37

      37. “சுத்தநெறி திறம்பாதோர் அறிவில் தோய்ந்த சுகப்பொருள்” என்றது, கேட்போர் உள்ளத்தில் பல எண்ணங்களை எழுப்புகிறது. உடற்கூறுகள் அனைத்தினும் அறிவுருவாய உயிர் கலந்திருத்தலின், அறிவினுள் பரம்பொருள் தோய்ந்திருக்கும் திறத்தை அடிகளார் காட்டுகின்றார். மக்களுடைய மனம் உலகியற் பொருளாசைக்கு இரையாகியபோது, தன்னலவுணர்வு மிகுந்து, மலப்பசையால் தடித்து, அன்புக்கு மறுதலையாய வன்புடையதாகும். வன்பு என்பது ‘வன்கண்’ என்றும் வழங்கும் வன்பு கலவாத மக்கள் மனம் மென்மையுற்று அன்புக்கும் தெளிவுக்கும் உறையுளாகும். இறைவன் திருவருள் வன்பு கலவாத நல்லோர் மனத்திற் கலந்து அதனுள் நின்று இயக்கும் அறிவொடு கலக்கும்; அந்த அறிவு மனத்தை இயக்கி அதனோடு நேரிய தொடர்புடைய உடற்கூறுகளில் கலக்கும்; அவற்றுள் உடலை வன்மையுற நிறுத்தம் என்பிலும், அதனைச் சூழ்ந்து பற்றியிருக்கும் ஊனிலும் தோய்ந்து இயங்குவிக்கும்; ஊன் வளத்தால் கண் காது முதலிய பொறிவாயிலாக நிகழும் புலன்களில் கலந்து உடல் வாழ்வுக்குரிய உணர்வு வேட்கையை எழுப்பும். புலன் வேட்கை செயற்படுதற்குக் கண் முதலிய பொறிகளோடு சேர்கிறது. பொறிகளும் பல்வேறு உட்கூறுகளும் யுடையன. அவை செந்நெறியில் இயங்கினாலன்றிக் கண் காண்டலும் செவி கேட்டலும் பிற பிற செய்வன செய்தலும் இல்லையாம். அவற்றோடு கலந்து தொழிற் படுத்தும் பொறிகளின் செயல்களால் பொருளுணர்வு தோன்றி இன்பம் பயத்தலால் அப்பொருள்பால் மணவுணர்வு கலந்து அன்பு செய்கின்றது. அன்பின் வழியே உணமையறிவு தோய்ந்து ஐம்பூதங்களிலும் ஆன்மாவுணர்விலும் கலந்து இன்பம் பயந்து அருளுணர்வை நிரப்புகிறது. இவ்வகையில் உடலெங்கும் உணர்வு முற்றும் கலந்து அருள்வெள்ளம் பாய்ந்து பெருக நிற்பதைக் காணும் வடலூர் வள்ளல் மகிழ்கின்றார்.

2107.

     வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள்
          மனங்கலந்து மதிகலந்து வயங்கா நின்ற
     என்புகலந் தூன்கலந்து புலன்க ளோடும்
          இந்திரிய மவைகலந்து இயங்கு கின்ற
     அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம்
          ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி
     இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி
          எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே.

உரை:

     வன்பிலா மனத்தோர் மனம் கலந்து, மதிகலந்து, என்பு கலந்து, ஊன்கலந்து, இந்திரியம் கலந்து, உள்ளே இயங்குகின்ற அன்பு, அறிவு, உயிர், ஐம்பூதம், ஆன்மா ஆகியன கலந்து, அருள்கலந்து எழும் கருணைப் பெருக்காறாய இன்பத் தேவனாவன் மகாதேவன். எ.று.

     அன்புக்கு மறுதலையாய் ஈரமற்ற தன்மை 'வன்பு' எனப்படும். அன்பிலாவுள்ளத்தில் சிவம் கலவாமைபற்றி வன்பு கலந்தறியா மனமுடையாரை எடுத்து மொழிகின்றார். அவர் மனம் அன்பு நிறைந்து சிவம் பொருந்துதற்குரிய செம்மையுடையதாகலின் “மனம் கலந்து” என்றும், அது அறிவு கலந்து இயங்குதற்கு ஏற்ற கருவியாதலின் “மனம் கலந்து மதிகலந்து” என்றும் கூறுகிறார். மாசற்ற மனத்தோர் அறிவின்கண் அருள் ஒளி கலந்து மதியொடு கூடியவழி விளக்கம் மிகுதலின், மதிகலந்து வயங்குவதாயிற்று என்றார். மதிமிக்க வழி மக்கள் மனத்திலும் முகத்திலும் அடிகளார் நோக்குகின்றார். மதிநலம் செயற்குரிய வன்மையைப் பயக்குகின்றமையின், செயல்முதலாகிய உடற்கு உறுதி நல்கும் என்பையும் அதனோடு பின்னிப் பிணிப்புண்டிருக்கும் ஊனையும் நோக்கி, அவை அறிவுவழி இயங்கி உயிரின் செயல் வகைகட்கு ஆக்கம் தருதல் கண்டு, “வயங்கா நின்ற என்புகலந்து ஊன் கலந்து” அருள் பரவியிருப்பது தெரிகிறது. இங்ஙனம் உள்ளுறும் உடற்கூறுகளை நெறிப்படுத்தி இயங்கும் திருவருள், பொறிவாயிலாகப் புலப்படும் புலன்களை யெழுப்பி அப்புலன்களோடு பொறிகளைப் புணர்த்துக் காண்டல் கேட்டல் முதலிய வினைகளைப் புரிவிக்கிறது. இச்செயல்கள் வாயிலாக அறியப்படும் பொருள்கள்பால் அன்பு படர்தலால், அதன்வழி உண்மையறிவு புகுந்து உயிர்க்கு வாழ்வருளும் ஐம்பூதங்களோடும் ஆன்மாவோடும் கலந்து, அவற்றின்கண் ஒன்றி விளங்கும் சிவவொளியைக் காண்கிறது. அக்காட்சியில் இன்பம் ஊறிப் பெருகும்; அவ் வின்பம் தன்னைத் தோற்றுவித்துப் பெருக்கும் திருவருளைக் காட்டுகிறது. திருவருட்காட்சி பொங்கிப் பெருகிப் பேராறு போல எழுந்து வருவது காணும் வள்ளலார், அதற்கு முதலாய், இன்பமாலை போலத் தோற்றமளிக்கும் சிவபரம்பொருளை, ஞானக்கண்ணிற் கண்டு வியப்பு மேலிட்டு, “அருள்கலந்து துளும்பிப் பொங்கி எழும் பெருங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே” எனப் பாடுகின்றார்.

     (37)