47
47. மறைமுடிவில் நின்றோர் ஓதியுணர்தற்கு வேறு நூல்கள் இல்லாமையால்,
ஞானாசிரியர் காட்டும் குறிகளால் உணர்வர் என்றது கேட்கும் அறிஞர், வேத முடிவில் இயல்பு தெரியும்
வேட்கையுடையராவது காண்கின்றார் வடலூர் வள்ளல். சொற்களின் எல்லையே மறைகள்; அம்மறைகள்
தமக்கு மேலாய் நின்ற சிவபரம் பொருளை, தமக்கு ஊற்றாய் நின்ற உணர்வுபற்றித் தொடர்ந்து எண்ணி
எட்டமாட்டாமையால் சோர்ந்து போயின; சோர்வு மிகுதியால் அவை மடங்கி முன்னைய
சொல்லுலகிற்கே மீண்டன; சோர்வு படுமிடத்து உணர்வுக்கு வன்மை தந்து மெய்ப்பொருள் உலகிற் புகுத்துவது
பரம்பொருளின் அருட்செயலாகும்; அருட்கு நெறி உண்மையன்பாதலின், அவ்வன்பருடைய உள்ளதே விரைந்து
சென்று அருள்வாழ்வு பெறச்செய்கிறது சிவபரம் பொருள். அந்நிலையில் அருள் ஞானியின் உள்ளத்தின்
மாண்பினைக் காண்கின்றார் வள்ளலார். தற்போதமாகிய முனைப்பு அங்கே இல்லை; தற்போதம் நிலவிய
உள்ளத்தின்கண் திருவருள் ஞானம் நிறைந்து உள்ளும் புறமும் கலந்து உள்ளமும் உணர்வும் ஊனும் உடம்பும்
எல்லாம் அருளொளிகொண்டு இன்பமயமாய் இருக்கின்றன. கார்காலப் பெருமழையால் நிலப்பரப்பெல்லாம்
நீர் நிறைந்து ஒரே நீர்மயமாய், இடையிடையேயுள்ள வரம்பும் கரம்பும் மறைந்து நீருலகமாய்க் காட்சி
தருவதுபோல, அன்பர் உடலகம் முற்றும் திருவருட் பெருக்கு நிறைந்து பரந்து சிவானந்தம் மேலிட்டிருப்பது
காணப்படுகிறது.
2117. சொற்போதற் கரும்பெரிய மறைகள் நாடித்
தொடர்ந்துதொடர்ந் தயர்ந்திளைத்துத் துளங்கி ஏங்கிப்
பிற்போத விரைந்தன்பர் உளத்தே சென்ற
பெருங்கருணைப் பெருவாழ்வே பெயரா தென்றும்
தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித்
ததும்பிவழிந் தோங்கியெலாந் தானே யாகிச்
சிற்போதத் தகம்புறமும் கோத்து நின்ற
சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத் தேவே.
உரை: அன்பர் உள்ளத்தே சென்ற பெருங்கருணைப் பெருவாழ்வாய் தற்போத ஒழிவின்கண் நிறைந்து எல்லாம் தானேயாய், சிற்போதத்தின் நின்ற சிவானந்தப் பெருக்காய், மெய்யான செல்வமாய் விளங்குபவன் மகாதேவன். எ.று.
