30
30. நிலம் நீர் காற்று முதலியனவாகக் கூறுபடுத்திக் காணப்படும்
உலகையும், காண்கின்ற உயிரொடு கூடிய உடம்பின் அறிவு செயல்கட்குரிய கூறுகளையும், அவற்றின் உண்ணிற்கும்
மனத்தின் கூறுகளையும்,
அவற்றையும் உயிரையும் இணைக்கும் பொருட்கூறுகளையும், அவற்றை இயக்கும்
அருட்கூறுகளையும், முதற்கண் தனித்தனிக் காட்டுவது ஞானநூல் இயல்பு. இக் கூறு ஒவ்வொன்றும் ‘தத்துவம்’
எனப்படும். இவை வகையால் மூன்றும், விரிவால் முப்பத்தாறுமாம். மூவகைகளையும் ஆன்மதத்துவம், வித்தியாதத்துவம்,
சிவதத்துவம் என்பர். இவற்றுள் ஆன்மதத்துவம் இருபத்து நான்காகவும், வித்தியாதத்துவம் ஏழாகவும்,
சிவதத்துவம் ஐந்தாகவும் ஆக முப்பத்தாறாக விரியும். இவற்றுள் ஆன்மதத்துவத்தைக் கீழ் நிலையிலும்
வித்தியாதத்துவத்தை இடை நிலையிலும், சிவதத்துவத்தைக் மேனிலையிலும் வைத்து, நிலம் முதல் சிவம்
ஈறாக தத்துவம் முப்பத்தாறு என்பர். இவற்றின் ஆராய்ச்சியறிவு சிவதத்துவத்துக்கும் உயிர்கட்கும்
உலகிற்கும் உள்ள தொடர்புகளைக் காட்டிச் சிவநினைவை வற்புறுத்தும், சிவபரம்பொருள் இவற்றிற்கு
அப்பால் இருப்பதாதலின், அதனைத் ‘தத்துவாதீதம்’ என்பர். அதீதத்தே வைத்து நோக்கப்படும்
பரசிவம் தத்துவநிலையில் எண்ணப்படும் பொருளாகாது, தற்பரமாய்க் காரணகாரிய நெறிக்கு அகப்படாததது;
ஆயினும், தத்துவக் கூறுகள் எல்லாவற்றிலும் நிறைந்து நிற்கிறது. இத் தத்துவங்கள் பலவும் ஒடுங்குவதும்
விரிவதும் செய்யும் இயல்பினவாதலால், இவை சத்தாம் தன்மை (நிலை பேறுடைமை) யுடைய வல்ல; பரசிவம்
ஒன்றுமே சத்தாய் நிற்கும் தன்மை யுடையதாகும். சத்தாந் தன்மையின் பயன் இன்பம். தத்துவ ஆராய்ச்சியாற்
பிறக்கும் விளக்கம் சிந்தனையில் தெளிவு பயந்து இன்னமுதமாய் இன்பம் பெருகுவிக்கும் இயல்பினதாகும்.
இதனால் அறிவு தீநெறியினின்றும் விலகித் தூய நன்னெறியைக் கடைப்பிடிக்கும். அந்நெறி நிற்கும்
சான்றோர் அறிவின்கண் பரசிவம் தோய்ந்து உண்மை ஞானமும், அதனால் விளையும் பேரானந்தமும்
பெருகச் செய்யும். இதனைப் படிப்படியாக நுணுகி நோக்கிச் சிவஞான அருட்காட்சியில் திளைத்து இன்புறுகின்றார்
வடலூர் வள்ளல்.
2100. தத்துவமே தத்துவா தீத மேசிற்
சயம்புவே எங்குநிறை சாட்சி யேமெய்ச்
சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம்
தந்தருளும் பெருவாழ்வாம் சாமி யேஎம்
சித்தநிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும்
தெவிட்டாத தெள்ளமுதே தேனே என்றும்
சுத்தநெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த
சுகப்பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே.
உரை: தத்துவமாய், தத்துவாதீதமாய், சிற்சயம்புவாய், சாட்சியாய், சத்துவமாய், சத்துவத்தின் பயனாகிய இன்பம் தரும் பெருவாழ்வாம் சாமியாய், ஒளியாய், தெள்ளமுதாய், தேனாய், சுகப்பொருளாய், மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவன் மகாதேவன் எ.று.
