31
31. சரியை, கிரியை என்ற தத்துவங்களின்வழித்
தோன்றுவது யோகம். யோகத்தின் பயன் ஞானப்பேறு. இவ் யோகமும் கைகூடுதற்கு முதல் துணையாவது
இறைவன் திருவருள். இதனால் யோகம் புரிபவர் பெறுவது ஞானான்ந்தமாகிய போகம். அப் போகத்தை
நுகர்பவர் மேனி பொன் போலும் பொலிவு பெறும். அப் போகம் மேன்மேலும் பெருகுதற்கு முன்னைச்
சரியை கிரியையாகிய புண்ணியம் காரணமாகும். இங்ஙனம் எய்திய ஞானபோகத்தை நுகருமிடத்து அது ஆன்மசுத்தியாய்
முத்தி பெறுதற்குச் சாதனமாகுமாறு அந்தர்யாகம் செய்வர். அவ்யாகத்தின் விளைவு சிவமாகும். அச்
சிவப்பேறு வற்றாத பேரின்பத்தில் ஆன்மாவை ஆழ்த்தி விடும். அதனால் சிவன்பால் அன்புடைய நல்லோர்,
அதனிடத்தே பெருமோகமுற்றுப் பிறிது எதனையும் நோக்கா தொழிவர். நோக்காமை, ஏனைச் சொற்செயல்களில்
அழுந்தும் மோகத்தைப் போக்கித் தெளிந்த மோனநிலையிற் கொண்டு செலுத்தும். மோனமுதிர்ச்சியில்
பரசிவத்தின் பரானந்தக் காட்சி எய்தும். இதனை நுணிகிக் கண்ட வள்ளலார் இங்ஙனம் கூறுவர்.
2101. யோகமே யோகத்தின் பயனே யோகத்
தொருமுதலே யோகத்தின் ஓங்குந் தூய
போகமே போகத்தின் பொலிவே போகம்
புரிந்தருளும் புண்ணியமே புனித ஞான
யாகமே யாகத்தின் விளைவே யாகத்
திறையேஅவ் விறைபுரிந் இன்பே அன்பர்
மோகமே மோகமெலாம் அழித்து வீறு
மோனமே மோனத்தின் முளைத்த தேவே.
உரை: யோகமாய், அதன் பயனாய், அதன் முதலாய், அதன்கண் ஒங்கும் போகமாய், போகப் பொலிவாய், அது புரியும் புண்ணியமாய், புனித ஞானயாகமாய், அதன் விளைவாய், அதன் இறையாய், அவ்விறை புரியும் இன்பமாய், அன்பர் மோகமாய், மோகம் அழித்துச் சிறப்புறும் மோனமாய், அம் மோனத்தில் முளைப்பவன் தேவதேவன். (எ.று)
பசுபாச நெறிகளில் ஒன்றி நிற்றலும் யோகமாயினும், அவற்றின் நீங்கிச் சரியை கிரியை என்ற இரண்டின்கண் ஒன்றிநின்று பெறும் சிவ யோகம் சிறந்தமையின் “யோகமே” என்றார். பூ என்ற சொல் எல்லாப் பூக்களையும் குறிக்குமாயினும், இன்ன பூ என அடைகொடாமல் பொதுப்பட மொழியின் அது பூவிற்சிறந்த தாமரை மலரைக் குறிக்கும். 'பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை' என்பர் நாவரசர். அவ்வழக்குப் பற்றிச் சிவயோகத்தைப் பொதுப்பட 'யோகமே' என்று அடிகளார் உரைக்கின்றார். சரியையாற் கிரியையும், கிரியையால் யோகமும், யோகத்தால் ஞானமும் விளையும் என்றே தாயுமானவர், இவற்றை முறையே அரும்பு, மலர், காய், கனி என உவமம் கூறி விளக்குகின்றார். இந்த நான்கிற்கும் முதல் தவமாகும். தவமாகிய முதல் திருவருளால் வளர்ந்து சரியை அரும்பிக் கிரியை மலர்ந்து யோகம் காய்த்து ஞானம் கனிகின்ற