44
44. ஆன்மாக்கள் பலவாய் ஒன்றுபோல்
ஒன்றின்றி வேறுபட்டிருப்பவை; அதுபற்றியே, சிவத்தை ஏகம் என்றும், ஆன்மாக்களை அநேகம் என்றும்
சைவஞான நூல்கள் ஓதுகின்றன. அந்நிலையில் அவை பெறும் சிவஞான இன்ப அனுபவமும் வேறுபாடும்
போலும் என்றோர் ஐயம் எழுவது காண்கின்றார் நம் வடலூர் வள்ளல்; நுகரும் ஆன்மாக்கள் வேறு வேறாயினும்,
நுகரப்படும் சிவானந்தம் ஒன்றே என்று வற்புறுத்துவராய் அதனை ஒர் இனிய கனிவடிவில் வைத்துக்
கூறுகின்றார். சிவம் என்ற கனி வேறு வேறு வடிவுடையதன்று, “மெய்ம்மை ஞானமேயாய் உயிர் தோறும்
வேற்றுமையின்றி ஒரு தன்மையாய் விளங்குவது”, சிவக்கனி பெருங்கருணையையே நிறமாகவுடையது; அதன் உள்ளகம்
சாந்தம் நிறைந்து தனது இருப்பைப் புறத்தே பொங்கிக் காட்டுகிறது. மேலும், தன்னை நுகரும் ஆன்மாவின்
தகுதிக்கேற்ப தன்மையும் அருணிலையும் அதன்கண் படிப்படியாய் முதிர்ந்து கனிந்துள்ளன; அதனுடைய ஆக்கக்கூறு
முற்றும் அறிவுமயமாய் உள்ளது; ஏனை ஆன்மாக்களின் அறிவு மலம் கலந்திருப்பது; அவ்வாறின்றி மலக்கலப்பே
இல்லாமல், நின்மலமான சிவக்கனி ஞானமணம் கமழ்கிறது. ஞானம் அன்பாதலால், அந்த அன்பும் நீக்கமின்றி
அக் கனியிடத்தே இயன்றுள்ளது; அதன் சுவையோ எனின், உண்ணும் உயிரிடத்தே மோனத்தை நல்கி, மேன்மேலும்
உயர்கின்றது; அந்நிலையில் ஆன்மாவும் ஆனந்தத்தே அமையுமாறு இன்பரசன் ஒழுக்குகின்றது. அதன்பால்
அன்பால் ஆன்மா ஞானரசத்தைச் சிறிதும் சிதறாதவாறு உள்ளத்தே வாங்கி மகிழ்கிறது; உள்ளமும்
அதன் தித்திப்பு ஓங்குதல் கண்டு சிவமாம் தன்மை யெய்தித் திளைக்கின்றது. சிவபோகம் இவ்வாறு
செழுங்கனியாய்த் திகழ்வது உணர்ந்த அடிகளார், தேனெழுகும் சொஞ்சொற்களாற் பாடுகின்றார்.
2114. பேதமுறு மெய்ப்போத வடிவ மாகிப்
பெருங்கருணை நிறம்பழுத்துச் சாந்தம் பொங்கிச்
சீதமிகுந் தருள்கனிந்து கனிந்து மாறச்
சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா
ஆதரவோ டியன்மவுனச் சுவைமேன் மேற்கொண்
டானந்த ரசமொழுக்கி அன்பால் என்றும்
சேதமுறு தறிஞருளந் தித்தித் தோங்கும்
செழும்புனிதக் கொழுங்கனியே தேவ தேவே.
உரை: போதவடிவாய், இன்மயமாய், நின்மலமாய், செழும் புனித கொழுங்கனியாய்த் தேவுக்குத் தேவாய் விளங்குபவன் மகாதேவன் எ.று.
