய ஐந்தும் நிகழ்கின்றன என்பர் உமாபதி சிவனார். இந்த ஐந்தொழிற்றிருக் கூத்தை உள்ளத்தில் ஒன்றியிருந்து துவாதசாந்தத்தில் காண்பது சிவ யோகம்; இதனைச் செய்பவர் சிவயோகியர். ஆதலால் தான் 'யோகியருட் பொலிந்த தேவே' என்று புகழ்கின்றார்.
“நீடும், சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
ஒடும் உயிரெழுத்து ஓங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெருமான் உகந்து
ஆடும் இடம் திருஅம்பலம் தானே” (திருமந். 2764)
என்று திருமூலர் உரைப்பது இங்கே நினைவு கூரத்தக்கது. (28)
|