35
35. ஞானயோகத்தால் மோனிகளாய் முனிவராய்த் தவம் பெருக்கும் சான்றோராகிய அருளாளர், இம்மை
உடலோடு கூடியிருந்தே சிவபோகத்தை அகத்தே துய்த்திருக்கின்றாராயினும், அவர்பால் அருள்
பெருகிப் புறத்தே வழிந்து ஒழுக, அகத்தே இன்பம் பெருகி மலைபோல் உயர்ந்து விளங்கும்; அவர்
அறிவின்கண் நிறையும் பரஞானப் பரம்பொருள் வேதங்களின் உண்ணிறைந்த பொருள் அத்தனையும் நிறைந்து
மேற்பட்டு அவற்றாலும் காணப்படாத பேரெல்லையை அடைந்து பெரு விளக்கம் செய்கிறது. அங்கே அப்
பொருள் காட்சிப்படும் இடம், ஏனை நாண்மீனும் கோண்மீனும், முகிற்குலமும் பிறவும் உலவும் அசித்தாகிய
வெளி போலாது, ஞானமயமாய்ச் சுத்த ஏகாந்தமாய் நிலவும் பெருவெளியாகும். இப் பெருவெளியில்
வாழ்பவராவரே யன்றி உடலோடு கூடி உலகில் காணப்படும் பூதப்பெருவெளியில் வாழ்பவராக மாட்டார்கள்.
ஞானப்பெருவெளியில் அவர் வாழ்வில் அவர் பெறுவது, சிவமேயாம் செம்மைக்கு வேண்டும் தெளிவு முற்றும்
நிறைந்து உள்ளமுழுதும் கலந்து இனிக்கும் சிவானந்தச் செந்தேன் என்று அடிகளார் தெரிவிக்கின்றார்.
2105. அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்
ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
பொருளருவி நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்
பொலிகின்ற பரம்பொருளே புராண மாகி
இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த
ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு
தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.
உரை: அருளருவி வழியும் ஆனந்த மலையாய், வேதப் பொருளளவும் நிறைந்து பொலிகின்ற பரம்பொருளாய், பூரணமாய், சிற்பிரகாசமாய், ஏகாந்தப் பெருவெளிக்குள் இருப்பதொரு வாழ்வாய், உள்ளம் முழுதும் கலந்து தித்திக்கும் செழுந்தேனாய்த் தேவர்க்கெல்லாம் தேவனாயவன் மகாதேவன் எ.று.
ஆனந்த தனிமலையாகவும், அதன்கண் அருளாகிய அருவி வழிந்து ஒழுகுவதாகவும் சிவபரம்பொருளை இப்பாட்டின்கண் கூறுகின்றார்; அப் பொருளின் இயல்பு அதுவாதலால், அதனை அகத்தே கொண்டு மோனநிலையில் உறையும் சான்றோர் அருளருவி பெருக்கெடுத்து வழிந்தொழுகும் ஆனந்தமலையாகத் திகழ்கின்றார்கள் என்பது விளக்குதற்கு, வேதங்களின் அகத்தே நிறைந்தும் அவற்றாற் காணப்படாமைக்கு அவற்றின்கண் உள்ள அழுக்குப் போலும் என எண்ணற்க; அவ் வேதங்கள் அமலம் என்று அறிவித்தற்கு, “அமலவேதப் பொருள்” என்று அடிகளார் உரைக்கின்றார். வேதங்களின் பொருள் ஓர் அளவிற்குட்பட்டது; சிவபரம்பொருள் அளவிறந்தது; அதனால் வேதஞானத்தையும் கடந்து மேலோங்கிப் பொலிவதாயிற்று என்பாராய், “அமலவேதப் பொருள் அளவும் நிறைந்து அவற்றின் மேலும் ஓங்கிப் பொலிகின்றது என்று இயம்புகின்றார். பூரணம், புராணமெனக் குறுகிற்று. சிதாகாசப் பெருவெளியை, 'இருளறி சிற்பிரகாச மயமாம் சுத்த ஏகாந்தப் பெருவெளி' என்கின்றார். 'இருளறு சிற்பிரகாசம்' என்பது, இருளை அறுத்து உயர்ந்த ஞானவெளி என்று பொருள்படாது; அங்ஙனமாயின் இருளொடு கூடியிருந்து பின் அதனை அறுத்து நீங்கிற்றென்று குற்றப்படும். சிவயோகத்தால் தன்னைக் காணலுறும் ஆன்ம சிற்சத்தியை மறைக்கும் மலவிருளை அறுத்துத் தன்னை இனிதுகண்டு இன்புற உதவும் ஞானப்பிரகாசம் என்று பொருள்கொள்ள வேண்டும். சிவமாந்தன்மையை எய்துமளவும் ஆன்மவறிவு மறைப்புக்கு இடமாம் என அறிக. ஞானமெய்திய வழியும், ஒளிக்குள் இருள்போல மலமறைப்பு ஆன்மாவுக்கு உண்மையின், அதனின் வேறுபடுத்தற்காகவே, சிவபரம்பொருள் புலப்படுகின்ற ஞானவெளியைச் 'சுத்த ஏகாந்தப் பெருவெளி' என்று கூறுகிறார். மௌன யோகத்தில் ஆன்மாவுறைவது ஏகாந்தமாயினும், அங்கும் மலம் உண்மை காட்டற்கென்றே, அதனைச் 'சுத்த ஏகாந்தம் ' என்று சிறப்பிக்கின்றார். ஆன்ம அறிவின் தெளிவு அளவே இன்ப அளவு; அதனால்தான் “தெருளளவும் உளமுழுதும் கலந்து கொண்டு தித்திக்கும்' என்றும், அளவுட்படினும் அத்தனைக்கும் சிவபோகச் செழுமை குறைவில்லது என்றற்குச் 'செழுந்தேன்' என்றும் தெருட்டுகின்றார். (35)
|