திறம் இனிது விளங்கவே, அதனை 'யோகத்து ஒரு முதலே' என்று குறிக்கின்றார். ஞானமாகிய தவக்கனி உயர்ந்து ஓங்கித் தூய இன்பம் தருதலால், அதனை 'யோகத்தின் ஓங்கும் தூய போகமே' என்றும், சுடச்சுடரும் பொன்போல் யோகபோகம் யோகியர் மேனிக்கண் ஒளிநல்கும் நுட்பத்தைப் 'போகத்தின் பொலிவே' என்றும் புகழ்கின்றார். இங்ஙனம் தவப்பயனாகிய போகம் முன்னைத் தவமாகிய புண்ணியத்தால் உருவாவது என்று சான்றோர் கூறுவதுபற்றிப் 'போகம் புரிந்தருளும் புண்ணியமே' என்கிறார். 'தவமும் தவமுடையார்க்கு ஆகும்' என்பர் திருவள்ளுவர். புண்ணியம் அறிவில்லாத வினைவடிவிற்றே யாயினும், அதுபோகம் புரிந்தருளுமாறு செய்பவன் அதன் பொருளாகவுள்ள இறைவன், அவனது அருட்செயலைப் புண்ணியத்தின்மேல் வைத்துப் புகல்கின்றார். திருவருள் நலன்களைக் குறிக்கும் போதெல்லாம் சேக்கிழாரும் புண்ணியத்தையே பொற்புடன் கூறுவர். அவரது தெய்வமணக்கும் செய்யுளில ஆழ்ந்து மூழ்கித் திளைத்தவராதலால் வடலூர் அடிகளாரும் இதனை எடுத்து மொழிகின்றார். புண்ணியப் பயனாக எய்தக் கடவது தூய ஞானமாதலால் 'புனித ஞானம்' என்றும், அதனைக் கைவரப் பெறுதற்குச் சான்றோர் வற்புறுத்துவது அந்தர் யாகமாதலால் அதனைப் 'புனிதஞான யாகம்' என்றும் கூறுகின்றார். 'அந்தரியாகந்தன்னை முத்தி சாதனமா, அறைந்திடுவர் அதுதானும் ஆன்மா சுத்தியாம்' என்று சகலாகம பண்டிதரான அருணந்தி சிவனார் முன்மொழிந்து, “கந்தமலர் புகையொளி மஞ்சனம் அமுது முதலாக் கண்டனவெலாம் மனத்தாற் கருதிக் கொண்டு சிந்தை தனில் அர்ச்சிக்கச் சிவனை ஞானத்தால் (சிவ. சித்தி 9:10) சிந்திப்பது' என்று தெரிவிக்கின்றார். திருமூலரும் 'உண்ணாடி ஞானத் தொளிபெற நோக்கினால், கண்ணாடி போலக் கலந்து நின்றானே' (திருமந். 603) என்று குறிக்கின்றார். ஏனைக் கன்மயோகங்கள் பசுபாச ஞானமே பயத்தலால், இதனைப் “புனிதஞானயாகம்“ என்று புகன்று மொழிகின்றார். இந்த யாகத்தில் இறைவன் புரியும் இன்பத்தை நுகர்பவர் அதனையே காமுற்று ஒன்றியிருப்பராதலால், அந்நிலையை 'அன்பர் மோகமே' என்று உரைக்கின்றார். “பரஞானத்தால் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார்' என்று சித்தியார் மொழிவது காண்க. 'பார்க்க வருஞானம் பலஞான அஞ்ஞான விகற்பம்' என்பதனால், அவற்றை 'அம்மோகம் எலாம்' எனச் சுட்டி யொழிகின்றார். மோனநிலைக்கு ஒப்பதும் மிக்கதும் வேறின்மையின், அதனை 'வீறும் மோனமே' என விளம்புகின்றார். வீறு, பிறவற்றிற்கில்லாத சிறப்பு. “ஆறதேறும் சடையான் அருள்மேவ அவனியர்க்கு, வீறதேறும் தமிழால் வழி கண்டவன்” (நம்பி. திருச்சண்பை. 5) (31)
|