38

      38. “சுத்த நெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த சுகப்பொருளே” (மகாதேவ. 30) என்றவிடத்தில் குறித்த சுகப்பொருள் நல்கும் சுகத்தை வடலூர் அடிகள் நம்மனோர் உணரும் வகையில் உரைத்தருள எண்ணுகின்றார். நிலவுலக வாழ்வு பகற்போதில் வெயில் வெம்மையும் இரணுபோதில் தண்ணிய காற்றின்மையும் தோன்றி வருந்தும் காலம் “பங்குனிப் பருவம்” என இலக்கியம் கூறும் வெம்மைக் காலமாகும். அப்பொழுது இளமை கனியும் நன்மக்களுக்கு வாழ்வில் சுகம் பற்றிய நாட்டம் உண்டாவது இயல்பு. அந்நாட்டம், முதற்கண் தண்ணிய பால் போன்ற வெண்மதியின் நிலவொளியை விரும்பும்; நிலாவின்கண் பொழிலிடத்தை மக்கள் மனம் விழையும்; பொழிலகத்தே புக்கவிடத்து, நிலவொளியும் தண்ணிழலும் காண்பவர் மனம் கமழும் தென்றற்காற்றினை விரும்புவர்; பொழிலின்கண் உயர்ந்து விளங்கும் தவளமாளிகையில் அமைந்த நிலா முற்றம், அத் தென்றலை நுகர்தற்கு ஏற்ற இடமாதல் காணப்படும்; அம்முற்றம் பளிங்குக் கற்களால் ஆகியிருப்பின் தென்றல் நுகர்ச்சி இன்பம் மிகுவிக்கும். அதனோடு இனிய இசையமுதம் நல்கப்படுமாயின், நிலா முற்றம் பேரின்ப நிலையமாகும். அவண் இருக்குங்கால் ஒருபால் தண்ணிய பனிநீர் தெளிக்கப்படின் மேனி முற்றும் குளிர்ச்சியால் இன்பமுறும். அந்நிலையில் உடற்குள் பசி தோன்றிச் செய்யும் வெம்மையைப் போக்குமாற்றால் மங்கை நல்லவர் தங்க வள்ளங்களில் பால் நிறைத்துத் தம் செங்கையில் அங்கங்குலுங்க வந்து உண்பிப்பரேல், இளமை வாழ்வு, ஈடும் எடுப்புமில்லாத சுக வாழ்வாம் என்று இன்ப நூலார் கூறுவர். சுத்த நெறிக்கண் தோய்ந்த அறிவுடையோர் பெறும் சுகபோகத்தின் முன்பு நிற்கமாட்டாமல் இன்ப நூல் கூறும் இந்தச் சுகமனைத்தும் மிகவும் பிற்பட்டுப்போம். இருள் கலந்த நிலவொளியில், தெவிட்டும் சிறுமையமைந்த விண்ணமுதம் உண்டு மகிழும் பொழிலகத்து நிலாமுற்றத்து எய்தும் சுகம் போலாது, அருளொளி கலந்து அறிவின் பரப்பு முற்றும் பரந்து இன்பம் நிறைந்து, நுகரும் உடம்பும் உயிரும் அவற்றின் அகத்தும் புறத்தும் உள்ள அனைத்தும் இன்பமயமாகச் செய்தருளுவது சிவமாகிய சுகப்பொருள் நல்கும் சுகம் என்று புகழ்கின்றார்.

 

2108.

     தண்ணமுத மதிகுளிர்ந்த கிரணம் வீசத்
          தடம்பொழிற்பூ மணம்வீசத் தென்றல் வீச
     எண்ணமுதப் பளிங்குநிலா முற்றத் தேஇன்
          இசைவீசத் தண்பனிநீர் எடுத்து வீசப்
     பெண்ணமுதம் அனையவர்விண் ணமுதம் ஊட்டப்
          பெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட் டோடக்
     கண்ணமுதத் துடம்புயிர்மற் றனைத்தும் இன்பங்
          கலந்துகொளத் தருங்கருணைக் கடவுள் தேவே.

