49
49. இதுவரையும் சிவயோக சிவஞானச்
சிறப்புக்களைப் பல படியாக விரித்துப் பாடிவந்த வடலூர் வள்ளல், அவற்றின் ஏதுவும் பயனுமாய் நிற்கும்
அன்பையும் அதனையுடைய தொண்டர்களையும் நோக்குகின்றார். அவர்களோடு உரையாடுகின்றார். பரசிவத்தைக்
கண்டு இன்புற்றுற் போலும் உள்ளக் கிளர்ச்சியும் உவமை மிகுதியும் அவரிடத்தே பொலியக் காண்கின்றார்.
பரம்பொருளைக் காண்பது என்பது வானுலகுக்கோ அதுபற்றி விரித்துப் பேசும் மறைகளுக்கோ ஆகாது;
மறைகளாற் பாராட்டப்படும் தேவர் மூவரிலும் ஒருவரும் காணார்; பிரமன் காணான்; திருமால் காணான்;
உருத்திரனும் காணான்; நான் என்னும் தண்முனைப்பாலும் அப் பரம்பொருள் காணவொண்ணது. “நான் கெட்டவா
பாடி” என்றற்போல, நான் என்ற செருக்கு அற்றவிடத்தே, பரசிவத்தைக் காணலாம் என்று அறிவிக்கின்றார்.
“தானும் அழிந்து தனமும் அழிந்து, நீடு ஊனும் அழிந்து, உயிரும் அழிந்துடன், வானும் அழிந்து,
மனமும் அழிந்தபின், நானும் அழிந்தமை நான் அறியேனே” (திருமந். 2951). அவர் நல்லுணர்வும்
நன்மொழியும் நற்செயலுமே நிறைந்து நல்லோர்களாய் விளங்குகின்றனர். தாம் கண்ட சிவம் நலமே
வடிவாயது என்று உரைக்கின்றனர். அதனைக் காண்பதால் விளைவதும் நலம் என்கின்றனர். அவர்தம் உள்ளம்,
வான்படரும் ஞாயிற்றின் ஒளி கண்டு மலர்ந்து பொய்கைத் தாமரைபோல, அன்புப் பொய்கையில் சிவத்தின்
அருளொளியால் மலர்ந்துள்ளது; வேட்கையை விளைவிக்கும் பிரகிருதி மாயையின் ஆசையிருள் அகன்
றொழிந்துவிட்டது; இனி எத்துணை முயன்றாலும் அதனால் அவர் மனத்தாமரையைக் குவிய்ச் செய்ய இயலாது.
மலரின் மலர்ச்சியில் இன்பத்தேன் ஊறுதல்போல, அவருடைய மலர்ந்த உள்ளத்தில் சிவானந்தம்
ஊறிப் பெருகுகிறது. அந்நிலை எய்துதற்குள் அவருடைய அன்பு சிவத்தின்பால் விருப்புப் பெருகுவித்து
அலைக்கிறது; தாயைக் காணாது அலையும் ஆன்கன்று போல, அவர்கள் அலமருகின்றார்கள். அது காணப்பெறாத
தாய் கன்றையடைந்து தன் நாவின் அன்புநீரால் நக்கி மகிழ்விப்பதுபோலச் சிவமும் அவர்பால்
விரைந்து போந்து அலையும் அவர் உள்ளத்தே தோய்ந்து கலந்துகொள்ளுகிறது. அன்பரது பிறப்பு மலம்
காரணமாக வந்ததாயினும், கலந்துகொள்ளும் சிவனை அந்த மலத்தின் வாடை நெருங்குவதில்லை; அவன்
அமலனாகவே அமர்கின்றான். இத்தனையும் கண்டதும் வள்ளலார் உவகையால் துள்ளி இப்பாட்டினைப்
பாடுகின்றார்.
2119. வான்காணா மறைகாணா மலரோன் காணான்
மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று
நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற
வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்
அன்பர்தமைக் கலந்துகொள்ளும் அமலத் தேவே.
உரை: வானும் மறையும் மலரோனும் மாலும் உருத்திரனும் காணானாயினும் “நான்” என்ற தற்போதம் காணாவிடத்து அதனைக் காணலாம் என்று நல்லோர் நவிலும் நலமாய், உளக்கமலம் அலர்த்தா நின்ற வான்சுடராய், ஆனந்தமயமாய், அன்பர்களைக் கலந்து கொள்ளும் அமலமாய் இலங்குபவன் மகாதேவன். எ.று.
