33

      33. மேற்கண்ட சமய வகைகளில் பௌராணிகம் கலந்து நிற்பது கண்பது, அது கூறும் பிரமன், திருமால், அரன் என்ற மூவர்க்கும் மேலாய் நிற்கும் சிவபரம்பொருளை வடலூர் வள்ளல் சிந்திக்கின்றார். புராண இதிகாசங்கட்கு முன்னே தோன்றிய மறைகட்கும் மறைமுடிவுகட்கும் தலையாய பொருளாகச் சிவபரம்பொருள் விளங்குவதை எண்ணுகின்றார். அன்பர் குறைமுடித்துதவும் அதன் வள்ளன்மையை நினைந்து மகிழ்கின்றார். சிவத்தின் பிறையணிந்த திருவுருவை - சகள வடிவை - நினைந்து அதற்கு மேலாய அகளத்தையும் நினைக்கின்றார்.

2103.

     மறைமுடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான
          வாரிதியே அன்பர்கடம் மனத்தே நின்ற
     குறைமுடிக்கும் குணக்குன்றே குன்றா மோனக்
          கோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப்
     பிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப்
          பெம்மானே செங்கமலப் பிரானே இந்த
     இறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற
          இறையேஇவ் வுருவுமின்றி இருந்த தேவே.

உரை:

     மறை முடிக்கு மணியாய், ஞானவாரிதியாய், அன்பர் குறைமுடிக்கும் குணக்குன்றாய், மோனக் கோமளமாய், சிவக்கொழுந்தாய், பிறைமுடிப் பெருமானாய், துவளமாலைப் பெம்மானாய், செங்கமலப் பிரானாய், மூவர்க்கும் மேலாய இறைவனாய், இவ் விறையுருவும் இல்லாதவன் தேவதேவன், எ.று.

     மறைமுடியான உபநிடதங்கள் உரைப்பது ஞானமாதலின், ஞானவாரிதி என்று கூறுகிறார். 'மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி' என்று மணிவாசகரும் கூறுகின்றார்.

     (33)