42

      42. ‘ஒன்றியிருந்து நினைமின்கள்’ என்று அப்பர் அடிகள் வற்புறுத்தினார். ஒன்றியிருப்பதுதான் யோகம். யோகம் புரிபவர் உலகவராதலின் யோகக் காலத்தே உலகியல் செய்திகள் அவர் உள்ளத்தில் விலக்குகின்றனவே, அதனால் வாழ்க்கை இடையூறு படுமே என்ற நினைவு தோன்றி யோக நெறியை மறுக்கும். அதனால், யோகத்தால் குறைவுறாது என்பாராய், ‘உந்தமக்கு ஊனமில்லை’ என்று நாவரசர் காரணம்காட்டுகின்றார். உலகியற் பேறுகள் குன்றினால் பெறலாகும் இன்பக்குறைவு ஊனம் எனப்படுகிறது. இதனால் யோகம், மிக்க மனத்திட்பமுடையவர்க்கன்றிக் கைகூடாத அருமையுடையது. அதனை மேற்கொண்டு ஆற்றும் யோகியர் ஊனவுணர்வின்றி ஞானவின்பம் தலைப்படுவர். யோகம் பெருகப் பெருக நாளும் இன்பம் பெருகவதை யோகியர் உரைக்கின்றனர். அவ்யோகத்தைக் கைவரப் பெறுதற்குச் சரியை முதலிய மெய்ந்நெறி வேண்டப்படுகிறது. அந் நெறியும் கரும்பு தின்பதுபோல இன்பம் சுரந்து வாழ்வைப் பெருமையுடையதாக்குகிறது. பெருமை சிறக்கும்போது அறிவு விளக்கம் பெற்றுச் சிவமாம் நிலைமையை எய்துவிக்கிறது. அக் காலத்தே ஆன்ம ஞானமாகிய பெருவெளியைக் கண்டு அதன் உச்சியிற் சிவசூரியன் தோன்றி நடம் புரியும் இன்பக் காட்சியைப் பெறுகிறது. அக் காட்சி இடையறாது காண்பதற்கு யோகநெறி அமைகிறது. அவ்யோகத்தில் சிவபோகம் அருளப்படுகிறது. அருளே சிவத்துக்குச் செல்வம்.

2112.

     வரம்பழுத்த நெறியேமெய்ந்நெறியில் இன்ப
          வளம்பழுத்த பெருவாழ்வே வானோர் தங்கள்
     சிரம்பழுத்த பதப்பொருளே அறிவா னந்தச்
          சிவம்பழுத்த அநுபவமே சிதாகா சத்தில்
     பரம்பழுத்த நடத்தரசே கருணை என்னும்
          பழம்பழுத்த வான்தருவே பரம ஞானத்
     திரம்பழுத்த யோகியர்தம் யோகத் துள்ளே
          தினம்பழுத்துக் கனிந்தஅருட் செல்வத் தேவே.

உரை:

      வரம்பழுத்த நெறியாய், நெறியில் வளம் தரும் பெருவாழ்வாய், வானோர் சிரமாம் பதப்பொருளாய், அறிவானந்தச் சிவானுபவமாய், சிதாகாசத்து நிகழும் நடத்து அரசாய், கருணை பழுத்த வான்தருவாய், ஞான யோகியரது யோகத்துள் கனிந்த அருட் செல்வத்தையுடையவன் தேவதேவன். எ.று.

     இதன்கண் வரம் பழுத்தநெறியாவது நலம் பயக்கும் சரியை கிரியை நெறிகள். அவற்றுள்ளும் மெய்ம்மை நிலையிற் கொண்டு செலுத்துவது யோகமாதலால் அதனை 'மெய்ந்நெறியில் இன்ப வளம் பழுத்த பெருவாழ்வு' என்று குறிக்கின்றார். யோக வாழ்வு உலகியற்றுன்ப நெறியை மாற்றி இன்பமே நிலவும் இயல்பிற்றென்றற்கு, “இன்ப வளம் பழுத்த பெருவாழ்வு” என்கிறார். யோகத்தால் எய்தும் பதம் சிவசாரூப பதமாய்த் தேவர் உச்சிக் கூப்பிய கையுடன் போற்றும் பெருமை வாய்ந்ததாதலால், “வானோர் தங்கள் சிரம் பழுத்த பதப்பொருளே” என்று குறிக்கின்றார். அப் பதம் சிவஞானமும் இன்பமும் நிறைந்து சிவ சாரூப வாழ்வாதல் பற்றி, 'அறிவானந்த சிவம் பழுத்த அனுபவமே' என்று உரைக்கின்றார். அதற்கு மேனிற்பது, சாயுச்சிய மென்னும் ஞானப்பெருவெளி. அதனைச் சிதாகாசம் என்பர். அதன் உச்சியில் சிவ பரம்பொருள் ஐந்தொழில் நடம் புரிவது காட்சிப்படும். அதனைச் 'சிதாகாசத்தில் பரம்பழுத்த நடத்தரசே' என்று குறித்துக் காட்டுகின்றார். அச்சிவம், அருளே திருமேனியாகத் திகழ்வதாதலால், “கருணை என்னும் பழம் பழுத்த வான் தருவே” என்று கூறுகிறார். இதனை யோகியர் நாளும் யோகத்திற் கண்டு அது நல்கும் அருட்செல்வப் போகத்தில் அழுந்திக் கிடப்பது கண்டு, “பரம ஞானத்திரம் பழுத்த யோகியர்தம் யோகத்துள்ளே தினம் பழுத்துக் கனிந்த அருட் செல்வத் தேவே” என்று பாராட்டுகின்றார்.

     (42)