'வான்' என்றது, வானுலகில் வாழும் தேவர்களை. மறை, மறைகளை யுரைத்த முனிவரர்களைக் குறிக்கும். மறைகளை நாளும் ஓதுபவன் பிரமன்; அவன் திருமாலின் உந்தித்தாமரையில் இருப்பவன் என்பதுபற்றி மலரோன் காணாமை வியப்பன்றாதால், “மலரோன் காணான்” என முடித்துக் கூறினார். ஈசன் திருவடி காணாமல் திகைப்புற்றது புராண மறிந்த செய்தி. உருத்திரன் உள்ளம் உருத்திரச் செயலில் ஆழ்ந்திருத்தலால், தெளிவும் ஒருமையும் கொண்டு காண்டல் இல்லையாதல் தோன்ற, “உருத்திரனும் மதித்துக் காணான்” என்றார். நான் என்றது செய்வினைக்கு முதலாய்ச் செயப்படுபொருளும் பயனுமே கருதி நிற்கும் தன்முணைப்பு. அறிவன அறியுமிடத்தும் நான் அறிவேன், எனது இவ்வறிவு என்று நிற்குங்கால் தற்போதம் என்று வழங்கும். நான் என்னும் முனைப்பு அற்றலன்றி அருள் துணையாலாகும் காட்சி பிறவாவாதலின், “நான் காணாவிடத்து அதனைக் காண்போம்” என்று நல்லோர்கள் கூறுகின்றனர். “நல்ல சிவதன்மத்தால் நல்ல சிவயோகத்தால் நல்ல சிவஞானத்தால் நான்” (திருக்களிற். 15) அறிந்தவர்களை நல்லோர் என்று வள்ளலார் வரைந்து கூறுகின்றார். உலகபோக நுகர்ச்சிக்குரிய பொருள்கள் எல்லாவற்றிற்கும் மூலகாரணமாய், அவை தனக்குள் ஒடுங்க நிற்கும் பெருமையுடைமைபற்றி மூலப்பகுதி “மான்” என்படுகிது. இதனை வடமொழியில் “மகத்” தென்பர். நுகர்ச்சிக்குரிய வேட்கையை விளைவிப்பதுபற்றி “வேட்கை மான் காணா வுள்ளம்” என்றார். வேட்கை மான், வேட்கையாகிய மான் என விரியும்.; பனைமரம், பனையாகிய மரம் என விரிவது போல் சத்துவம் முதலிய முக்குணங்களை எழுப்பி முறையே சுகதுக்க மோகங்களை உண்டாக்கி விருப்பு வெறுப்புக்களைத் தோற்றுவிப்பது மான் ஆதலின், அவற்றால் கதுவப்படாத பெருமக்களின் உள்ளத்தை, “வேட்கை மான் காணா உள்ளம்” என்றார். கமலம் ஞாயிற் றொளியால் மலர்வது போலச் சிவத்தின் அருளொளியால் சிவஞானிகளின் உள்ளம் மலர்வது தோன்ற, “உளக்கமலம் அலர்த்தா நின்ற வான் சுடரே” என்றார். வான்சுடர் என்றது, ஞாயிற்றொளிக்கும் அருள் ஒளிக்கும் பொதுவாய் நிற்கிறது. உள்ளம் மலர்ந்தவழிப் பெறப்படுவது பேரின்பமாதல் விளங்க, “ஆனந்த மயமே” என்று கூறுகின்றார். “ஆரேனும் அன்பு செயின் அங்கே தலைப்படுங்காண், யாரேனும் காணா அரன்” (களிற். 15) என்பது பற்றி, “அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத் தேவே” என்று இசைக்கின்றார். கலவாவழி ஆனந்தம் எய்தாமை பற்றி, “ஆனந்த மயமே” என்றதனை அடுத்து, சிவத்தின் கலப்பினை உடன் உரைக்கின்றார். இதனால் நல்லோர் நவில்கின்ற நலமே உருவாகிய சிவம் அன்பர்தமைக் கலந்து அவரது அகத்தாமரையை யலர்த்தி ஆனந்தம் பெறுவிக்கின்ற அருட்செயல் உரைப்பது பயனாயிற்று. (49)
|