தத்துவந்தோறும் ஒன்றாய்க் கலந்து ஒவ்வொன்றும் தனக்குரிய செயலை ஒழுங்கு பிறழாமற் செய்விப்பதுபற்றிச் சிவமுதல்வனைத் “தத்துவமே” என்றும், தத்துவமே யாகிவிடாமல் அதற்கு அப்பால் வேறாய் நிற்குமாறு பற்றித் “தத்துவா தீதமே” என்றும் உரைக்கின்றார். தத்துவாதீதமாய் வேறாய் நிற்கும் பரம்பொருள் பிறிதொரு காரணத்தின் காரியமாதல் இன்றித் தானே தனியாய் இருப்பது தோன்றச் “சிற்சுயம்புவே” என்கிறார். சுயம்புவாகிய அது ஞானமே யாதலின் அதனை சிற்சுயம்பு எனல் வேண்டிற்று. அணுக்கள்தோறும் அணுவுக்கணுவாய் நிறைந்து அவற்றுள் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் உடனிருந்து காண்பதுபற்றி “எங்கும் நிறை சாட்சியே” என்று உரைக்கின்றார். சத்துவம், ஈண்டு முக்குணங்களில் ஒன்றன்று; சத்தாம் தன்மை குறிப்பது. அதாவது நிலைபேறுடையதாம் தன்மை. சத்தாய் உள்ளது இன்பத்துக்கு விளைநிலமாதலால், சத்துவத்தின் பயனாம் இன்பம் தந்தருளும் பெருவாழ்வாய் விளங்குதலால், “சாமியே” என்றார். சாமி, இங்கே தலைமைப் பொருண்மை விளங்க நின்றது. “ஏறனையான் உளன் சீவகசாமி என்பான்” (சீவக) எனத் திருத்தக்க தேவர் வழங்குவது காண்க. 'சாமி' என்ற சொல், பொன்னையும் குறிப்பது; பொன்னுடைய வாழ்வு போக வாழ்வாதலின், பெருவாழ்வளிக்கும் முதல்வனைச் சாமியே என்று குறிப்பதாகவும் கொள்ளலாம். மனத்தின் நால்வகைக் கூறுகளுள் சித்தம், சிந்திப்பது; இந்நிலையில் இது சிந்தை என்றும், இதன் செயல் சிந்தனை யென்றும் வழங்கும்.
சொற்றொறும் சிந்தித்தும் இதன் பெற்றி இஃது என்று தெரிந்து, அப் பெற்றி பிறழாமல் சொற்களை வழங்கும் நெறி இடைக்காலப் புலமை யுலகில் கைவிடப்பட்டது; இது சொற்பொருள் பெற்றிருமை யுணராதார் வடமொழியைப் பின்பற்றி வகுத்த நிகண்டுகளால் விளைந்த இழுக்கு. சித்தத்துள் பல்வேறு உணர்வுகள் நிறைந்து, முக்குண வயப்பட்டு மயக்கமும் கலக்கமும் தெளிவும் எய்துவதும் உண்மையின், தெளிவு தோன்றுதற்கு அருள் ஒளி காரணமாதலால், “சித்தநிலை தெளிவிக்கும் ஒளியே” என்று வள்ளலார் இயம்புகிறார். உலகியல் தெள்ளமுதம் தேனும் சிறிதாயவழி ஆர்வத்தை எழுப்பிப் பெரியதாயவழி இன்பம்தரும் ஆற்றல் குன்றித் தெவிட்டுதலால், “சித்தநிலைத் தெளிவின்கண் சுரக்கும் இன்பம்” தெவிட்டாத சீர்மையுடையது என்பது தோன்றத் “தெவிட்டாத தெள்ளமுதே தேனே” என்று செப்புகின்றார். திருவருள் ஒளியாற் காணப்படும் சுத்த நெறியைக் கண்டோர் அதனின்றும் பிறழாமல் ஒழுகுமிடத்து, அவர் தம் அறிவினுள் சிவபரம்பொருள் தன்பால் உள்ள பேரருளால் மன்னி நின்று மெய்யுணர்வும் துன்பமில்லாத இன்பநிலையும் நல்குதலை வியந்து, “சுத்த நெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த சுகப்பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே” என்று தெரிவித்தருளுகின்றார். (30)
|