45

45. தமது யோக நிலையில் ‘இடையறாது உருகி நாடி உன்னிய கருத்தவிழ உரைகுழறி உடல் தளர்ந்து ஓய்ந்தயர்ந்து அவசமாகி, உணர்வரிய பேரின்ப அனுபூதி உணர்விலே உணர்ந்தவர், அவ்யோகத்துள் நாடோறும் பழுத்துக் கனிந்த அருள் நலத்தால், வாடிய உடலும் வருந்திய உள்ளமும், வாட்டமும் வருத்தமும் நீங்கிக் கண்ட பேரின்பம் நிறைந்த துளும்ப அருளாகிய தேன்மழையைப் பொழிவதை வடலூரடிகள் காண்கின்றர். அதனைத் தாமும் பெறுதல் வேண்டுமே என்று உண்மையறிவோடு ஏனையோரும் எண்ணுவதை ஒருபால் காண்கின்றார். அதனை இறைவன் கண்டு அவர்கள் அறிவும் நெறியும் பெறுதற் பொருட்டு வேத வேதாந்தங்களின் நற்கருத்துக்களை வழங்கிறார். அவை அவரது அறிவைச் சிவனாந்தப் பெருவெளியைக் காணச் செய்கிறது. அங்கே பரம்பொருள் ஞானவொளி பரப்பித் திகழ்கிறது. இதனால் யோகியர்ககே யன்றிப் பிறர்க்கும் இறைவன் அருள்புரியும் பொது நலத்தை நினைக்கிறார். அஃதொரு தீவிய திருப்பாட்டாய் வெளிப்படுகிறது.

2115.

     உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க
          உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே
     கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்
          கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே
     விடலரிய எம்போல்வார் இதயந் தோறும்
          வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம்
     தொடலரிய வெளிமுழுவதும் பரவி ஞானச்
          சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே.

உரை:

     மெய்யன்பர் உள்ளத்தில் கடலனைய பேரின்பம் துளும்ப கருணை மலர்த்தேன் பொழியும் கடவுட்காவாய், எம்போல்வார் இதயந்தோறும் வேதாந்த மருந்தளிக்கும் விருந்தாய், வெளிமுழுவதும் பரவி ஞானச்சோதி விரித்தொளிரும் சோதித்தேவன் மகாதேவன். எ.று.

     ஒருவர் ஒன்றைக் காணும்போது காணும் அவருடைய புறவுடலையும், உள்ளிருந்து உடல் கருவியாகக் காணும் உயிரையும், இரண்டினையும் காட்சியில் இயைவிக்கும் உள்ளத்தையும் அதன் இயைபால் உடலில் பரந்து எழும் உணர்ச்சியையும் தெரிந்துரைப்பது நுண்புலமுடையார்க்கு இயல்பு. அந்த நுண்ணிய நுழைபுலம் திருவருளால் வாய்க்கப் பெற்றமையின் யோக முடிவில் யோகியர் பெறும் இன்ப அனுபூதியை 'உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி யோங்க உளம் கனிய, இன்பவெள்ளம் நிறைந்து துளும்ப' என்று அடிகளார் சொல்லோவியம் செய்தருளுகின்றார். யோக நெறியால் மெய்ப்பொருளின் மெய்ம்மை கண்டு அதன்பால் அன்பு மேவிப் பெருமக்களாக மாறுதலால், அவர்களை “மெய்யன்பர்” என்று மொழிகின்றார். அவர் உள்ளத்தே இன்பம் நிறைந்து மனக்கண்ணால் காணுமிடத்துக் கடலிடையிருந்து காண்பவன் எங்கும் கடலே காண்பதுபோலப் பார்க்குமிடந்தோறும் இன்பமேயாய்க் காணப்படுவது பற்றி, 'மெய்யன்பர் உள்ளத்தூடே கடல் அனைய பேரின்பம் துளம்ப' என்று கூறுகின்றார். காண்பவர் உள்ளமாகிய மலரினின்றும் கசிந்து ஊறி வருவது கருணை; (இரக்கம், அருள்) ஆதலால், கருணை மலர்த்தேன் என்பது, அடிகளாரின் மெய்ம்மை கண்டுரைக்கும் சொல்லின் வீறு இஃது என்று நமக்குக் காட்டுகிறது. நம்மால் அன்பு செய்யப்பட்டார்பால் செல்லும் நமது பரிவும் கண்ணோட்டமும் பிறர்பால் அந்த அளவு செல்வதில்லை. இறைவன் நம் போல்பவனல்லன். அவன், மற்றவர்பால் மெய்யன்பரது ஞானநிலை எய்துவித்து அவரோடு ஒப்ப உயர்த்தித் திருவருள் ஒளி பெறுமாறு செய்கின்றான். அதனை உணர்த்த 'எம்போல்வார் இதயந்தோறும் வேதாந்த மருந்தளிக்கும் மருந்தே' என்று கூறுகின்றார். மெய்யன்பரைத் தழுவினாற்போல் நம்மை ஏலாது விலக்குவது இறைவன்பால் காணப்படாதாகலின், 'விடல் அரிய எம்போல்வார்' என்று குறிக்கின்றார். “பரவுவாரையும் பழித்து இகழ்வாரையும் உடையார்” என்பர் ஞானசம்பந்தர். வேத ஞானம் இறைவனது பெருவெளி வரையிற் சென்று அதற்கு மேலே செல்லாது; அதனால்தான், 'வேதம் தொடலரிய வெளி' எனச் சிதாகாசப் பெருவெளியைச் சிறப்பிக்கின்றார். அப் பெருவெளியில் ஒளிபரப்பும் அருட்பெருஞ் சோதியை வேதாந்தம் காட்டும் என அறிக.

     (45)