உரை:

      அமுதமதி கிரணம் வீச பொழிற் பூ மணம் வீசத் தென்றல் வீச பளிக்கு நிலா முற்றத்தே இன்னிசை வீச பனிநீர் வீச, அமுதம் ஊட்டப் பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டோட, கண்முதல் அனைத்தும் இன்பம் கலந்து கொள்ளத் தரும் கருணைக் கடவுளானவன் மகாதேவன் எ.று.

     திங்களிடத்தே தண்ணிய அமுது உண்டு என்பது நம்மவர் கொள்கை. அதனை மது என்றும், அதனையுடைமைபற்றித் திங்களை மதி என்றும் நூலோர் கூறுகின்றனர். மது நிறைந்த முழுத்திங்களை அடிகளார் “தண்ணமுத மதி” என்று குறிக்கின்றார். அதனிடத்து எழுந்து வானிற் பரந்து ஒழுகும் நிலவு, குளிர்ந்த இயல்பிற்றாதல் தோன்றக் “குளிர்ந்த கிரணம் வீச” என்கிறார். பகற்போதில் வெம்மையால் வெதும்பினார்க்கு இரவில் தண்ணிய நிலவொளி பெரிதும் விழையப்படுதலால் அதனை முதற்கண் வைத்து மொழிகின்றார். பல்வேறு வகைப் பூக்கள் மலர்ந்திருக்கும் விரிந்த பொழில் என்றற்குத் “தடம் பொழில்” என்றார். இரவில் மலரும் பூக்கள் தம்முடைய நறுமணத்தால் அன்றி வண்டினத்தை ஈர்க்கும் வழி வேறில்லையாதலால், அவை மனம் மிகுந்திருக்குமாறு விளங்க, “மணம் வீச” என்று கூறுகின்றார். மணம் வீசுவது மலரேயாயினும், அம்மலர்க்கு வாய்த்த இடமாதல்பற்றித் “தடம் பொழில் பூமணம் வீச” எனப் பொழில் வீசுவதாக உரைக்கின்றார். இடத்து நிகழ் பொருளின் வினையை இடத்தின்மேல் ஏற்றிக் குளம் நீர் நிறைந்தது என்றார் போலக் கூறுவது இலக்கண மரபு. பங்குனிப்பருவம் எனக் காலம் உணர்த்த, “தென்றல் வீச” என்றார். குளிரும் பருவத்தும் தென்றல் இனிதாயினும், வெயிற் காலத்திற் போல, அதன் வீறு அக்காலத்தே விளங்குவதில்லை என அறிக. பளிங்கினால் அமைந்த நிலாமுற்றம் தொட்டவிடமெல்லாம் குளிர்ச்சி நல்கி இன்பம் செய்தலால், “எண்ணமுதப் பளிக்கு நிலா முற்றம்” என்றார். அமுதம் போல எடுத்துப் பருகிச் சுவைத்தலாகாத வேற்றுமை விளங்க, “எண்ணமுதப் பளிங்கு” என்கிறார். பொழிலிடத்தே வண்டினத்தின் இன்னோசை பரவினும், செவிச் சுவை நல்கி மகிழ்விக்கும் கருவிகள் பயக்கும் இன்னிசையைச் சிறப்பித்து, “இன்னிசை வீச“ என்று இசைக்கின்றார். வீசுதல், “தேர்வீசு இருக்கை” என்பது போல இன்பம் வழங்குதல் மேற்று. மகளிர் பொன்வள்ளத்திற் பெய்து தரும் பாலை விண்ணமுதம் என்று குறிப்பது தூய்மையும் இனிமையும் காட்டற்கு. கண்ணமுதம் - ஞானக்கண்ணாற் பெறும் ஞானவின்பம். நுகர்தொறும் குறையாவின்பம் தரும் ஞானம், ஒளிமயமாய் உடம்பினும் உயிரினும் அவற்றைச் சூழ அகத்தும் புறத்தும் உள்ள பொருள்கள் அனைத்தினும் தோய்ந்து இன்பம் செய்வது பற்றி, உடம்புயிர் அனைத்தும் இன்பம் கலந்து கொள்ளத் தரும் கருணைக் கடவுள் தேவே என்று கட்டுரைக்கின்றார். 'கடவுள் தேவு' கடவுளாகிய தேவே என்பதாம்.

     (38)