50
50. “ஞானிகளாய் உள்ளவர்கள் நான்மறையின்
பொருளுணர்ந்து ஐம்புலன்கள் செற்று மோனிகளாய்த் தனித்திருந்து முனிச்செல்வர் தவம் புரியும்
முதுகுன்றமே” என்ற திருப்பாட்டால், மோனிகளாவோர் ஞானிகளாய், மறைப்பொருள் உணர்ந்து புலன்களைச்
செற்று மேம்படுகிறார்கள் என்றதை உட்கொண்டு வள்ளலார் மோனநிலை எய்தும் திறத்தை உரைக்கின்றார்.
வாழ்வாங்கு வாழ்ந்துவரும் நல்லோர் தொடக்கத்தில் மெய்ஞ்ஞானத்தில் விருப்புற்று ஞானாசிரியரைக்
கண்டு ஞானப் பொருளைக் கேட்கின்றனர். கேள்வியால் தெளிவு பிறந்தபின் புலன்களின் மேற் செல்கின்ற
ஆசைகளை அறுக்கின்றார்கள். ஆசையறவே அஞ்ஞானம் நீங்குகிறது; ஞானவொளியால் மெய்யுணர்வு தோன்றுகிறது;
அது கொண்டு பரம் பொருளைக் காண்கின்றனர்; அக்காட்சியில் அதுவே நான் ( அகம் பிரமம் ) என்னும்
கீழ்மையறிவு ஒழிகிறது; அது நீ ஆகியவழி அவ்வுணர்வுக்கு ஏதுவாகிய தற்போத முதலியன கழிகின்ற
மோனநிலை எய்துகிறது. அங்கே பரமானந்த அனுபவம் உண்டாகிறது; அது எல்லா ஞானங்களையும் முற்ற
உணர்ந்தவரால் காணப்படினும் “கண்டும் கண்டிலேம்” என்று சொல்லும் உயர்ந்த ஞானானுபவமாகும்.
2120. மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி
மீதேறித் தெளிந்திச்சை விடுதல் ஏறி
அஞ்ஞான மற்றபடி ஏறி உண்மை
அறிந்தபடி நிலைஏறி அதுநான் என்னும்
கைஞ்ஞானங் கழன்றேறி மற்ற எல்லாம்
கடந்தேறி மவுனயியற் கதியில் ஏறி
எஞ்ஞானம் அறத்தெளிந்தோர் கண்டுங் காணேம்
என்கின்ற அநுபவமே இன்பத் தேவே.
உரை: மெய்ஞ்ஞான விருப்புற்று, கேள்வி பெற்று, இச்சை விட்டு, அஞ்ஞானம் கடந்து, உண்மையறிந்து, “அது நான்” என்னும் கைந்நிலை கழன்று, மவுனநிலை அடைந்த தெளிவுடையோர் “கண்டும் காணேம்” என்கின்ற அனுபவமாய், இன்பமாய் இருப்பவன் மகாதேவன். எ.று.
உலகில் வாழ்வாங்கு வாழ்பவர்க்கு, அவ்வாழ்வு மெய்யுணர்வுப் பேற்றின்கண் ஆர்வம் உண்டுபண்ணும் என்பது தொல்காப்பியர் திருவள்ளுவர் முதலாயினார் கண்ட உண்மை, அறம் பொருள் இன்பம் கூறும் நூல்வழி நின்று தேறிய மனத்தார்க்கு வீடுபேற்றின்கண் ஆர்வம் தோன்றி அவரை மெய்ஞானநெறியிற் செலுத்துவதால் “மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறி” என்றார். வையக வாழ்க்கையினின்றும் மேலேறிச் செல்வார்க்கு முதற்படி யாதலால் விருப்பமாகிய படியில் ஏறி என்று குறிப்புருவக வாய்பாட்டில் மொழிகின்றார். அவ்விருப்பம் மெய்ஞ்ஞானம் உரைக்கும் ஞானாசிரியன்பாற் கொண்டு நிறுத்துவதால், “கேள்விமீதேறி” என்கிறார். கேள்வி என்றது, ஞானநூற்கேள்வி,. “தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்” (திருமந். 139) என்பர் திருமூலர். ஞானக் கேள்வி பயந்த தெளிவு பொறிபுலன்கள்மேற் செல்கின்ற ஆசையை அறுத்தலால் ஆசை அற்ற நிலையை இச்சைவிடுதல் என்ற படியாக உரைத்தார். இச்சை அறிவை மயக்கி அஞ்ஞானம் காட்டுவதாகலின், இச்சை, ஒழிந்த நிலை அஞ்ஞானம் அகன்ற நிலையாவதுபற்றி, “அஞ்ஞானம் அற்றபடி” என்று உரைக்கின்றார். அஞ்ஞானம் அகலத் தோன்றுவது உண்மையறிவு; “அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே” என்று திருவாதவூரடிகள் தெரிவிப்பது காண்க. உண்மையறிவு தோன்றி ஒளிரும் நிலையை, “உண்மை யறிந்த படிநிலை” என்று கூறுகின்றார். அங்கே காணப்படும் பரம்பொருளின் பெருமையையும் தனது சிறுமையையும் நோக்கி, அது நான் என்று கருதுவதன் கீழ்மையை நினைந்து, அங்ஙனம் கூறும் ஞானத்தை இகழ்ந்து நீங்குவதும் ஒருபடி நிலையாதல் கண்டு, “அது நான் என்னும் கைஞ்ஞானம் கழன்று ஏறி” என வுரைக்கின்றார். கை, சிறுமை. இக்கைஞ்ஞானத்தைத் தோற்றுவிப்பது தற்போதம் முதலிய குற்ற நெறிகளென எடுந்துரைக்க நா எழாமையால், “மற்ற எல்லாம்” என்று மொழிகின்றார். கைஞ்ஞானத்தையும், அது சார்பாகத் தோன்றும் பசுஞானவகைகளையும் கடந்த நிலை பேசா மௌனநிலை என்பது விளங்க, “மௌன இயற்கதியில் ஏறி” என்கிறார். எல்லா அஞ்ஞான விகற்பங்களும் அகன்ற போது, “வாசகவாச்சிய ஞானம்” மறைந்தொழிய, மௌனநிலை தானே இயல்பாக எய்துவது பற்றி, “இயற்கதி” என்று சிறப்பிக்கின்றார். பசுபாச ஞானங்களாகிய எல்லாவகை ஞானங்களையும் முற்றக் கற்றுக் “கற்பனவும் இனி அமையும்” என்ற வாதவூரடிகள், “தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்,
கண்டும் கண்டிலேன்” என்று உரைக்கின்றாராதலால், அவரது ஞானானுபவத்தைக் கருத்திற்கொண்டு, “கண்டும் காணோம் என்கின்ற அனுபவம்” என்று கூறுகின்றார். அதனை நமக்கு உரைத்தல் நன்று என்றும் அருளாளராதலால், வள்ளலார் அந்த அனுபவம் இன்ப மயமானது என்று ஒரு சொல்லால் அறிவிக்கின்றார். (50)
|