39
39. சிவம்பரம்பொருளின் கருணையை
நினைந்த வடலூர் வள்ளலார் அது பேராறு போலப் பெருக்கெடுத்து வருவதை எண்ணுகின்றார். நிலத்தில்
காணப்படும் பேராற்றுப் பெருக்குச் சுழிகள் பொருந்தி இடைப்பட்டாரைக் கரையேற விடாத குற்றமுடையதாக
விருப்பத்தை நினைக்கின்றார். அந்நிலையில் அவர் ஞானக் காட்சியில் தோன்றும் கருணைப்
பெருக்குச்
சுழியும் திரையுமின்றி இனிமை மிக்குத் திகழ்கிறது; அவ்வருட் பெருக்கில் சிவத்தின் ஞானஒளி
விளக்கம் செய்கிறது; அவ்வொளியும், தூண்டச் சுடர் விடும் மண்ணவர் விளக்கொளி போலின்றித்
தூண்டுதல் வேண்டாத செம்மணிகளால் இயன்ற விளக்கின் ஒளிகொண்டு விளங்குகிறது. அவ்வொளியை உற்று
நோக்குகின்றார் வள்ளலார்; ஞானவானத்தில் அதுதான் சுடரைப் பரப்பிக் காண்பார்க்கு இன்பம்
நல்குகிறது. உலகின்கண் நீலவானத்தில் ஞாயிற்றின் வெயிலொளி விரிந்து பரந்து தோன்றினும்,
பல இடங்களில் தனது ஒளி புகமாட்டாமையின், இருட்கும் இடமளிக்கிறது. ஞானவானொளியோ
பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து ஒளிர்கிறது. “ஞானம் ஈசன்பால் அன்பே” என ஞானசம்பந்தர்
மொழிவது அடிகளார் நினைவின்கண் தோன்றி ஞான அன்பரை மனக்கண்முன் காட்டுகிறது. அந்த அன்பர்
கூட்டம் ஞானம் பெருகி நல்கும் பேரின்பத்தில் திளைத்து இடையறாத சிவபோகத்தை நுகர்வது காண்கின்றார்.
அன்பர்கள் பலராகவும் அவர்கட்கு இன்பம் நல்கும் சிவபரம் பொருள் ஒன்றேயாய் இருப்பது உவகைமிகுவிக்கிறது.
ஒருபால் விண்ணுறையும் தேவர் கூட்டம் தெரிகிறது. ஆயினும், அவருட் பலர் சிவத்தைக் காண முயல்கின்றனர்
; சிலர் வாயார ஓதிச் சிவக் காட்சி பெறச் சிந்திக்கின்றனர்; சிலர் மனக்கண்ணிற் காணக்
கருதுகின்றனர்; வேறு சிலர் இக்கருவி கரணங்களை அடக்கித் தவத்தால் அறிய விழைகின்றனர். சிவமோ
எந்த வழியாலும் அவர்கள் கண்டு கொள்ளற்கு அரிதாய் மோனிகளின் மோனவெளியில் நின்று
விளங்குவதைப் பார்க்கின்றார்.
2109. சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்
தூண்டாத மணிவிளக்கின் சோதி யேவான்
ஒழியாது கதிர்புரப்புஞ் சுடரே அன்பர்க்
கோவாத இன்பருளும் ஒன்றே விண்ணோர்
விழியாலும் மொழியாலும் மனத்தி னாலும்
விழைதருமெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த
வழியாலும் கண்டுகொளற் கரிதாய்ச் சுத்த
மவுனவெளி யூடிருந்து வயங்கும் தேவே.
உரை: கருணைப் பெருக்காய், மணிவிளக்கின் சோதியாய், சுடராய், இன்பருளும் ஒன்றாய், எந்த வழியாலும் கண்டு கொள்ளுதற்கரிதாய், மவுனவெளியூடு இருந்து விளங்கும் தேவன் மகாதேவன். எ.று.
பெருகிப் பரந்துவரும் ஆற்றுநீர்ப் பெருக்கில் காணப்படும் நீர்ச்சுழி இங்கே நினைக்கப்படுகிறது. பெருநீர்ப் பெருக்கில் காணப்படும் நீர்ச்சுழி தன்கண் அகப்பட்டாரையும் சுழித்துக் கொல்லும் தீமையுடைத்தென அறிக. அக் குற்றமின்மை காட்டற்குச் சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்று கூறுகின்றார். எண்ணெய் பெய்தேற்றும் விளக்கனைத்தும் அவ்வப் போது தூண்டப்படும் சிறுமையுடையன வாதலால் அவற்றின் வேறுபடுத்த “தூண்டாத விளக்கே” என்றார், எண்ணெயின்றியே ஒளி செய்யும் மணியாலாகிய விளக்கு என்பது விளங்க, மணிவிளக்கு என்றார். வானிற் கதிர்பாய் சுடர், ஞாயிறு, புகலாகாதவாறு உலகியற் பொருள்களால் தடையுண்டு இருள் தங்குதற்கு இடம் தரும் குறைபாடு ஞாயிற்றொளிக்கு உண்டு. ஞானவொளி எப் பொருளாலும் தடைப்படாமல், பொருள்களின் அகத்தும் புறத்தும் எப்போதும் புகுந்து கலந்து இருட்கு இடனின்றிப் பரந்து விளங்கும் பண்பிற்றென அறிக. 'அன்பே ஞானம்' என்பது சைவநூல் வழக்கு. “ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞானமுண்டார்” என்று திருப்பாசுர உரையில் சேக்கிழார் தெரிவிக்கின்றார். நெடிது வாழும் இச்சையால் வினை செய்து மலநீங்கி ஞானம் விளங்கப்பெறும் வாய்ப்பின்றிப் போகநுகர்ச்சியொன்றே பொருளாக விழைந்து வாழ்பவராதலால் விண்ணோர் எவ்வகையாலும் சிவக்காட்சியுற்று இன்புறுதற் கமைந்தவரல்ல ராதலால் “விளம்பும் எந்த வழியாலும் சிவத்தை விண்ணோர் கண்டு கொளற்கு அரிது” என்று இயம்புகின்றார். மோனிகள் தனித்திருந்து சிவம் காணும் தக்கோராதலால், அவர்க்குக் காட்சிப்படும் ஞானப்பெருவெளியை “மவுனவெளி” என்றும், அங்கே சிவபரம்பொருள் கண்டு அனுபவிக்கப்படுவது புலப்பட, “மவுன வெளியூடு இருந்து வயங்கும் தேவே” என்றும் வள்ளலார் தெளிவுறுத்துகின்றார். அளவிறந்த பொருள்கள் தோறும் கலந்து நிற்றலின் பன்மைப் பொருள் போலினும், ஞானக் கண்கொண்டு அன்பால் நோக்குவோர்க்கு ஒன்றேயாய்த் தோன்றும் உண்மையை “ஓவாத இன்பருளும் ஒன்றே” என்கின்றார். (39)
|