29

      29. இங்ஙனம் பரம்பொருளின் பரமாந் தன்மையையே நினைந்து வரும் வள்ளலார், பரந்து நிற்கும் ஞாலத்தை நோக்குகின்றார். அதன் பல பகுதிகளும் காண்பர்க்கு இனிய காட்சி தந்து விளங்கும் நிலைமையை நோக்கி, இவ்வாறு விளக்கமுறுதற்குக் காரணமாயுள்ள பரம்பொருளை எண்ணுகின்றார். ஞாலம் காலத்தொடு கலந்து இயலுவதைக் கருதுகிறார். காலம் கடந்து நிற்கும் ஞானிகட்குக் கதியாய்க் கதியளிக்கும் கடவுளாய் நிற்பதும் அப்பரம்பொருளேயாதல் புலனாகிறது. மேலும், அது அறிவுருவாய்க், குணம் குறியாய், குணம் குறி கடந்த ஞானமாய், மனக்கண்ணால் எண்ணுபவர்க்கு ஞானம் தந்து விளக்கம் செய்யும் குருவாய், அன்பர்களின் அன்பொழுக்கத்திற்கு அடைவாய் இருப்பதைக் கண்டு மகிழ்கின்றார். அதனை எளிய சொற்களால் படிப்பவர் சிந்தை ஆழ்ந்து செல்லும் நெறியில் அழகுறப் பாடுகின்றார்.

2099.

     ஞாலமே ஞாலமெலாம் விளங்க வைத்த
          நாயகமே கற்பமுதல் நவிலா நின்ற
     காலமே காலமெலாம் கடந்த ஞானக்
          கதியேமெய்க் கதியளிக்குங் கடவு ளேசிற்
     கோலமே குணமேஉட் குறியே கோலங்
          குணங்குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர்
     சீலமே மாலறியா மனத்திற் கண்ட
          செம்பொருளே உம்பர்பதஞ் செழிக்கும் தேவே.

உரை:

     ஞாலமாய், ஞால நாயகமாய், காலமாய், காலம் கடந்த ஞானக்கதியாய், கதியளிக்கும் கடவுளாய், சிற்கோலமாய், குணமாய், உட்குறியாய், குணம் குறி கடந்த குருவாய், அன்பர் சீலமாய், மாலறியா மனம் கண்ட செம்பொருளாய், உம்பர் பதம் செழிக்கின்றவன் மகாதேவன். எ.று.

     பரந்துபட்ட ஞாலம் தனது விளக்கத்தால் தன்னை இயக்கும் பரம்பொருளைக் காட்டுதலால் “ஞாலமெலாம் விளங்க வைத்த நாயகமே” என்று கூறுகிறார். ஞாலத்தின் விளக்கம் காலத்தொடு கலந்து நிற்பது பற்றி, “காலமே” எனக் கூறி, அதுதானும் நாள், திங்கள், ஆண்டு, ஊழி, யுகம், கற்பம் எனப் பல கூறாகப் பிரித்துக் கூறப்படுவது கண்டு, “கற்ப முதல் நவிலா நின்ற காலமே” என்று உரைக்கின்றார். உலகில் வாழ்வார்க்குப் போல இவ்வுலகுக்கு அப்பாற்பட்ட மேலுலகப் பெருவாழ்வு பெற்றார்க்கு வேண்டப்படாது கடந்தொழிதலால், “காலமெலாம் கடந்த ஞானக் கதியே” என்று குறிக்கின்றார். காலம்கடந்த பெருவாழ்வுக்கு ஞானமே ஒளிசெய்தலின் “ஞானக் கதியே” என்றும், அக் கதிகளும் இறைவன் அருளாற் பெறப்படுவது பற்றி “மெய்க்கதி அளிக்கும் கடவுளே” என்றும் இயம்புகின்றார். ஞானமே அக் கடவுட்கும் உரு என்பது பற்றிச் “சிற்கோலமே” என்றும், அக் கோலமே குணமாதல் விளங்கக் “குணமே” என்றும், அக் குணத்தையுடையதாய்க் குணியாய் படாமையால், “கோலமும் குணமும் குறியும் கடந்த குருவே” என்றும் குறிக்கின்றார்.

     குணம், குறி கடந்த நிலை, இருள் நீக்கி இன்பம் செய்வதாதல் தோன்றக் “குருவே” என்கிறார். குரு, இருள்நீக்கி இன்பம் செய்பவன்; அதனால் அக் குருவின்பால் அன்பு செய்வோர், குருவைப் பரமே என்று போற்றுவது சீலமாகலின், “அன்பர் சீலமே” என்று பாடுகின்றார். அச் சீலத்தால், மனம் மயக்கத்துக்குள்ளாகாமல் பரமாகிய செம்பொருளை உணரும் திறம் பெறுகிறது. அதனால், 'மாலறியா மனத்திற் கண்ட செம்பொருளே' என்கிறார். இவ்வகையால் உம்பர் பதம் பெறும் உயிர்கள், போகநுகர்ச்சி வளம் மிகப் பெறுகின்றனர் என்ற கருத்துப்புலப்பட, 'உம்பர் பதம் செழிக்கும் தேவே' என உரைக்கின்றார்.

     (29)