48
48. பரம்பொருள் ஒன்று உண்டு என்று
உணர்ந்து அதற்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்புகண்டு அது வாயிலாக அப்பொருளை அடையும் நெறியை
யாராய்ந்துரைக்கும் சமயங்களை வள்ளலார் எண்ணுகின்றார். ஆறுகள் வேறு வேறு மலைகளிலும் மேட்டிடங்களிலும்
தோன்றி, முடிவில், நிலவுலகு முற்றும் சூழ்ந்து பரந்து நிற்கின்ற ஒரு பெருங்கடலை அடைவதுபோல, இச்சமயங்களும்
பேரறிஞர்களின் பெருமை சான்ற உள்ளத்தில் தோன்றி மக்களிடையே பரவிப் படர்ந்து ஒன்றாகி
எங்கும் பரந்து நிற்கும் பரம்பொருளை நோக்குவதைக் காண்கின்றார். பரந்து நிற்கும் பான்மையின்
எங்கும் எக்காலத்தும் எப்பொருளிலும் நிகழும் எல்லாவற்றையும் முற்றும் அறியும் தன்மையும் அப்
பரம்பொருட்கு உண்டு என்றும் உணர்கின்றார். அதற்கும் தமது வாழ்வுக்கும் உள்ள தொடர்புணர்ந்து
அதன்பால் அன்பு செய்யும் நன்மக்கட்கு வாழ்வின்கண் தோன்றும் மயக்கத்தால் பிறக்கும் வெப்பத்தை
நல்லறிவு தந்து தணிக்கும் அருள் நிழலைத் தரும் நிழல் மரமாகவும் மனமாகிய அல்லிப்பூ பரம்பொருளாகிய
தண்ணிய மதியொளியால் மலர்வதாகவும் கற்பனை செய்து, இவையேயன்றி வேறு எல்லாம்
செய்யவல்ல அதன் கடவுட்டன்மையை
உரைத்து மகிழ்கின்றார்.
2118. பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்
தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவ தேவே.
உரை: பலவகைச் சமயமென்னும் நதிகள் புகுந்து கலந்தும் நிறைவாய், ஓங்கும் கங்குகரை காணத கடலாய், எங்கும் கண்ணாகக் காணும் கதியாய், அன்பர் மயற்கோடை தணிக்கும் தருவாய், பூந்தடமாய், ஞானக் குமுதம் மலர்த்தும் மதியாய், எல்லாம் செய்ய வல்லனாவன் தேவதேவன் எ.று.
காணும் உயிர்ப் பொருளுக்கெல்லாம் எல்லை என்பது தோன்றக் “கண்ணாகக் காண்கின்ற கதி” என்று குறிக்கின்றார்.
அறியாமையால் மயங்கி மனம் வெதும்பி வருந்துங்கால் அறிவொளி நல்கிக் குளிர்விக்கும் நலம் பற்றி “மயற் சோடை யெல்லாம் தணிக்கின்ற தருவே” என்று கூறுகிறார். நிழல் மரமேயன்றிப் பூக்கள் நிறைந்த பொய்கையும் கோடை தணிக்கும் திறத்தனவாதலால் பூந்தடத்தை உடன் கூறுகின்றார். செங்குமுதம்-செவ்வல்லி; வெண்குமுதமும் உண்டாயினும், செம்மை மனத்துக்கு உவமம் செய்தலின் செங்குமுதம் எனல் வேண்டிற்று. குமுதம் இரவில் நிலவொளியில் மலர்வது. மனத்தை அருள் ஒளியால் மலரச் செய்வதுபற்றி 'மலர வரும் மதி' என்கின்றார். (48)
|