மெய்ப்போதம் என்பது மெய்யாகிய சிவஞானம். தன்னை அறிந்தெய்தும் ஆன்மவறிவு போலாது, எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எத்திறத்தார்க்கும் ஒரு தன்மைத்தாதல் விளங்குதற்பொருட்டே, “பேதமுறு மெய்ப்போத வடிவமாகி” என்று கூறுகின்றார். அதனை ஓர் தீவிய கனியாக உருவகம் செய்து மகிழ்கின்றராதலால், வடிவும் நிறமும் முதற்கண் வகுத்துக் காட்டுகின்றார். போதவடிவாகிய சிவக்கனியின் நிறம் பெருங்கருணை என்று குறிக்கின்றார். சுருக்கமும் பெருக்கமும் இன்றி நிறைவும் குறைவுமின்றி நிற்பது சிவனது பெருங்கருணை. பெருங்கருணை என்றதற்கு மிகுந்த கருணை என்று பொருள் கூறலாகாது; கருணைக்குக் குறைந்த நிலையும் உண்டெனக் கருதுதற்கு இடமுண்டாகும்; பெருமையமைந்த கருணை யென்பதுதான் நேர்பொருள். சிலவகை இனிய பழங்கள் பழுத்தவிடத்துப் புறத்தே ஒருவகைத் தோற்றும் பூத்துக் காண்பார் கருத்தைக் கவர்வது போல, இச் சிவக்கனி சாந்தம் பொங்கிப் பரந்துளது என்றற்குப் “பெருங்கருணை நிறம் பழுத்துச் சாந்தம் பொங்கி” என்றும், உலகியலில் பிறப்பிறப்புக்கு இடைப்பட்ட வாழ்வின் வெம்மையில் வருந்திய ஆன்மாவுக்குச் சாந்தம் பொங்கித் தோன்றும் சிவக்கனி குளிர்ச்சி நல்குதலால், “சீதம் மிகுந்து” என்றும், காட்சிக்கும் நுகர்ச்சிக்கும் இடையே அருள் பெருகித் தோன்றுதலை “அருள் கனிந்து கனிந்து” என்றும் உரைத்து உவகை மிகுகின்றார். பழச்சுவை உண்பார் உள்ளத்தில் நிறைந்து தன்மயமாக்குவது உணர்த்தற்கு “சின்மயமாய்” என்றும், அதன் மணம் தூய்மையேயாய்த் துலங்குமாறு தோன்ற “நின்மலமே மணந்து” என்றும் இசைக்கின்றார். உலகியலிற் கனியுண்பவர்பால் அதன் மணம் கமழ்வது கண்கூடு; அதுபோல் சிவக்கனியும் நின்மலமாகிய மணம் கமழ்கிறது என்கிறார். சில கனிகளின் தோற்றம்போலச் சுவை இருப்பதின்றி மாறுபனுவதுண்டு; அதனால் சீதம் மிகுந்து அருள் கனிந்து தோன்றும் சிவக்கனி உள்ளகமும் அருள் ஞானமாய் வேற்றுமையின்றி விளங்குகிறதென்றற்கு “மாறுச் சின்மயமா” என்று கூறுகிறார். புறத்தே சாந்தம் பொங்கித் தோன்றினும், ஊமைத்தசும்புள் நீர் நிறைந்தது போல் சிவஞான மோனத்தில் அன்பும் நிறைந்து இயலுமாறு வெளிப்பட, “நீங்கா ஆதரவோடு இயல்மவுனச் சுவைமேன் மேற்கொண்டு” என்று சிறப்பிக்கின்றார். புறத்துச் சாந்தமும் அகத்து மோனமும் உண்ணிறைந்த அன்பைப் புலப்படுத்தாவோ என நினைந்து மயங்கவேண்டா; அகத்தன்பு புறத்து ஆதரவாய் மோனிகளின் மேனியில் விளங்கும் என்றற்கு, “நீங்கா ஆதரவோடு இயல்மவுனம்” என்று விளக்குகின்றார். மௌனத்திற் பிறப்பது சிவம் ஒழுக்கும் ஞானச் செந்தேனாதலின், அதனை “ஆனந்த ரசம் ஒழுக்கி” என்கிறார்; “சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன” என்பர் திருநாவுக்கரசர். “கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச் சிறந்தடி யார் சிந்தனையுள் தேனூற நின்று” என்று திருவாசகமும் கூறுகிறதன்றோ? பெறற்கரிய பொருளைப் பெறுங்கால் அதன்பால் எழுந்த அன்பு அதனைச் சிதறுது பெறுதலில் கருத்தாயிருப்பது இயல்பாதலால், “அன்பால் என்றும் சேதமுறாது” என்றும், அது ஒழுகி நிறையுமிடம் சிவஞானிகளின் திருவுள்ளமாதலால், “அறிஞர் உளம் தித்தித்து ஓங்கும்” என்றும் கூறுகிறார். சிவக்கனியின் மாண்பு புலப்பட, “செழும்புனிதக் கொழுங்கனியே தேவதேவே” என்று உரைக்கின்றார்.
“மனிதர்காள் இங்கேவம் ஒன்று சொல்லுகேன், கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே; புனிதன் பொற்கழல் ஈசன் எனும் கனி, இனிது சாலவும்” (தனி.குறுந்.7) என நாவுக்கரசர் நயந்து மொழிந்த கனியை இங்கே அப்பெருமானது திருவடியருளால் அறிந்து வடலூர் வள்ளலார் இவ் வருட்பாவில் சொல்லுருவில் எடுத்து அளித்தருளுகின்றர். (44)
|