34
34. மனத்தைக் குகையென்றும்
அதனை இடமாகக் கொண்டு சிந்திக்கும் யோகியர்க்கும் காட்சி தருவது பற்றி முருகப் பெருமானைக்
குகன் என்றும் சான்றோர் கூறுவர். அங்கே அவன் மனவிருளைப் போக்கி ஞானவொளியைப் பரப்புகின்றான்.
ஆறுமுகமுடைய அரசனாக இருந்து செய்வினைகட்கு ஏற்ப இன்பமும் துன்பமும் தந்து முறை செய்பவன். உலகியல்
வாழ்வில் பொருள்கள் நல்கும் ஆசைமயக்கத்தினின்றும் நீங்கி ஞானநெறியில் நிற்கும் நல்லோர்க்கு
அறிவினுள் அருளால் மன்னி இன்பம் தருவதும் அவனுக்கு இயல்பு. மாயை, கன்மம், இவற்றின் தொடர்புக்குக்
காரணமாகும் மலம் என்ற மூன்றின் வேதனைத் தொடக்குகளிலிருந்து நீங்கிய முத்தானமாக்களை மீண்டும்
அவற்றின் சூழலிற் புகாதவாறு தனக்குள்ளே ஒடுங்க நிறுத்தி மெய்ம்மையான இன்பமே நுகரச் செய்கின்றான்.
மெய்ம்மைசான்ற அடியார்கள் தேடிப் பெறும் ஞானச்செல்வமாகவும் அவன் சிறந்து விளங்குகிறான்.
இங்ஙனம், யோகிகட்குக் குருவாகவும், ஞானிகட்குச் சிந்தையில் ஊறும் அமுதமாகவும், முத்தர்களுக்குப்
பிறவாநிலை வழங்கும் பெருமானாகவும், மெய்யடியார்க்குச் செல்வமாகவும் முருகப்பெருமான் வடிவில்
அருள் வழங்கும் இறைவனது பெருநிலையை எண்ணுகின்றார்.
2104. காதகன்ற யோகர்மனக் குகையில் வாழும்
குருவேசண் முகங்கொண்ட கோவே வஞ்ச
வாதகன்ற ஞானியர்தம் மதியில் ஊறும்
வானமுதே ஆனந்த மழையே மாயை
வேதகன்ற முத்தர்களை விழுங்கு ஞான
வேழமே மெய்யின்ப விருந்தே நெஞ்சில்
தீதகன்ற மெய்யடியர் தமக்கு வாய்த்த
செல்வமே எல்லையிலாச் சீர்மைத் தேவே.
உரை: யோகர் மனக்குகையில் உறையும் குருவாய், சண்முகக் கோவாய், ஞானியர் மதியில் ஊறும் அமுதமாய், ஆனந்த மழையாய், முத்தர்களை விழுங்கும் ஞானவேழமாய், மெய்யின்ப விருந்தாய், மெய்யடியார் செல்வமாய், எல்லையில்லாச் சீர்மையுடையவன் தேவதேவன். எ.று
அன்பினால் அறுவகைக் குற்றமு மறுத்து ஐம்புலனும் அடக்கினாலன்றி யோகம் கை கூடாது. அதனால் 'கோதகன்ற யோகியர்' என்று கூறுகின்றார். கோது - குற்றம். ஞானசம்பந்தர் 'அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி கைகூடாது அதனால் 'கோதகன்ற யோகர்' என்றும், 'அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம்முள்ள புண்டரிகத் துள்ளுறையும் 'புராணர்' என்றும் கூறுவர். மனத்தின் உட்பகுதி புத்தி தத்துவம் . அதுவே பரமன் எழுந்தருளும் இடமாதல்பற்றி அதனை 'மனக்குகை' என்றார். 'புந்தி வட்டத்திடைப்புக்கு நின்றானையும் பொய்யென்பனோ' என்பர். நாவுக்கரசர், மலவிருளைப் போக்கி ஞானவொளி நல்குதலால் முருகனை “குரு“ என்றார். குரு, இருளைப் போக்குபவர். வஞ்சம் - பிரபஞ்சம் ; 'மாயையின் உள்ள வஞ்சம் வருவது போவதாகும்' (சிவ.சித்தி. 1;15) என்று பிறரும் கூறுதல் காண்க. தன்கண் வாழப்பிறந்த உயிர்களைத் தன்னில் நீங்காமற் பிணிப்பது பற்றிப் பிரபஞ்சத் தொடர்பை 'வஞ்சவாது' என்றார். ஞானத்தாலன்றி வஞ்சத்தின் வாதினை வென்று மீளலாகாது ; அதனால், 'வஞ்சவாதகன்ற ஞானியர்' என்றும், ஞானம் அறிவுவாயிலாக வெளிப்பட்டு இன்பம் சுரப்பது பற்றி, 'மதியில் ஊறும் வானமுது' என்றும் கூறுகின்றார். 'உணர்வரிய பேரின்ப அனுபூதி யுணர்விலே உணர்வார்கள்' என்பர் தாயுமானார்.
மலம் காரணமாகத் தோன்றி இருவினை செய்து போக்குதற்குக் கருவியாகிய உடல் கருவி உலகுகளைத் தரும் முதலாதல் பற்றி, மாயையை எடுத்துக் கூறினார். மாயை கூறவே, ஏனை மலமும் கன்மமும் வருவிக்கப்படுகின்றன. 'மாயை மயக்கமும் செய்யும்' (சிவ. சித்தி. 2; 53) என்பதனால், 'மாயை வேதகன்ற முத்தர்' என்றார். வேது - மயக்கம். வேது - வெப்பமுமாம். யோகமும் ஞானமும் நல்குவது முத்த நிலையாதலின், அம் முறையில் முத்தரைக் கூறுகின்றார். இவற்றின் வேறாய்ப் பரமன் திருவடியை பற்றிப் பத்தி செய்யும் அடியார்களைத் “தீதகன்ற மெய்யடியார்' என்கிறார். செத்துப் பிறக்கின்ற தெய்வங்கட்குச் சிந்தையில் இடமளிப்பது பத்திக்குத் தீதாகலின் 'நெஞ்சில் தீதகன்ற மெய்யடியர்' என்கிறார். முத்தி நெறி அறியாத மூர்க்கர் தொடர்பு இங்கே தீது எனப்பட்டது என்று கொள்வதும் பொருந்தும். (34)
|