36
36. உலகில் வாழும் மக்கள்
அறிவறியும் பொருட்டுக் கைக்கொள்ளும் அளவைகளையும் அவற்றால் ஆராயும் மன எல்லையையும், பெறப்படும்
அறிவெல்லையையும், மலமறைப்பின் நீங்கிய யோகியர் மேற்கொள்ளும்
நுண்ணிய நெறியையும் கடந்து,
அவர்க்குரிய பதத்தையும் கடந்து, ஒன்றாகிய மாய மண்டலம் கடந்து, சிவம் சத்தி என்ற
இருவகையும் கடந்து, சிவஞானம் பெற நினைக்கும் வேறு சூழ்ச்சியையும் கடந்து நிற்பதும், அண்டமும்
பிண்டமுமாகிய பொருள்களையும் கடந்து, எங்கும் நீக்கமற நிறையும் நிறைவாய்ச் சுகம்நல்கும் கடலாக
விளங்குவதும் பரம்பொருட்கு இயல்பாதலைக் காண்கின்றார். தன்பால் அன்பு கொள்வோர் சூழலிற்
பரவும் அறியாமை இருளைப் போக்கி, ஞானவொளி நல்கி, அறியாமையைச் செய்யும் கருவிகளின் நீங்கி
மோன நிலைபெற வாழ்வளிப்பதும், உயிர்க்குயிராய்த் தழைத்து அறிவுதருவதும் அப்பரம் பொருளே
எனத் தெளிகின்றார்.
2106. அளவையெலாங் கடந்துமனங் கடந்து மற்றை
அறிவையெலாங் கடந்துகடந் தமல யோகர்
உளவையெலாங் கடந்துபதங் கடந்து மேலை
ஒன்றுகடந் திரண்டுகடந் துணரச் சூழ்ந்த
களவையெலாங் கடந்தண்ட பிண்ட மெல்லாம்
கடந்துநிறை வானசுகக் கடலே அன்பர்
வளவையெலாம் இருளகற்றும் ஒளியே மோன
வாழ்வேஎன் உயிர்க்குயிராய் வதியும் தேவே.
உரை: அளவு, மனம், அறிவுகள் கடந்த யோகர் உளவையும் பதத்தையும் கடந்து, ஒன்று கடந்து, இரண்டு கடந்து, சூழும் கனவு கடந்து, அண்டபிண்டம் கடந்து, நிறைவாகிய சுகக்கடலாய், அன்பர் வளவை இருளகற்றும் ஒளியாய், மேலான வாழ்வாய், உயிர்க்குயிராய் வதிபவன் மகாதேவன். எ.று
இதன்கண் ஒன்று என்பது இறைவனது பரிக்கிரக சத்தியாய் விரிந்து நிற்கும் மாயாமண்டலம், இரண்டு, சிவமும் சத்தியுமாய் இருக்கும் நிலை, மாயைக்கு மேலாயுள்ள நிலையாதலால், 'ஒன்று கடந்து' 'இரண்டு கடந்து' என்று கூறுகிறார். உணரச் சூழ்ந்த களவு -பரம்பொருளை அடைதற்கு உரைக்கும் நூல் நெறிக்கு வேறாக நினைந்து காணும் நெறி. (36)
|