46
46. சிவக்கனியின் சுவைகண்டார் மேன்மேலும் அதனையுண்டற்கே விரும்புவர்; அதனால், அவர்கட்குச்
சிவபூசனையும் சிவவழிபாடும் ஆகிய கிரியை முறைகளை ஆகமிகள் வகுத்துள்ளனர்; அவையும் மக்களை யோகத்திற்
செலுத்தி ஞானம் பெறுவிக்கும் படிமுறைகள் என்பது நூன்முடிபு. அதனை அறிந்தோர் ஞானநூற் பயிற்சியை
ஞான பூசையென்று வகுத்து நெறிகாட்டினர். ஞானநூல்களில் உயர்ந்தவையெனக் கருதப்படும் மறைகளையும்
அவற்றின் முடிவு நூல்களான உபநிடதங்களையும் சிவாகமங்கையும் பயில்வர். அப்பயிற்சியும் ஞானசிரியன்
மார்களாலன்றித் தெளிவு நல்கும் திறமுடையவல்ல; தெளிவுறுத்தும் ஆசிரியர்கள் வாயாற் சொல்லாமல்
குறிகளால் காட்டுவர்; அதுபற்றியே அதனைப் பேசாக் கலை என்று அறவோர் உரைக்கின்றனர். கேட்போரும்
சொல்லின் எல்லை கடந்து அதற்கு மேலுள்ள நிலைகளையடைந்து ஞானக்கண்ணால் ஆங்குப் புலனாகும் ஞானக்காட்சியால்
சிவத்தைக் காண்பர். அக் காட்சியின்கண் உயிரறிவு சிவத்தோடு ஒன்றியும் ஒன்றாது சிவமும் தானுமென
இரண்டாய் நின்றும் அறியும் நிலை இருவகைப்படும். ஒன்றியநிலை உணர்வுக்கு அகப்படாமையும் ஒன்றாது
இரண்டு்பட்ட நிலை நுகர்ச்சிக் காகாமையும் கண்டு, ஒன்றியுடனாய் நின்று இன்புறுவதே உண்மைநிலை
எனச் சிவத்தை அறிபவரும் உண்டு. இவ்வாறு கேள்வி, காட்சி, அறிவு என மூவகையில் நின்று, படிப்படியாக
ஏறிச் சிவத்தைப் பெறுவதை விடுத்துச் சிவத்தை நீங்காது நிலைபெற நின்று நினைவால் நினைத்தவண்ணம்
இருக்கும் மேலோர் உண்டு. அவர்கட்குச் சிவம் அவர் நினைவின்கண் ஒளிப்பொருளாய்த் திகழும்
சிறப்பை வடலூர் வள்ளல் தெளிவிக்கின்றார்.
2116. கிரியைநெறி அகற்றிமறை முடிவில் நின்று
கேளாமல் கேட்கின்ற கேள்வி யேசொற்
கரியவறை விடுத்துநவ நிலைக்கு மேலே
காணுமற் காண்கின்ற காட்சி யேஉள்
அரியநிலை ஒன்றிரண்டின் நடுவே சற்றும்
அறியாமல் அறிகின்ற அறிவே என்றும்
உரியசதா நிலைநின்ற உணர்ச்சி மேலோர்
உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே.
உரை: கேளாமல் கேட்கின்ற கேள்வியாய், காணமால் காண்கின்ற காட்சியாய் அறியாமல் அறிகின்ற அறிவாய், உன்னாமல் உன்னுகின்ற ஒளியாய், விளங்குபவன் மகாதேவன். எ.று.
“ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்” (திருமந். 1447) என்று திருமூலர் கூறுதலால், கிரியை சிவபூசனை மேலது என்று அறியலாம். “கானுறு கோடி கடகமழ் சந்தனம், வானுறு மாமலர் இட்டு வணங்கினும், ஊனினை நீக்கி யுணர்பவர்க் கல்லாது, தேனமர் பூங்கழல் சேரவொண்ணாதே?” (திருமந். 1458) என்றலின், கிரியை நெறியை நீக்கி ஞானபூசைக்கண் நிற்பார்க்கு ஞானாசிரியர் காட்டிய நெறிக்கண் நின்று ஞானம் எய்தப் பெறுதலை, “மறை முடிவில் நின்று கேளாமல் கேட்கின்ற கேள்வியே” என்று கூறுகின்றார். திருமூலரும் “உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால், சித்தம் குருவருளாற் சிவமாகுமே” (திருமந். 1455) என்பது காண்க. சொல்லின் எல்லை இங்கே 'அறை' எனப்படுகிறது. ஒர் எல்லைக்கு எளிதில் அகப்படாத அருமைபற்றி “அரிய அறை” என்று குறிக்கின்றார். நவநிலையை அனுபவமார்க்கம் என்றும், விந்த, நாதம், பரவிந்து, பரநாதம், திக்கராந்தம், அதிக்கிராந்தம், சம்மௌனம், சுத்தம், அதீதம், என ஒன்பதாமென்றும் வள்ளலாரே கூறுகின்றார். அதீதத்தில் ஊனக்கண்செயலறுதலால், ஆண்டு நிகழும் காட்சியைக் “காணாமற் காண்கின்ற காட்சி” என்று குறிக்கின்றார். நிலை ஒன்றென்பது பரநிலை; இரண்டென்பது அபர நிலை. பரம் அபரம் என்ற இரண்டும் சிவபோகநுகர்ச்சிக்கு அமையாமையின், “நடுவே அறியாமல் அறிகின்ற அறிவே” என்றார். அஃதாவது சிவத்தோடு “ஒன்றியுடனாகும்” சுத்தாத்துவிதநிலை. “போதநிலை முடிந்தவழிப் புக்கு ஒன்றியுடனுனுர்” எனச் சேக்கிழார் தெரிவிப்பது நினைவு கூரத்தக்கது. உடல் கருவிகளோடு கூடிநிற்கும் சீவன் சுத்தநிலையில் பெறப்படும் அத்துவிதக் கலப்பு அறியாமையும் அறிவும் கலந்திருத்தால், அவ்வாறன்றி எஞ்ஞான்றும் மாறாத அறிவே நிலையாய், மெய்ம்மை உணர்வால் உயர்ந்தோர் உள்ளத்தில் சிவம் ஒளிர்ந்தவண்ணம் இருத்தல் தோன்ற, “சதாநிலைநின்ற உணர்ச்சி மேலோர் உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே” என்று இயம்புகின்றார். கேள்விக்கும் காட்சிக்கும் அறிவுக்கும் மேலாம் நிலையைச் சதாநிலை எனவும், அந்நிலையில் உன்னுதலன்றி வேறு செயலின்மை விளக்க “உன்னாமல் உன்னுகின்ற” என்றும், உன்னிய கருத்தின்கண் ஒளிமயமாய் விளங்குமாறு பற்றி, “ஒளியாம் தேவே” என்றும் உரைக்கின்றார். நவநிலையின் மேலது அதீத மாதலால், அதற்கும் மேலாய் ஒர் நிலையுளதாதல் இல்லையாதலால், காட்சி செல்லாமை காட்டுதற்கு “மேலே காணாமல் காண்கின்ற காட்சி” என்று இயம்புகின்றார். மறைக்குள்ளும் முடிவுக்குள்ளும் அமைந்த பொருள் தடைவிடைகளால் விளக்கப்படும் இயல்பினவாதலால், உண்மைஞானப் பொருள் ஞானாசிரியனால் குறிகளால் காட்டப்படுவதாயிற்று. (46)
|