32

      32. சிவயோகக் காட்சியைச் சான்றோர் ஞாதிரு, ஞானம், ஞேயம் என மூன்றாக்கி, முறையே காண்பவன், காட்சி, காணப்படுபொருள் என மொழிபெயர்த்துரைப்பர். திருமூலர், ‘ஞேயத்தை ஞானத்தை ஞாதுருவத்தினை’ (90) என்பது காண்க. காண்பவன் காட்சியால் காணப்பட்ட பொருளிடத்தே கருத்தூன்றி நோக்குமிடத்து அதன் பலவேறு கூறுகளும் நலங்களும் அவன் மனக்கண்ணில் தோன்றி இன்புறுத்தும். இவ்வாறு காணுமாற்றால் ஆன்மவறிவு மாண்புறுகிறது; பொருளின் உண்மைத் தன்மை நன்கு உணரப்படுகிறது; ஐயவுணர்வும் திரிபுணர்வும் விலகுதலால் உண்மையறிவும் இன்பமும் உருவாகின்றன. அதுவே வாழ்வாங்கு வாழும் வாழ்வு என்பது. இங்ஙனம் உண்மையறிவின்கண் ஒன்றி நிற்குங்குகால் ஆராய்ச்சியின்மையின் மௌனம் விளைகிறது. ‘ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்’ என்று திருமூலரும் (1606) கூறுவர். மௌனத்தைக் கொண்ட பெரியவர்க்கு முத்திப்பேறன்றி வேறே பெறலாகும் பேறு இல்லையாதலின் அதனை விடாது பற்றியிருப்பர்; “மோனம் கைவந்தவர்க்கு முத்தியும் கைகூடும், மோனம் கைவந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்’ (1611) என்று திருமந்திரம் கூறுகிறது. அந்நிலையைப் பெற்றவர் சிவானந்தமே துய்ப்பர். அவர்களைப் பசங்கள் படர்வதில்லை. ‘நீங்காச் சிவானந்தம் ஞேயத்தே நின்றிடப் பாங்கான பாசம் படரா’ (1605) என்று திருமூலர் தெரிவிக்கின்றார். மோனிகளாகிய செல்வர் சுத்த அறிவினராய் மெய்யன்பு செய்து இறைவனது அருளாரமுதம் உண்டு அமைந்திருப்பதன்றி வேறு செயல் இலராவர். அவர்களின் இயல்பை “மோனிகளாய் உள்ளார்கள் நான்மறையை முழுதுணர்ந்து ஐம்புலன்கள் செற்று, மோனிகளாய் முனிச் செல்வர் தனித்திருந்து தவம் (ஞானசம்.   முதுகுன்) புரிவர்” என, ஞானசம்பந்தர் உரைப்பது நோக்கத்தக்கது. ஞானிகளாய் உள்ளார் என்றது ஞாதுருவாய் ஞானச் செயல் புரிபவர்களை யாகும் . நான்மறையை முழுதுணர்ந்தென்றது ஞேயத்தைப் பெறுவதாம். ஞேயத்தே நின்றவழிப் பொறிபுலன்கள் செயலறுதலை ‘ஐம்புலன் செற்று’ என்று குறிக்கின்றார். இந்நிலையில் எய்துவது மோனம் என்றற்கு மோனிகளாய் என்று ஞானசம்பந்தர் உரைத்தருளுகின்றார். பின்பு அவர்கள் திருமூலர் உரைப்பது போல முத்திக்கும சித்திக்கும் உரியராதலின் அவர்களை முனிச்செல்வர் என்று குறிக்கின்றார். மோனத்தில் அவரது அறிவு அருளொடு தலைக்கூடிச் சிவயோக்த்தையே சூழ்ந்து நிற்றல் இயல்பாகும். இச் சூழ்ச்சி நிகழுமிடம் சாக்கிரகம், சொப்பனம், சுழுத்தி என்ற மூன்றுக்கும் அப்பாலான துரியத் தானமாகும். ஞாதுரு ஞான ஞேயவுணர்வால் மோனமெய்தித் துரியத்தில் சிவத்தின் அருட்சோதி கண்டு வள்ளலார் மகிழ்கின்றார்.

2102.

     காட்சியே காண்பதுவே ஞேய மேஉள்
          கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும்
     மாட்சியே உண்மையறி வின்ப மென்ன
          வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி
     ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த
          அறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல
     சூட்சியே சூட்சியெலாம் கடந்து நின்ற
          துரியமே துரியமுடிச் சோதித் தேவே.