செல்லுலகம் கீழ்நிலை, இடைநிலை, மேனிலை என மூன்று வகைப்படும். கீழ்நிலை பூதபௌதிகங்களாகிய பொருள்களையும், இடைநிலை உயிர்ப்பொருள்களையும், மேனிலை பரம்பொருள்பற்றிய உணர்வுப் பொருள்களையும் உரைப்பன; அவை யாவும் உணர்வெல்லைக்கண் தோன்றிச் சொற்களாய் உருக்கொண்டு ஒதுவார் உணர்வில் தோன்றித் தெளிவும் இன்பமும் நல்கும். சொல்லுலகின் மேனிலையில் நின்று மேலே சொற்கள் செல்லுதற்கரிய எல்லையைத் தலைப்பட்டு நிற்பது மறைமுடிவாதலின், அதனைச் “சொல் போதற் கரும் பெரிய மறை” என்றும், அந்நிலையில் ஒருமை முடிவு காணும் தெளிவு எய்தப்படாமையின், அவற்றை மறைகள் எனப் பன்மையாலும் கூறுகின்றார். சொல்லும் போருளுமாகிய உலகின் கூறுகளை நுணுகியுணர்ந்து உரைக்கும் நூல்களுள் நுண்ணிய உண்மைகளைத் தமக்குள் அடக்கியிருக்கும் நூல்களும் ஒருவகையில் மறைகளேயாகும்; ஆயினும், அவை சொற்கள் புகுந்து கண்டு உரைக்கும் எளிமையுடையனவாம்; அவற்றை விலக்கி உரையுணர்வு கடந்த எல்லையைக் காட்டும் மறைகள் பெரியவாதலின், அவற்றைச் “சொற்போதற் கரும் பெரிய மறைகள்” என்று குறிக்கின்றார்; முடிவு காணமையின் அவை ஆராய்ந்த வண்ணமாய் எங்கேனும் நுண்ணிய நெறி புலப்படின் அதனைத் தொடர்ந்து தொடர்ந்து செல்வதுபற்றி, அவற்றின் செயலைத் “நாடித்தொடர்ந்து தொடர்ந்து” என்று இசைக்கின்றார். தொடர்வார்க்குத் தொடரப்படுவது கைவராவிடத்துச் சோர்வும் இளைப்பும் துளக்கமும் உண்டாதல் இயல்பாதலால், “அயர்ந்து இளைத்துத் துளங்கி ஏங்கி” என்றும், ஏக்கத்தின் விளைவு மீள்வதன்றி மேற்சேறல் இல்லையாதலால், “பிற்போத” என்றும் உரைக்கின்றார். இதுகாறும் தொடர்ந்து செல்வதற்குத் துணைசெய்த கருவி கரணங்கள்தான் படைத்தளிப்ப எய்தியவையாதலின், அவற்றிற்கு வன்மை தந்து ஊக்குவது இறைவனுக்கு ஒத்ததாகும். அதனை விரைந்து செய்யாதவழிப் பிற்போதும் உணர்வு கீழ்நிலைச் சொல்லுலகில் வீழ்ந்து தடுமாறும் என்பது சிவத்துக்குத் தெரியுமாதலின், உடனே, அது தனது அருளொளியை நல்குகிறது. அயர்ந்து இளைத்துத் துளங்கியபோதும் மறைஞானியின் உள்ளம் சிவத்தின்பாற் கொண்ட உண்மையன்பு மாறமையின், அன்பு பற்றாக அருள்ஒளி பரப்பி அருள் வாழ்வைக் காட்டுகிறது; அதனை “விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெருங்கருனைப் பெருவாழ்வே” என்று குறிக்கின்றார். ஒளிதோன்ற இருள் நீங்குவதுபோல, இதுகாறும் சொல்லுலகில் உயிருணர்வை ஊக்கி நின்ற தன்முனைப்பாகிய மலவிருள் கெட்டொழிகிறது; தொட்டவழி நீங்கி விட்டவழிப் படரும் முட்டைப் பாசிபோல் கிடந்த தற்போத முனைப்பு யான் எனது என்னும் செருக்குக் கெடுவதால், அருள் ஞானவொளி பரந்து உயிரிலும் அதனைச் சூழ்ந்துள்ள உடற்கூறுகளிலும் நிறைந்து மீதூர்ந்து எல்லாம் தானேயாகத் திகழ்விக்கிறது; இதனை, “பெயராது என்றும் தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கி எல்லாம் தானேயாகி” என்று இயம்புகின்றார். அங்ஙனம் ஆதலால், உள்ளும் புறமும் அணுப்புதைக்கவும் இடமின்றிச் சிவானந்தம் பெருகித் தேங்குகிறது. இதனைச் “சிற்போதத்து அகம் புறமும் கோத்து நின்ற சிவானந்தப் பெருக்கே” என்று சிறப்பித்து, இதனினும் நிலைத்த செல்வம் வேறு இன்மையின் “மெய்ச் செல்வத் தேவே” என்று புகழ்கின்றார். (47)
|