உரை:

     காட்சியாய், காண்பதுவாய், காணப்படு பொருளாகிய ஞேயமாய், மனக்கண் நிறைந்த களிப்பாய், மாட்சியாய், உண்மையறிவு இன்பம் (சத்சித் ஆனந்தம்) என வயங்கும் வாழ்வாய், மோனக் காணி யாட்சியாய், ஆட்சி செய்யும் அரசராய், சுத்த அறிவாய், மெய்யன்பாய், தெள்ளமுதாய், நலம் விளைவிக்கும் சூழ்ச்சியாய், சூழ்ச்சிகடந்த துரியமாய், துரிய முடிவில் ஒளி செய்து தோன்றும் சோதியாயவன் மகாதேவன். (எ.று)

     இதன்கண் காட்சி, ஞானம்; காண்பது, ஞாதிரு; காணப்படுவது ஞேயமாயிற்று. காண்பதாகிய ஞாதிரு ஞேயத்தைக் காணுதற்குக் காணுதலாகிய செயல் ஞானமாகும். ஞேயத்தைக் கண்டு அதன் கண் நின்றபோது ஞானமும் ஞாதிருவும் மறைந்தொழிய, ஞாதிருவின் அகக்கண்ணாகிய மனம் செயற்படுதலால், அந்நிலையில் காண்கின்ற ஞாதிருவை உட்கண்ணுடையார் என்றும், அவருடைய அகக்கண்ணும் புறக்கண்ணும் ஞேயத்திடத்தே நிலைபெற்று அதன் நலத்தில் பெறலாகும் இன்பத்தால் களிப்புறுவது பற்றி, “கண்ணிறைந்த களிப்பே” எனவும் வள்ளலார் மகிழ்ந்துரைக்கின்றார். கண்ணிறைந்த காட்சி ஐயம் திரிபு என்ற இருவகைக் குற்றங்களின்றிச் சிறப்பாதல், அதனை, “ஓங்கும் மாட்சி” என்கிறார். அதன்வழி நின்று எய்தும் வாழ்வு, உண்மையும் அறிவும் இன்பமும் ஒக்க நிறைந்த உயர்வுடைய தாகையால், 'உண்மை அறிவு இன்பமென்ன வயங்குகின்ற வாழ்வே' என்று விளக்குகின்றார்.

     இவ்வாழ்வின்கண், ஐயமும் மயக்கமும் தோன்றிப் பிறரை வினவியும் உசாவியும் வாய்கருவியாகச் செயற்படுதற்கு இடமின்றி யொழிகின்ற மௌன நிலை தானே வந்து எய்துவது கண்டு, “மாமௌனக் காணியாட்சியே” என்று உரிமைதோன்ற வுரைக்கின்றார். காணியாட்சி அரசினால் கொடுக்கவும் எடுக்கவும் படும் சிறுமையுடைத்தாதல் பற்றி, அதுதானும் இச் சான்றோர்க்கு இல்லை என்பது விளங்க 'ஆட்சிசெய்யும் அரசே' என்கிறார். இந்த மௌன அரசு நல்கும் போகம் யாது என எழும் வினாவுக்குச் “சுத்த அறிவே மெய்யன்பே தெள்ளமுதே” என்று விடை கூறுகின்றார். அன்பும் அறிவும் இன்பத்துக்கு ஏதுவாதல் அறிவுடையார் நன்கறிந்ததாதலின், இன்பப் பயனைத் தெள்ளமுது எனச் சிறப்பிக்கின்றார். இனி, மௌன அரசின் செயலெல்லாம், நலங்கள் யாவற்றுக்கும் தலையாய நலமாகிய சிவத்தைப் பெறுதல்பற்றிய சிந்தனையே யாதல் பற்றி, “நல்ல சூட்சியே” என்றும், அது பிற உலகியலாகிய பெத்த நிலைக்குரிய சூழ்ச்சிகளைக் கடந்து, அவற்றிற்குரிய இடமாகிய நனவு, கனவு, சுழுத்தி என்ற மூன்றுக்கும் அப்பாற்பட்ட துரிய நிலையில் நிகழ்வது பற்றித் 'துரியமே' என்றும், அதன் முடிவாகிய அதீதத்தில் சிவத்தின் அருளொளியைக் காண்பது புலப்பட 'துரிய முடிச் சோதித் தேவே' என்றும் கூறுகின்றார். இதனால் சிவயோகத்தில் ஞானிகள் மோனிகளாய் முனிகளாய்த் தவமிருந்து சிவப்பேறு எய்தும் திறம் காட்டப்படுவது காணலாம்.

     (32)